திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்ட நிகழ்ச்சியின் சுவாரஸ்ய சுருக்கம்..!
நூலக வாசகர் வட்டமும் பக்கோடாவும் பின்னே கோன் தோசை.
” இந்த திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டத்தோட மாதாந்திர நிகழ்ச்சில எனக்கு பேச அழைப்பு வந்ததும் சந்தோஷமா ஒத்துக்கிட்டேன்.
ஏன்னா இங்க நாலஞ்சு வருஷம் நாங்க இருந்திருக்கோம்.இந்த ஏரியால எல்லா இடமும் எனக்கு தெரியும்.அவ்ளவு சுத்திருக்கேன் இங்க.இப்ப இங்க இல்லேன்னாலும் 3 மாசத்துக்கு ஒருதரம் வடிவுடையம்மன் , எல்லையம்மன் கோவிலுக்கு வரது வழக்கம்தான்.
அயலக வாழ்க்கை பத்தி சொல்லனும்னா..நாங்க குவைத்ல இருந்தப்ப கொரானா பீரியட். நண்பர்களோட சேர்ந்து ‘ பிரெண்ட் லைனர்ஸ் ‘ ங்கற பேர்ல சேவை அமைப்பு நடத்திட்ருந்தேன் , வேலைல இருந்தபடி.உணவு , மருந்து மாத்திரைங்க கிடைக்காதவங்களுக்கு என் வீட்ல வச்சு என் மனைவிதான் பேக்கிங் பண்ணி குடுத்து ஒத்தாசையா இருப்பாங்க.
அந்த காலகட்டத்ல நான் அடிக்கடி நண்பர்களோட இணைந்து கொரானா பீரியட்லயும் வெளில மத்தவங்களுக்கு உதவி செய்றத்துக்காக சுத்தறத பார்த்து பலர் என் மனைவிட்ட ,
‘ இந்த கொரானா பீரியட்ல உங்க கணவரை ஜாக்கிரதையா இருக்க சொல்லாம இப்டி வெளில சுத்த விடலாமா..?.’ னு ஒரு அக்கறைல கேட்ருக்காங்க.இப்டி மத்தவங்க கேட்டதும் என் மனைவி ,
‘ இனிமே நீங்க ஜாக்ரதையா இருங்க. இந்த கொரானா பீரியட்ல வெளில போகாம மத்தவங்கள வச்சு இந்த வேலைங்கள செய்யுங்க ‘ ன்னாங்க.அப்ப நான் சொன்னேன் :
இத பாரு. என்னிக்கோ ஒருநாள் போகத்தான் போறோம்.யாரும் இங்க நிரந்தரம் கிடையாது.அப்டி உயிர் போகனும்னா அது இந்த பீரியட்ல மத்தவங்களுக்கு உதவி செய்யும்போது போகுதுன்னா அது எனக்கு சந்தோஷம்தான்.– இத கேட்டதும் அவங்க ,
” சரி , அப்டினா இனி நானும் உங்க்கூட வெளில வந்து உதவியா இருக்கேன்.உயிர் போறதுன்னு இருந்தா ரெண்டு பேருக்குமே போகட்டும் ” சொல்லி அன்னிலேர்ந்து அவங்களும் என்கூட வெளில வந்து உதவி செய்ய ஆரம்பிச்சாங்க.
இதலாம் பார்த்துட்டு நான் ரிடையர் ஆகி குவைத்தை விட்டு கிளம்பறதுன்னு முடிவானப்ப அங்க இருக்கற எம்பஸி எங்களை தூதரகத்துக்கு வர சொல்லி ஒரு பாராட்டுவிழா நடத்தினாங்க.
இதுல எங்களுக்கு என்ன சந்தோஷம்னா அதுவரைல அந்த தூதரகம் எந்த இந்தியரையும் இப்டி கூப்பிட்டு கௌரவப்படுத்தினது இல்லேங்கறதுதான்.அது எங்களுக்கு ஒரு பெருமையாவும் இருந்தது. “
திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்ட நிகழ்ச்சியில எழுத்தாளர் என். சி.மோகன்தாஸ் பேசியதன் சுருக்கம்.
“இந்த நூலகத்தின் உறுப்பினர்களோட எண்ணிக்கை 28,000.
தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட கிளை நூலகம் இதுதான் ” ன்னு லைப்ரேரியன் பெனிட் பாண்டியன் சார் சொன்னப்ப ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
அரசாங்க லைப்ரரி மாதிரி இல்லாம நல்ல ஹைடெக் தரத்ல இருந்த லைப்ரரிய பார்க்றச்ச மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு போறதுக்கு முன்ன வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ ஸ்வாமி கோவிலுக்கும் போய் தரிசனம் பண்ணினோம்.
நிகழ்ச்சியில் என்.ஆர்.சம்பத், சுப்பிரமணியம் ஸ்ரீனிவாசன், அம்பி, டி.என்.ராதாகிருஷ்ணன், சார்ஸ் , அகிலா ஜ்வாலா இவர்களோடு நானும் கலந்து கொண்டேன்.
