நீயெனதின்னுயிர் – 11 – ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 11 – ஷெண்பா
11
அதிகாலை ஆதவனின் பொன்னிறக் கதிர்கள் ஜன்னலருகில் நின்றிருந்தவளின் மீது பட்டு, இளமஞ்சள் நிற அழகியைப் பொன்னிறத்தில் உருமாற்ற, பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. முகத்திற்கு நேராக தனது வலது கரத்தை உயர்த்திப் பார்த்தவளின் கன்னங்கள், செம்மை நிறத்தைப் பிரதிபலித்தது. உள்ளம், முன் இரவில் அவனது ஸ்பரிசத்தால் ஏற்பட்ட அதிர்வை நினைத்து மதிமயங்க, முகமோ கனிவுடன் இளகியது.
அவனது கையணைப்பில் இருந்த கரத்தை, மறுகையால் மெல்லத் தடவிக் கொடுத்தாள். இறக்கை முளைத்த காதல் மனம், அடங்காமல் கட்டவிழத் துவங்கிய நேரத்தில், கதவைத் தட்டும் ஓசை கேட்டு, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
“ஹலோ!” என்று தலையை மட்டும் உள்ளே நீட்டி, அவளைப் பார்த்துப் புன்னகைத்தவனைக் கண்டதும், அவளது இதழ்களும் மென்னகையில் மலர்ந்தன.
“குட் மார்னிங்!” என்று உற்சாகத்துடன் சொன்ன விக்ரமிடம் பதிலுக்கு, “குட் மார்னிங்!” என்று மென் குரலில் பகன்றாள்.
“ஸ்லீப்பிங் பியூட்டியைப் பார்க்கலாம்னு அடிச்சிப் பிடிச்சி ஓடிவந்தேன்… இங்கே என்னடான்னா… பளிச்சுன்னு, பிரெஷ்ஷா நிக்கிறீங்களே மேடம்!” என்றவன், போலியாக பெருமூச்சு விட்டான்.
“மணி ஏழரை ஆகுது. இதுவரைக்கும் நான் தூங்கிட்டு இருப்பேன்னு நீங்க நினைத்தால், நான் என்ன செய்யமுடியும்?” என்றாள் புன்னகையுடன்.
“அதானே! நீ என்ன பண்ண முடியும்? நைட் நல்லா தூங்கின தானே… டிஸ்டர்பன்ஸ் எதுவும் இல்லையே?” என்று பரிவுடன் கேட்டான்.
“இ..ல்லையே… நல்லா தூங்கினேனே…” என்று திக்கித் திணறியவள், விக்ரமின் பார்வையிலிருந்து தனது விழிகளை விலக்கிக் கொண்டாள்.
இருவரின் பேச்சையும் கேட்டபடி அறைக்குள் நுழைந்த சீமா, அவளது கள்ளத்தனத்தைக் காட்டிக் கொடுப்பது போல, அலைபாய்ந்த அவளது விழிகளைக் கண்டு கொண்டாள். ரகசியப் புன்னகையொன்றை உதிர்த்தபடி, வைஷாலியிடம் நலம் விசாரித்தவள், மேற்கொண்டு அவர்கள் இருவரையும் பேச விட்டுவிட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சாதாரணமாக அவளிடம் பேசிக்கொண்டிருந்த விக்ரம் மெல்ல, “நேத்து பைக்கில் வந்தவனை, உனக்கு முன்னமே தெரியுமா? ஐ மீன்… இதுக்கு முன்னமே, அவனால் உனக்கு ஏதோ பிரச்சனை இருந்ததா?” என்று கேட்டான்.
“இல்ல… தெரியாது” என்றாள்.
அவளை யோசனையுடன் பார்த்தவன், “அவங்களைத் திரும்பப் பார்த்தா, அடையாளம் தெரியுமா?” எனக் கேட்டான்.
“ம்ச்சு, இல்லை’ என்பது போல உதட்டைச் சுழித்தவள், “அங்கே கொஞ்சம் மங்கலான வெளிச்சம் இருந்ததால, முகம் சரியா தெரியலை” என்றதும் விக்ரமின் முகம் லேசாக இறுகியது.
“ஏன் சீமாக்கா! நீங்களும் அங்கே தானே இருந்தீங்க, வெளிச்சம் சரியாக இல்லைதானே…?” என்று அவசரமாகக் கேட்டதும், சீமா அவளை ஆராயும் பார்வை பார்த்தாள்.
இருவரது முகமாற்றத்தையும் கண்ணுற்ற வைஷாலி, பேச்சை திசை மாற்ற முயன்றாள்.
