ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து – கேரள அரசு அறிவிப்பு..!
வயநாடு பேரழிவை தொடர்ந்து மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகையின் கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் கடந்த மாதம் 30 ஆம் தேதி அதிகாலை பயங்கர நீலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரல்மலை, முண்டக்கை, அட்டைமலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் பெரும் சேதமடைந்தன.
இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிருடன் சேற்றில் புதைந்தனர். இந்த கோர சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் கடந்த பின்பும் கூட மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை மண்ணில் உயிருடன் புதைந்த உயிரிழந்த 400க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
காணாமல் போன 100க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. அனைத்தையும் இழந்து நிற்கதியாய் நிற்கும் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த இயற்கை பேரிடர் காரணமாக இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஓணம் விழாவை செப்டம்பர் 13 முதல் 19 ஆம் தேதி வரை நடத்த கேரள மாநில அரசு முடிவு செய்திருந்தது. திருவனந்தபுரத்தில் ஒருவார காலம் நடைபெறும் இந்நிகழ்ச்சி 19ஆம் தேதி ஊர்வலத்துடன் நிறைவடைவதாக இருந்தது. ஒரு வாரம் நடைபெற இருந்த இந்த ஓணம் விழாவில், ஓணம் கண்காட்சிகள், ஓணம் சந்தைகள், காய்கறி கவுண்டர்கள், சிறப்பு விற்பனை ஊக்குவிப்பு பரிசுத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்த திட்டமிட்டிருந்தது.
ஆனால் வயநாடு நிலச்சரிவு பேரழிவு காரணமாக ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பிஏ முகமது ரியாஸ் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த பெரிய பேரழிவால் ஏற்பட்டுள்ள கடுமையான சோகத்தால் முக்கிய வருடாந்திர நிகழ்வுகள் கைவிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மாவட்ட அளவிலும், அரசு அலுவலகங்களிலும் ஓணம் கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாத் துறை திட்டமிட்டிருந்த சாம்பியன்ஸ் படகு லீக் (CBL) பந்தயங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது மலையாள மொழி பேசும் மக்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.