அந்த ஏரியாவாசியான லதா சரவணன் எழுத்தாளர் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்து கலந்து கொண்டார்.
இனிய மாலைப்பொழுது.
1 Comment
நூலக அரங்கில்
மோகன கானம்
——————————
எழுத்தாளர் திரு என் சி மோகன்தாஸ் அவர்கள் மிக உன்னதமான எழுத்தாளர் – நாம் அறிவோம்
ஒப்புயர்வற்ற சேவையாளர் – அதுவும் தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்ததே!
உயர்தர ஒருங்கிணைப்பாளர் – செயல்பாட்டாளர் – அதை விழி வழி படித்து – செவி வழி கேட்டு – கூட இருந்து கவனித்து அதன் நூறு சதவிகித உண்மைத்தன்மையை உணர்ந்திருக்கிறேன்.
ஆனால் அவரின் மேடைப் பேச்சு எப்படி இருக்கும்? பலரைப் போலவே எனக்கும் தெரியாது. அதை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.
திருவொற்றியூர் என்பது
தியாகராஜ தெய்வீகம் மணக்கும் ஊர் –
வையகத் தாயாம் வடிவுடை அம்மன்
வரமளித்து மகிழ்கின்ற வாச ஊர்!
பட்டினத்துச் சித்தர்பிரான் –
பக்தி நிறை முக்தி கண்ட பரவச ஊர்
கடலலைகள் நீராட்டி –
கடவுளர்கள் சீராட்டி –
காற்றெல்லாம் போற்றுகின்ற
காவிய ஊர் – நல்ல – கதி தரும் ஊர்!
திருவொற்றியூரை நினைத்தாலே நமக்கு
மேற்சொன்ன ஆன்மீக விஷயங்களே அலைமோதும் – ஆனால் –
அந்த ஊரின் இன்னொரு பெருமிதம்
ஏனையோர் அறியாதது – அதுதான் அதன் நூலகச் சிறப்பு!
அரசு நூலகம் ஐயா – வெறும் அரசு நூலகம்! வெந்ததைத் தின்று – விதி வந்தால் சாவது போன்ற – காலையில் நூலகம் திறந்து – பத்திரிகைகளைப் பரப்பி – வெறும் ஃபார்மாலிடிக்காகப் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பலரைப் பார்த்திருப்போம் –
(சிலர் விதிவிலக்கு)
அரசு அலுவலக அம்சங்களை – நாம்தான்
அங்குலம் அங்குலமாக அறிவோமே!
கடனே என்று பணிபுரிந்து காலத்தை ஓட்டுவோர் மத்தியில் –
நூலகப் பணி என்பது இலக்கியச் சேவை –
அறிவை இயக்கிடும் சேவை –
பழந்தலைமுறையைப் படிக்க வைக்கவும் –
புதுத்தலைமுறைக்குப் புரியவைக்கவும் –
சிறு தலைமுறைக்குச் சிறப்பு கவனமும்
எடுத்து இயங்குகிற உன்னத நூலகம்தான் திருவொற்றியூர் அரசு நூலகம்!
இருபத்தெட்டாயிரம் எழுச்சி மிகு உறுப்பினர்களைக் கொண்டு –
சம்பளத்துக்காய் அல்ல; சமூக மேம்பாட்டுக்காய்ப் பாடுபட்டுச் செயல்படுகிற புத்தகக் கோயில்தான் ஐயா திருவொற்றியூர் நூலகம்!
ஆற்றல் மிக்க நூலகர் – ஆர்வம் மிக்க பணியாளர்கள் – இதனால் அந்நூலகத்துக்கு ஊர் முழுக்க ஒத்துழைப்பு – எனவே – அங்கே வாசிக்கும் ஆர்வம் புத்துயிர்ப்பு!
மாதாமாதம் இரண்டாம் சனிக்கிழமை நூலகத்துக்கு விடுமுறை – அந்த நாளில் ஒவ்வொரு மாதமும் ஒரு நல்ல சிந்தனையாளரை அழைத்துச் சிறப்புக் கூட்டம் நடத்துகிறார்கள். நேற்று நடந்தது 83 வது சிந்தனை அரங்கம்!
இதில்தான் நம் அறிவார்ந்த நண்பர் NcMohandoss Ncm அவர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்தது.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் – நாங்கள் (நான் – மடிப்பாக்கத்தார் Venkatasubramaniam Venkat , சகோதரி Akila Jwala , ரத்னாவாகிய நான் நாவல் புகழ் சுஸ்ரீ ஆகிய Subramaniam Srinivasan , உழல் வலிகள் நூலை உருவாக்கிய Ambi , பெரியவர் என் ஆர் சம்பத்) சென்றது ஆலய தரிசனம் செய்வதற்குத்தான்
ஏனெனில் அரசு நிகழ்வுகளின் லட்சணம் அறிந்ததுதானே!
எங்களைத் திருப்பிப் போட்டது இந்த நூலக நிகழ்வு.
