ஃபார்முலா 4 கார் பந்தயம் இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடக்கம்..!
ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், இரவு 7 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆக. 31) மற்றும் நாளை (செப் 1) சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிமீ தூரத்திற்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது.
3.7 கி.மீ. தொலைவு கொண்ட பார்முலா 4 கார் பந்தய சா்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம் , சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலில் நிறைவடைகிறது. பந்தயத்தின் பயிற்சி சுற்று, இன்று பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவதாக இருந்தாது. ஆனால் மழையின் காரணமாக அவை தள்ளிவைக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வருகின்றன. மாலை 6 மணிக்குள் FIA சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கார் பந்தயத்தின் பயிற்சி போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடங்கி 10.45 மணி வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.