உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 10 – சுதா ரவி

 உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 10 – சுதா ரவி
நிமிட நேரத்திற்குள் நடந்த நிகழ்வில் தான் கண்டது கனவோ என்ற எண்ணமே தோன்றியது. நின்ற இடத்திலேயே பிரமித்து போய் நிற்க, எதற்கோ வெளியே வந்த ராஜி மகள் பிரமை பிடித்தார் போல் வாயிலிலேயே நிற்பதை பார்த்து அவளை உள்ளே அழைத்து சென்றார்.
சிறிது நேரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் அவன் எப்படி சரியாக திரும்பி பார்த்து கண்ணை சிமிட்டினான் என்று குழம்பிக் கொண்டிருந்தாள்.
மெல்ல மெல்ல அவன் மனம் அவன் புறம் மயங்கி நிற்பதை நினைத்து ஒரு புறம் மகிழ்ந்தாலும் மற்றொரு புறம் பயம் வந்து ஆட்கொண்டது. என்ன தான் விஸ்வாவின் அம்மா அவனை பற்றி புகழ்ந்திருந்தாலும் பெண்ணுக்கே உள்ள குணம் அவளை தயங்க செய்தது.
உத்ரா அவன் நினைவில் தன்னிலை மறந்து  ஒரு பொம்மை போல சென்று முகம் கை கழுவி கல்லூரிக்கு சென்று வந்த உடையை மாற்றி விட்டு உணவு மேஜையில் வந்து அமர்ந்தாள்……ராஜி அவளுக்கு ஒரு தட்டில் அசோகாவும் வெங்காய பஜ்ஜியும் எடுத்து வைத்தார். அவள் சாப்பிடும் வரை பொறுமையாக இருந்தவர் ஒரு டப்பாவை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்து….”அம்மு அசோகாவை கொண்டு கமலாத்தை கிட்ட குடுத்திட்டு வாயேன். விஸ்வா அடிச்சு கிட்டு சாப்பிடுவான்” என்றார்.
முதலில் அவர் சொன்னதை கேட்டு டப்பாவை வாங்கி கொண்டு எழுந்தவள் அங்கு அவன் இருப்பானே என்று தயங்கினாள். அவளின் தயக்கத்தை பார்த்து அவள் சோர்வாக இருப்பதாக எண்ணி ”உனக்கு முடியலேனா விடு அம்மு நானே போய் குடுத்திட்டு வரேன்” என்று சொல்லி டப்பாவை வாங்க கையை நீட்டினார்.
அதை கேட்டு அவனை நன்றாக பார்க்கும் வாய்ப்பை ஏன் கை நழுவ விட வேண்டும் என்று எண்ணி ”இல்லம்மா நானே குடுத்திட்டு வரேன்” என்று சொல்லி வேக நடையுடன் அடுத்த வீட்டின் வாசலுக்கு வந்தாள். வாசலில் அவன் கார் நிற்பதை பார்த்ததுமே அவன் போகவில்லை வீட்டிற்குள் தான் இருக்கிறான் என்று உணர்ந்தவுடன் கால்களில் ஒரு தடுமாற்றம் வந்தது.
இருதயம் வேகமாக துடிக்க மெல்ல அடியெடுத்து வீட்டின் வரவேற்பறைக்கு வந்தாள். அங்கு விஸ்வாவின் அப்பாவின் முன் அவன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். மிகவும் கட்டுப்பாடோடு அவன் புறம் கண்களை திருப்பாமல் விஸ்வாவின் அப்பாவின் புறம் மட்டுமே பார்த்து..” அத்தை எங்கே மாமா உள்ளே இருக்காங்களா?” என்றாள்.
அவள் அவன் புறம் திரும்பாவிட்டாலும் அவனின் பார்வை அவளை சுற்றி வருவதை உணர்ந்து கொண்டாள். அதனால் இயல்பாக இருக்க முடியாமல் ஒரு வித தவிப்புடனே நின்றாள்.” அடடே அம்முவா? என்ன அதிசயம் இது காலேஜ் போன பிறகு இந்த பக்கம் காத்து வீசுது?”என்றார் விஸ்வாவின் அப்பா.
அவனது பார்வை தன்னை உரசி செல்வதை கண்டு கொண்டதனால் உடலில் ஒரு வித சிலிர்ப்பு எழுந்தது. அதோடு அவன் முன்னிலையில் அம்மு என்று வேறு விஸ்வாவின் அப்பா அழைத்ததில் வெட்கி முகம் சிவந்து நிமிர்ந்து பார்க்க மனமில்லாமல் கையில் இருந்த டப்பாவை பார்த்த வண்ணம் நின்றாள்.
