சென்னைக்கு புதிய மெட்ரோ ரயில்கள் கொள்முதல்..!

 சென்னைக்கு புதிய மெட்ரோ ரயில்கள் கொள்முதல்..!

சென்னையில் பயணிகளின் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையும் மொத்தம் 54 கிமீ தொலைவுக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், தினசரி 3 லட்சம் முதல் 3.50 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர்.

பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மெட்ரோ ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, இரு வழித்தடங்களிலும் பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 4-இல் இருந்து 6-ஆக உயர்த்தவும், இதற்காக 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டது.

இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு, தமிழ்நாடு அரசுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்தாண்டு கருத்துரு அனுப்பியது. இந்த கருத்துருக்கு தமிழ்நாடு அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து கூடுதலாக தேவைப்படும் ரயில்பெட்டிகளை கணக்கிட்டு, ரூ.2,820.90 கோடி மதிப்பில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை கொள்முதல் செய்ய கடந்த ஜூன் மாதம் நீதி ஆயோக் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், மத்திய நிதித்துறை மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறையும் இந்த கருத்துருக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இதை சாத்தியப்படுத்த சர்வதேச வங்கிகளிடமிருந்து கடனுதவி பெற்று மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...