தமிழ்நாட்டிற்கான 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்..!

 தமிழ்நாட்டிற்கான 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்..!

தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ஏற்கெனவே 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது மேலும் கூடுதலாக, எழும்பூர்-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் வழித்தடத்தில் 2 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த ரயில்கள் செப்டம்பர் 2ம் தேதி முதல் வழக்கமான சேவையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை, சென்னை சென்ட்ரல் – விஜயவாடா, எழும்பூர் – திருநெல்வேலி, கோவை – பெங்களூரு என மொத்தம் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுரை – பெங்களூரு மற்றும் எழும்பூா்- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில்கள் ஆகஸ்ட் – 31ம் தேதி முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ரயில் சேவைகளை தொடங்குவதற்கான முறையான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் மீரட் – லக்னௌ ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி டெல்லியிலிருந்து இன்று நண்பகல் 12.30 மணிக்கு காணொலி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார். சென்னை சென்ட்ரலிலிருந்து ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும்

நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோா் எழும்பூர் – நாகர்கோவில் இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளனர். இந்த ரயில் தொடக்க நாளில் மட்டுமே சென்ட்ரலிலிருந்து இயக்கப்படும். மற்ற நாட்களில் எழும்பூரிலிருந்து இயக்கப்படும். மதுரையிலிருந்து மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் வீ.சோமண்ணா மதுரை – பெங்களூரு இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக முன்பதிவுகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

கட்டண விவரம்: எழும்பூரிலிருந்து நாகர்கோவில் செல்ல இருக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பெட்டியில் பயணிக்க (ஏசி சேர் கார்) நபர் ஒருவருக்கு ரூ.1,760, சொகுசு பெட்டியில் பயணிக்க (எக்ஸிகியூட்டிவ் சேர் கார்) நபர் ஒருவருக்கு ரூ.3,240 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக ஏசி சேர் கார் இருக்கைக்கு ரூ.1,735, எக்ஸிகியூட்டிவ் சேர் கார் இருக்கைக்கு ரூ.3,220 கட்டணம் நிர்ணயக்கப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து பெங்களூரு செல்ல ஏசி சேர் கார் இருக்கைக்கு ரூ.1,575, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.2,865 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக ஏசி சேர் கார் இருக்கைக்கு ரூ.1,740, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.3,060 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தில் உணவு மற்றும் சிற்றுண்டிக்கான கட்டணங்களும் உள்ளடங்கும்.

நேர அட்டவணை : எழும்பூர்- நாகர்கோவில் ரயில் காலை 5 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக இந்த ரயில் (எண் 20628) நாகர்கோவிலிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும். மதுரை – பெங்களூரு ரயில் (எண் 20671) காலை 5.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக இந்த ரயில் (எண் 20672) பெங்களூரிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் இரு மார்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இயக்கப்படும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...