“ முன்னே இருந்த வாயாடி அம்முவா இது? என்ன ஒரு மாற்றம்? ஆஹா காலேஜ் போய் இவ்வளவு அடக்கமான பொண்ணா போயிட்டாளே?”என்று கேலி செய்தார் விஸ்வாவின் அப்பா.
அதை கேட்டு வெட்கப்பட்டு..” போங்க மாமா” என்று சொல்லி விட்டு அங்கிருந்து தட்டு தடுமாறி ஓடினாள். ஓடும் போது அவன் தன்னை பார்த்து குறும்புடன் சிரிப்பது போல் தோன்றியது.
அசோகாவை கொடுத்து விட்டு சிறிது நேரம் கமலாத்தையிடம் கதை பேசி விட்டு வெளியில் வந்தவள் அவன் போய் இருப்பான் என்கிற நம்பிக்கையில் லேசாக குதித்துக் கொண்டே வந்தவள், எதிரே இருந்த உருவத்தின் மீது மோதப் போகும் நேரம் தன்னை சமாளித்துக் கொண்டு நின்று அதிர்ச்சியுடன் யாரென்று பார்த்தாள். அவன் தான் நின்று  கொண்டிருந்தான். எதிர்பாராமல் அவனை சந்தித்து விட்டதால் நேருக்கு நேர் அவன் கண்கள் தன் முகத்தை ஆர்வத்துடன் பார்ப்பதை கண்டு நெஞ்சில் படபடப்பு ஏறியது. சட்டென்று தன்னை சமாளித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக தன் வீடு நோக்கி ஓடினாள்.வீட்டிற்கு சென்ற பிறகும் பரிதவிப்பு  குறையாமல் இருந்தது. சிறிது நேரம் தவிப்பை அடக்குவதற்காக தன் அறைக்குள் சென்று பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள்.
மழை வருவது போல் இருந்ததால் மாடியில் இருந்த துணிகளை எடுத்து வருமாறு ராஜி  வந்து சொல்ல அதை காதில் வாங்காமல் அமர்ந்திருந்தாள்.  சிறிது நேரம் கத்தி பார்த்தவர் வேகமாக வந்து ஓங்கி முதுகில் ஒன்று வைத்து போய் துணியை எடுத்து வருமாறு சொன்னார். முதுகை தடவியபடியே படி ஏறியவள் அங்கு மழை மெல்லிய தூறலாக போடவும், காற்றினில் மண்ணின் வாடை வீசவும், சிலுசிலுவென்ற காற்று அவளின்உற்சாகத்தை தூண்ட எல்லாவற்றையும் மறந்து கைகளால் மழை துளியை பிடித்தபடி….” சின்ன சின்ன ஆசை…” பாடிக் கொண்டே ஆடத் தொடங்கினாள்.
 மழை சற்று வலுக்க துணியை எடுக்க வேண்டும் என்ற நியாபகம் அப்போது தான் வர அவசரம் அவசரமாக துணியை எடுத்துக் கொண்டு மாடிப்படியருகே செல்லும் நேரம் தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்ற உடனே அடுத்த வீட்டு மாடியை பார்த்தாள். அங்கு அவன் மழையில் நனைந்து கொண்டே இரு கைகளையும் கட்டியபடி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து பயந்து போய் ஒளிந்து கொண்டாள். நெஞ்சமோ முரசு வாசிக்க பதட்டத்துடன் அவன் போய் விட்டானா என்று மெல்ல தலையை நீட்டி எட்டி பார்த்தாள். அங்கு அவனை காணவில்லை என்று அறிந்ததும் மனதிற்குள் சற்று ஏமாற்றத்துடன் படி இறங்க நினைக்கும் நேரம் கண் மூடி கண் திறப்பதற்குள் அவன் எங்கிருந்து வந்தான் என்று உணரும் முன்பே அவன் பிடியில் இருந்தாள். அவன் வந்ததில் அதிர்ந்து போய் நின்றிருக்க…
அவள் காதருகே குனிந்து” என்னை தான் தேடுனியா அம்மு” என்றான்.
அவனிடம் பேசியது இல்லை அவனை நேரடியாக தெரியாது. விஸ்வாவின் அம்மாவின் மூலமே அவனை பற்றி அறிந்து கொண்டு இருக்கிறோம் ஆனாலும் அவன்பால் மனம் இப்படி சாய்கிறதே. அவனும் தன்னை நன்கு உணர்ந்தவன் போல் மிக நெருக்கமாக இப்படி அழைக்கிறானே என்று எண்ணிநெஞ்சம் தவிக்க அவன் முகம் பார்க்காமல்” என்னை விடுங்க நான் போகணும்” என்றாள் மெல்லிய குரலில்.