“சரி, ஹாஸ்பிட்டல்ல இருக்கும் பேஷண்ட்டைப் பார்க்க வர்றதுக்கு, இத்தனை ஸ்மார்ட்டா டிரெஸ் பண்ணிட்டு வரணுமா என்ன சீமாக்கா?” என்று விக்ரமை ஓரப்பார்வை பார்த்தபடி, அவளிடம் வினவினாள்.
அவளோ பதில் சொல்லாமல் முறுவலிக்க, “மேடம்! பத்து மணிக்கு எனக்கு பிளைட். பிசினஸ் விஷயமா ஜெர்மனிக்குப் போறேன்” என்றான் விக்ரம்.
“ஓ! அப்படியா… நீங்க போகும் வேலை வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.”
“தேங்க்யூ!” என்று முறுவலித்தான்.
வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த காலை உணவை, மூவருமாக சேர்ந்து உண்டனர். அந்நேரம் விக்ரமின் கைப்பேசியில் அழைப்பு வர, பேசிமுடித்தவன் கையைக் கழுவிக்கொண்டு வந்தான்.
“ஓகே வைஷாலி! உடம்பைப் பார்த்துக்கோ. எக்ஸாம்ஸை நல்லா எழுது. ஏதாவது ஹெல்ப் வேணும்னா, சீமாவிடம் தயங்காமக் கேளு. ராகவ் எனக்காக பார்க்கிங்கில் வெயிட் பண்றான். நான் கிளம்பறேன்” என்றான்.
“ம்,டேக் கேர்!” என்று புன்னகையுடன் அவனை வழியனுப்பி வைத்தாள் வைஷாலி.
சற்றுத் தயங்கி நின்றவன், “ஓகே” என்று சொல்லிவிட்டு கதவை நோக்கி நடந்தான். “நான் ஏர்போர்ட் போய்ச் சேர்ந்ததும், காரை இங்கே அனுப்பி வைக்கிறேன். நீ யூஸ் பண்ணிக்க” என்று சீமாவிடம் பேசியபடி அறையிலிருந்து வெளியேறினான்.
அவனை வழியனுப்பி வைத்துவிட்டுத் திரும்பி வந்த சீமா, வைஷாலியிடம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தாலும், அவளது கவனமெல்லாம் வைஷாலி அவசரமாகச் சொன்ன பதிலிலேயே சுற்றி வந்தது.
‘இவள் தங்களிடம் எதையோ மறைக்கிறாள். ஆனால் ஏன்?’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
ஏர்போர்ட்டிலிருந்து விக்ரமின் கார் திரும்பி வந்ததும், ஹாஸ்டல் வரை சென்று அவளுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு, சீக்கிரம் திரும்பி வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் சீமா.
தனித்திருந்த வைஷாலிக்கு காலையிலிருந்த உற்சாக மனநிலை முற்றிலுமாகச் தொலைந்திருந்தது. தான் சொன்ன பதிலை சீமா நம்பவில்லை என்பதை, அவளது பார்வையிலிருந்தே புரிந்து கொண்டிருந்தாள். இப்போது அவள் அருகில் இல்லாதிருப்பதே நிம்மதியாக இருப்பது போல் தோன்றியது.
யோசனையுடன் அமர்ந்திருந்தவள், அறைக் கதவைத் தட்டிவிட்டு குமிழைத் திருகும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். உள்ளே வந்தவரைக் கண்டதும், “அப்பா!” என்ற கூக்குரலுடன் கட்டிலிலிருந்து இறங்கினாள்.
“வைஷும்மா! எப்படிடா கண்ணா இருக்க?” என்று தோளில் சாய்ந்துகொண்ட மகளின் தலையை, வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார் சங்கரன்.
“ம், நல்லாயிருக்கேன்ப்பா. நீங்க எப்படி இருக்கீங்க? சொல்லாம கொள்ளாம வந்திருக்கீங்க… அஃபிஷியலா வந்திருக்கீங்களா?”
“ஹாஸ்பிட்டல்ல இருக்கும் என் மகள் மேல, எனக்கும் அக்கறை இருக்கும்மா” என்றார்  கவலையுடன்.
“அப்பா! ப்ளீஸ்… நீங்க வருத்தப்படுவீங்கன்னு எனக்குத் தெரியாதா? அதனால் தான் நான் உங்களுக்குப் ஃபோன் செய்யல” என்று கவலையுடன் சொன்னவள், “இந்த முந்திரிக் கொட்டை ஜோதி தானே உங்களிடம் போட்டுக் கொடுத்தா?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.
“யார் சொன்னா என்னடா? மனசு கேட்காமல் சொல்லிட்டாங்க” என்றார்.
“ஹும்!” என்று சலுகையுடன் தந்தையிடம் செல்லம் கொஞ்சியவள், “சரி போகட்டும். நீங்க வந்தது அம்மாவுக்குத் தெரியுமா?” என்றாள், தந்தையின் அருகில் அமர்ந்தபடி.