முதலில் கலந்து கொண்ட அரசுப் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி அற்புதம் அற்புதம் அற்புதம்.
.
திரு துரைராஜ் அவர்களின் உரைக்குப் பின்னர் – நம் என்சிஎம் மைக் பிடித்தார்.
போராடிப் போராடி – தமிழ் எழுத்துலகில் தான் எட்டிய இலக்கிய அங்கீகாரம் –
குவைத் சென்ற பின்பும் – அங்கிருந்து ஆற்றிய எழுத்துப் பணி….. என்று சொல்லிக் கொண்டே வந்தவர் – அங்கே நடந்த ஒரு விபத்தில் – தன் கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்தைச் சொல்கையில் சபை மௌனித்தது – சூழலே அதிர்ச்சியானது.
அதிலிருந்து ரெகவர் ஆகி – இழந்த பார்வைச் சக்தி முழுதும் கிடைக்கா விடினும் – பெருமளவு காணும் சக்தியைப் பெற்றிருக்கிறார் அவர்.
அதற்கு முக்கியக் காரணம் – அவரின் மனோதிடம்! “இவருக்கு ரெண்டு கண்ணும் ரெகவர் ஆகவே ஆகாது” என்கிற ஒரு அரை வேக்காடு டாக்டரின் கமெண்ட்டைக் கேட்டுவிட்டு என்சிஎம் சொன்ன வார்த்தை – எழுத்தாள இயல்பின் உச்சம் –
“எனக்குப் பார்வை முழுவதும் பறி போய் – முழுக் குருடாக ஆனாலும் கூட – நான் தட்டுமுட்டித் தடுமாறித் தடுமாறி – என் எழுத்துப் பணியைச் செய்து கொண்டே இருப்பேன்”
இதுதான் ஐயா எழுத்தாள அர்ப்பணிப்பு
இதுதான் ஐயா இலக்கிய உயிர்ப்பிணைப்பு!
சபை சிலிர்த்து ரசித்த கணம் இது.
சமூக சேவையில் எப்படித் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் ? அது பிறவியின் தொடர்ச்சியாய்க் கொஞ்சம் அமைந்தாலும் – தான் படித்த இலக்கியமே தன்னை இந்த உலகுக்காக உழைக்க வைத்தது – உதவ வைத்தது – என்று அவர் சொன்னபோது – அத்துணை பேரும் அகமகிழ்ந்து கைதட்டினோம்.
இலக்கியத்தின் இலக்கு என்பதே
மனித மனதைப் பண்படுத்துவதுதானே!
கொரானா காலத்துச் சேவைப் பணிகள் – “ஐயோ உன் கணவர் – கொரானா நோயாளிகளிடமெல்லாம் குலவிக் கொண்டிருக்கிறாரே – அவர் உயிருக்கே ஆபத்தாயிற்றே” என்று மற்றவர்கள் இவர் மனைவியின் செவிகளில் மந்திரம் ஓத –
மனைவி தடுமாற –
“என்றாவது ஒரு நாள் இழக்கப் போகும் உயிர்தானே – இந்தச் சேவையின் போதே செத்துப் போனால் அது என் பாக்யம்” என்று இவர் பதிலளித்தவுடன் – இவர் மனைவி “அந்த பாக்யம் எனக்கும் கிடைக்கட்டுமே” என்று கொரானா நிவாரணத்துக்கு இவர் கூடவே கிளம்பி விட்டாராம் – மனைவி அமைவதெல்லாம் இலக்கியம் கொடுத்த வரம்.
பிறகு ஐயா பாலம் கல்யாணசுந்தரம் அவர்களோடு இணைந்து செயல்பட்டது – இங்கு தமிழகம் வந்த பிறகு கூட – அங்கிருக்கும் நபர்களுக்கு இங்கிருந்தே உதவுவது…. போன்றவற்றைப் பொழிந்தார்.
அடுக்கு மொழியில்லை – அழகு வார்த்தையில்லை – அலங்காரம் – ஜோடனை எதுவுமில்லாத அருவிப் பேச்சு.
உதட்டில் இருந்து பேசியிருந்தால் உடனே மறந்திருப்போம் – உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ந்து பேசினார் –
உண்மையின் உயிர்ப்பை உரக்கப் பேசினார் – உழைப்பின் உன்னதம் உறைக்கப் பேசினார்.
எவ்வளவு எளிய சொற்கள் – அதில்
எடுத்தாண்ட அநுபவங்களில்தான்
எவ்வளவு மேன்மைப் பண்பு!
நல்ல பேச்சை “செவிக்கு விருந்து” என்றுதான் பொதுவாகச் சொல்வோம் – இதுவோ இந்தப் புவிக்கு விருந்து –
சமூகப் பொதுமைக்கு விருந்து.
நூலகத்தை விட்டு வெளிவருகையில் – அதன் வாசல்படி தொட்டு வணங்கினேன் – இதை நூலகம் என்று தவறாகச் சொல்கிறார்கள் – உண்மையில் – இது ஒரு நூல் ஆலயம்!