அவளின் முகத்தை ஆராய்ந்து கொண்டே” நானும் போகணும்னு நினைக்கிறேன் அம்மு…ஆனா உன்னை பார்த்த அந்த நிமிஷத்துலே இருந்து உன் கிட்ட சிக்கிகிட்டேன்.”
அவன் பேசும்போது அவனின் நெருக்கமும் மூச்சுக் காற்றும் அவளை பாடாய் படுத்த………தன் மனதில் இருந்த குழப்பத்தை அப்படியே அவனிடத்தில் பகிர்ந்து கொண்டாள் அச்சிறு பெண்…….” எனக்கு பயமா இருக்கு.உங்க பெயர் தெரியாது ..நீங்க யாருன்னு சரியா தெரியாது….நல்லவரா, கெட்டவரான்னு கூட தெரியாது ஆனா உங்களை பார்த்ததில் இருந்து என் மனசு உங்களையே சுத்தி வருது…இது தப்புன்னு மனசுக்கு தோணுது….அம்மா அப்பாவுக்கு செய்யுற துரோகம்ன்னு தெரியுது ஆனா என் மனசு நீங்க வேணும்ன்னு சொல்லுது”என்றாள் கண்களில் கலக்கத்துடன்.
அவள் தன் உணர்வுகளை சொன்ன விதம் அவன் மனதில் ஆழமாய் பதிய….ஒரு சின்ன பெண்ணின் மனதில் தேவை இல்லாமல் குழப்பங்களை ஏற்படுத்தி அவள் மனதை பாதிக்கிறோமே என்று எண்ணி……மெல்ல அவளிடம் இருந்து நகர்ந்து………அவள் கன்னத்தில் தட்டிக் கொடுத்து…..” தேவை இல்லாம குழப்பிக்காதே உன் மனசை.என்னைக்கு இருந்தாலும் நீ தான் என் மனைவின்னு என் மனசுல பிக்ஸ் பண்ணிட்டேன்…..நீ உலகத்தோட எந்த மூளைக்கு போனாலும் நான் உன்னை தேடி வருவேன்…உனக்கு இன்னும் வயசு இருக்கு இப்போ உன் எதிர்காலத்தை மட்டும் நினை”….என்று சொல்லி நெத்தியில் அழுத்தமாக இதழ் பதித்து விட்டு விறுவிறுவென்று சென்று விட்டான்.
அவன் திடீரென்று விட்டு விலகியதும் அதுவரை அவன் அருகில் இருந்ததால் எழுந்த தவிப்பு அடங்கி நிதானத்திற்கு வந்தாள். ‘என்ன இது அவன் பெயர் கூட சொல்லாமல் காதலை சொல்லிப் போகும் அவனை என்ன செய்வது என்று செல்லமாக கடிந்து கொண்டு கீழிறங்கினாள்.’ அதிலும் அவனது பிடிவாதத்தை நினைத்து சிரித்துக் கொண்டே இறங்கியவளை பார்த்த ராஜி “மித்து கொஞ்சம் வேப்பில்லையை பறிச்சிட்டு வாயேன்…சாயங்காலத்துலே
இருந்து இங்கே ஒன்னு பேய் பிடிச்ச மாதிரி இருக்கு……..பேயோட்டனும் சீக்கிரம் ஓடி வா….”
அவர் அப்படி சொன்னதும் திருதிருவென்று முழித்துக் கொண்டு நின்ற அக்காவை இழுத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்த மித்ரா “என்னக்கா நடக்குது………துணி எடுக்க போன உன்னை காணும் சொல்லி அம்மா என்னை மேலே அனுப்பினாங்க……நல்ல வேளை நான் வந்தேன் அம்மா வந்திருந்தா என்ன ஆகி இருக்கும்.”
அவள் சொன்னதில் சற்று அதிர்ச்சியாகி” எனக்கு தெரியாது மித்து அந்த பீகே ஏறி குதிச்சு நம்ம மாடிக்கு வருவார் என்று எதிர்பார்க்கவே இல்லை.”
“பீகேவா அது என்ன பேரு புதுசா இருக்கே. இதுவரைக்கும் இப்படி ஒரு பேரை கேள்வி பட்டதே இல்லையே. ஆமாம் அவர் யாருக்கா? இந்த அளவுக்கு நீ பழகுறே. நீ என்னவோ தப்பு பண்றேன்னு தோனுதுக்கா.”
