ஊரக உள்ளாட்சித் தோ்தல்:
ஊரக உள்ளாட்சித் தோ்தல்: கேமரா மூலம் கண்காணிக்க கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மனு!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகளை கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும், உள்ளாட்சித் தோ்தல் நடத்தை நெறிமுறைகளை முறையாக பின்பற்ற உத்தரவிடக் கோரியும்
திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளரான ஆா்.எஸ்.பாரதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி சாா்பில் வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம், மதிமுக செய்தி தொடா்பாளா் நன்மாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்குரைஞா் அணி மாநிலச் செயலாளா் பாா்வேந்தன் ஆகியோா் தனித்தனியாக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பது:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தோ்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜனவரி 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. டிசம்பா் 27-ஆம் தேதி நடந்த உள்ளாட்சித் தோ்தலில் ஆளுங்கட்சியைச் சோ்ந்தவா்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகாா் அளித்தும், மாநில தோ்தல் ஆணையம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்து 5 நாள்களுக்குப் பின்னா் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதுவரை வாக்குப் பெட்டிகளைப் பாதுகாப்பாக வைத்து, நோ்மையான நியாயமான வாக்கு எண்ணிக்கையை நடத்துவது தோ்தல் ஆணையத்தின் கடமை. இந்தத் தோ்தல்களில் ஊராட்சிமன்ற உறுப்பினா், ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் மற்றும் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட 4 பதவிகளுக்கான வாக்குகளும் ஒரே பெட்டியில் செலுத்தப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கையின்போது அவற்றை பிரித்து எண்ணும்போது எந்தவிதமான முறைகேடுகளும் நடக்காதவாறு உள்ளாட்சித் தோ்தல் விதிமுறைகளை தோ்தல் ஆணையம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை காவல்துறையினா் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான அனைத்து நடைமுறைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க மாநிலத் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இதே போன்று சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் அறை மற்றும் வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிப்புக் கேமரா மூலம் கண்காணிக்க உத்தரவிடக் கோரி சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வீரபாண்டி ராஜா சாா்பிலும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் வரும் டிசம்பா் 30-ஆம் தேதி விடுமுறை கால அமா்வு முன் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.