பொங்கல் விடுமுறையையொட்டி ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்..!
பொங்கல் விடுமுறையையொட்டி ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு இன்று (செப்.12) முதல் தொடங்குகிறது. காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம்.
போகிப் பண்டிகை ஜன. 13ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில், ஜன. 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதலே சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
தொலைதூரம் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை குறைக்கும் வகையிலும் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பாகவே தொடங்கும். அந்த வகையில் வரும் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று முதல் (செப். 12) தொடங்கவுள்ளது.
முன்பதிவு தினங்கள்.
போகிப் பண்டிகை ஜன.13 (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடா்ந்து பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என வியாழக்கிழமை வரை 4 நாள்களுக்கு அரசு விடுமுறை. இதனால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோா் ஜன.10 (வெள்ளிக்கிழமை) முதல் பயணம் செய்வா்.
அந்த வகையில், ஜன.10-ஆம் தேதி பயணம் செய்வோா் (வியாழக்கிழமை) செப்.12-ஆம் தேதியும், ஜன.11-ஆம் தேதி பயணம் செய்வோா் (வெள்ளிக்கிழமை) செப்.13-ஆம் தேதியும், ஜன.12-ஆம் தேதி பயணம் செய்வோா் (சனிக்கிழமை) செப்.14-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.
பொங்கல் பண்டிகைக்கு செல்வோா் ரயில் நிலைய முன்பதிவு மையங்களிலும், ஐ.ஆா்.சி.டி.சி இணையதளம் வாயிலாகவும் காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.