அவளை தோளில் ரெண்டு தட்டு தட்டிவிட்டு” அவர் எங்கே பேரை சொன்னார்..என் பேரை மட்டும் நல்லா அம்முன்னு கூப்பிட்டார். அதுக்கு தான் என்ன பேர் வைக்கிறதுன்னு யோசனை பண்ணி பக்கத்து வீட்டு கள்ளன்னு( பீகே)வச்சிட்டேன்.”
“ஹாஹா அக்கா செம பேரு…….அது சரி என்னக்கா ரெண்டு தடவை கூட பார்க்கல அவரை பத்தி என்ன தெரியும் நீ பாட்டுக்கு இந்த அளவுக்கு”என்று இழுத்தாள்.
மித்ரா சொன்னதை கேட்டு முகம் சிவந்து” கமலாத்தை அவரை பத்தி ரொம்ப நல்ல விதமா சொன்னாங்க….என்னன்னு தெரியல மித்து ஆனா அவர் நல்லவர்ன்னு மனசுக்கு தோணுச்சு………இப்போ முழுக்க முழுக்க அந்த நம்பிக்கையும் வந்துடுச்சு அவர் சொன்னதை கேட்டு”என்றாள் உத்ரா.
“அப்படி என்னக்கா சொன்னார்?”
“அவர் மனசிலே நான் தான் அவர் மனைவின்னு நிச்சயம் பண்ணிட்டேன்…ஆனா நான் சின்ன பெண்ணா இருக்கிறதால இப்போ மனசை அலைப்பாய விட வேண்டாம்ன்னு சொல்லிட்டு போனார்.”
அதை கேட்டு தலையை வேகமாக ஆட்டியவள்”அடடா……அது சரி அதை கேட்டு நீ அவரை நம்பிட்டே இல்லையா?”என்று கேலியாக கேட்டாள் மித்ரா.
அவளின் தொடர் கேள்வியில் கடுப்பாகி ஏற்கனவே மனம் நிறைய குழப்பங்களுடன் இருந்தவள் எரிச்சலுடன்” நீ என்ன கேள்வியின் நாயகி மகளா?இப்படி கேள்வி கேட்குறே”என்று கடுப்பாக கேட்டாள் உத்ரா.
உத்ராவின் நிலை புரிந்த மித்ரா அவளின் அருகில் சென்று தோள்களை அழுத்தி பிடித்து” அக்கா எனக்கு உன்னை பத்தி தெரியும்….ஆனாலும் அவசரப்படாம கொஞ்சம் யோசனை பண்ணு எதுவானாலும் சரியா?”
அவள் தோளில் சாய்ந்து கொண்டு லேசாக லேசாக கண்கள் கலங்க….”மனசுக்கு சில விஷயங்கள் புரியுது ஆனா என்னவோ அவரோட பல ஜென்மங்கள் வாழ்ந்த மாதிரியான ஒரு உணர்வு வருது மித்து……எனக்கு என்ன பண்றதுன்னு புரியல…….பார்த்த அந்த நொடியில் இருந்து என் மனசுக்குள்ள வந்து உட்கார்ந்து கிட்டு இந்த பதினைந்து நாளும் என்னை நானாவே இருக்க விடல……அவரோட பார்வை எனக்குள்ள புகுந்து நான் என்ன நினைக்கிறேன்…எப்படி நினைப்பேன்னு என்னோட ஒவ்வொரு செயலிலும் அவரின் தாக்கத்தை உணர்ந்து கிட்டு இருக்கேன்.”
அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆதரவாய் முதுகை தடவி கொடுத்து….புரியுதுக்கா….புரியுது……உணர்ச்சிவசப்படாம இரு” என்றாள்.
அன்றைய நினைவுகளில் மூழ்கி இருந்தவளுக்கு தன்னவனின் முகம் கண்முன்னே வந்து போனது…….அது அவள் மனதில் எப்படியும் ஒரு நாள் கண்டிப்பாக அவன் தன்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையும் கூடவே வந்தது. அதனுடனே மித்ரா எப்பொழுதும் விளையாட்டாக சொல்வது நியாபகம் வந்தது’ வேட்டையன் வருவான்னு சொல்வியே மித்து அது
உண்மையா போச்சே………நான் நிஜமாவே வேட்டையன் கிட்ட மாட்டிக்கிட்டேனே’ என்று எண்ணி அழ ஆரம்பித்தாள்.
(தொடரும்)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...