“ம்ஹும்! உன் அம்மாவுக்குத் தெரியாது” என்றார் ரகசிய குரலில்.
கிளுக்கென சிரித்துக் கொண்டவள், “ம்ம், தெரிஞ்சி ருந்தா, நான் இத்தனை நேரம் ஹாயா இப்படி உங்ககிட்ட கதையடிக்க முடியுமா? நீங்க அறைக்குள்ள வர்றதுக்கு முன்னமே, ஏண்டி! உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கேன்னு கேட்கிற அம்மாவோட குரல் தானே முதல்ல வந்திருக்கும்? என் மண்டை உடைஞ்சது போதாதுன்னு, திட்டு வாங்கியே என் காதுல ரத்தமே வந்திருக்கும்” என்று கேலியாகச் சொன்னாள்.
மகளைச் சற்றுக் கவலையுடன் பார்த்தார் சங்கரன். “உன் அம்மா கொஞ்சம் கத்தினாலும், அதுல பாசம் இருக்குடா. எங்களோட ஒரே செல்லப் பொண்ணு நீ தானே? உன்னை இங்கே விட்டுட்டு நாங்க தவிக்கும் தவிப்பை உன்னிடம் சொல்லலைனாலும், உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்” என்றார்.
தந்தையின் முகத்தைப் பார்த்தாள்.தொண்டையைச் செருமிக் கொண்டவள், “ராகேஷ் தான் எல்லாத்துக்கும் காரணம்” என்றாள்.
“யாரு? உன்னோட ஸ்கூல் சீனியரா?”
“ஆமாம்ப்பா… காலேஜ் ஹாஸ்டல்ல எங்க ரூமைப் பார்த்துக் கல்லெறியறது, காலேஜ் போனில் ரொம்பச் சீப்பா பேசறதுன்னு, இவனோட அட்டகாசம் தாங்க முடியலை. இதையெல்லாம் காலேஜில் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. அதனால் விக்ரம் சாரை நேரடியாகப் பார்த்து, நடந்த பிரச்சனைகளைச் சொன்னேன்.
அவரும் உடனே நடவடிக்கை எடுத்தார். அதில் போலீஸ் இவனைக் கவனிச்ச கவனிப்பில், கொஞ்ச நாள் வாலைச் சுருட்டிட்டு இருந்தான். இப்போ உடம்பு கொஞ்சம் தேறியதும், என்னைப் பழிவாங்க வந்திருக்கான்” என்றவளின் முகம் கோபத்தில் ஜொலித்தது.
“எதுக்குடா கண்ணா உனக்கு இந்த வேலை யெல்லாம்? காலேஜுக்கு நல்லது செய்யறேன்னு போய், இப்படிப் பிரச்சனையை இழுத்துட்டு வந்திருக்க! உன்னை இங்கே ஹாஸ்டல்ல தனியா விட, உன் அம்மாவிடம் நான் எத்தனைத் தூரம் பேசி, சம்மதம் வாங்கியிருக்கேன். நீ இப்படிச் சீர்திருத்தம் பண்றேன்னு பிரச்சனையில் சிக்கிக்கவா…?” என்று கவலையுடன் கேட்டார்.
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுப்பா… இன்னும் இருபது நாள்தானே? அப்புறம் எக்ஸாம்ஸ் முடிஞ்சிடும். அதுக்கப்புறம், உங்க செல்லப் பொண்ணு உங்க பக்கத்திலேயே இருக்கப்போறேன்.
அதனால்தான் விக்ரம், அவனைத் தெரியுமான்னு கேட்ட போது கூட, தெரியாதுன்னு சொல்லிட்டேன். அவனும் இதுக்கு மேலே என்னிடம் வாலாட்ட வரமாட்டான்னு நம்பறேன்” என்ற மகளைப் பார்த்தார் சங்கரன்.
“சொல்ல எதுவும் இல்லம்மா. உன்னைப் பார்த்துக்க உனக்குத் தெரியும். இருந்தாலும்… அப்பாவோட கடமை… உனக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன்…” இதற்கு மேல் உன் புத்திசாலித்தனம் என்பது போல, பேச்சை முடித்தார் சங்கரன்.
“தேங்க்யூப்பா…” என்றவள் அவருடன் வளவளத்துக் கொண்டிருந்தாள். சீமா திரும்பி வந்ததும், அவளைத் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
சீமாவிற்கு நன்றி தெரிவித்தவர், அன்றே தான் கிளம்ப இருப்பதால், ஜோதியின் வீட்டிற்குச் சென்று, அவர்களைப் பார்த்துவிட்டுக் கிளம்புவதாகச் சொல்லி விடைபெற்றார்.
(தொடரும்)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...