ஜமா நம் மண்ணின் மாந்தர்களின் மொழி/திரை விமர்சனம்
ஜமா நம் மண்ணின் மாந்தர்களின் மொழி
கலை என்பது மிகப் பரிசுத்தமானது. எளியோர் செல்வந்தர் என்றில்லாமல் பொதுவான மனித மனத்திற்கான இரசனைக்கும், ஆத்ம தேடலுக்கும் மென்மையான அகத்தொடுகை வழங்குவது…அதனை அவரவர் சுயநலத்திற்காகப் பயன்படுத்த எண்ணுவது பெரும்பிழை.
கூத்துக்கலைஞர்களின் வாழ்வியலை அப்படியே அவர்களின் இயல்பில், உணர்வுபூர்வமான போராட்டங்களோடு காட்டுகிறது #ஜமா. எல்லோருக்கும் வாழ்வில் இலக்கு உண்டு. அதை நோக்கியே பயணங்களும் அமைகின்றன.
ஜமாவில் நாயகன் ஆரம்பத்தில் சூதுவாது அறியாத, கள்ளம் கபடமற்றவனாக இருக்கிறான். அழகியலும், பெண்சக்தியின் பிம்பமுமான திரௌபதி வேடம் அவனுக்கு வாத்தியாரால் தொடர்ந்து கொடுக்கப்படுகிறது. அது அவனுக்கும் பிடித்தே இருக்கிறது.பாரிஇளவழகனின் நடிப்பு அற்புதம்.முதல் படமென்பது நமக்கு வியப்பு. இந்தக்காலத்தில் பெண் போன்ற நளினமும், வெள்ளந்தி குணமும், வறுமையும் கொண்ட படிக்காத மாப்பிள்ளைக்கு திருமணச் சந்தையில் என்ன மதிப்பு இருக்குமென்பதை நாமெல்லாம் அறிவோம். ஆனால் இங்கே நாயகி முற்றிலும் மாறுபட்டவளாக எதை இச்சமூகம் அவனது குறைகளென அடுக்கி அவமானப்படுத்துகிறதோ நிராகரிக்கிறதோ அதையே அவனது நிறையாகப் பார்க்கிறாள்.
” எவன்டா இங்க ஆம்பிள……..” என்று தொடங்கும் நாயகியின் வசனம் ட்ரைலரில் முதல் முறை பார்த்தபோதே வெகுவாக என்னைக் கவர்ந்தது. எத்தனைக் கொடுப்பினை இப்படியான காதல் ஒருவனுக்கு அமைவது. “போடா குடிகார நாயே” என்று உறுதியாக தவறு செய்யும் தந்தையை உதறி இந்த எளிய கலைஞனின் பின்வரும் அம்மனம் எவ்வளவு கனமானது ! அக்காதல் எத்துணை ஆழமானது !
அந்தக் காதலை உதறும் இடம் ஒரு பெண்ணாக எனக்குச் சற்று நெருடலைக் கொடுத்தது.
இந்த உலகம் முன்னேறக் கைக்கொள்ளும் தந்திரங்களை, நெளிவு சுளிவுகளை அவனும் கற்றுக்கொள்ளும்போது… ” தந்தையின் ஜமாவை மீட்டு எடுக்க… பிறகு உன்னைக் கரம் பிடிக்க… ” என்று என்னதான் சமாதானம் சொன்னாலும் அந்தக் கதாபாத்திரம் அங்கே நேர்மையில் கொஞ்சம் வழுக்கி, கதாநாயகியே உயர்ந்து நிற்கிறாள் என்பது என் தனிப்பட்ட பார்வை.
மேலும், ஆண்மகனுக்கென நாயகி சொல்லும் குணங்கள் ஆணுக்கானவை மட்டுமல்ல…………. அனைத்து மனிதருக்குமானவை. ஆக, ஆணுக்கான கட்டமைப்பை உருவாக்குவதன் வாயிலாக பெண்ணுக்கும் சில குணங்கள் இயக்குனரின் பார்வையில் இருக்கலாம் என்றும் அது என்னவாக இருக்குமெனவும் யோசனை எழுகிறது. #ammuabhirami -யின் கண்களின் நடிப்பில் விழுந்து, பெண்மையின் வீச்சை ரசித்துக் கொண்டே இருக்கலாம். வெகு நாள்களுக்குப் பிறகு இயல்பான தமிழ்முகம் தமிழ்த்திரையில் காண நிறைவு.
வாத்தியார் சேத்தன் நடிப்பில் மிரட்டல்.தாமதித்த அடையாளமாயினும் இனி அவருக்கான கதவுகள் நிறைய திறக்கக்கூடும். பூனை கதாபாத்திரம்…. பூனை போலவே எல்லாவற்றையும் கவனித்து சரியான நேரத்தில் சரியான நகர்வை கதைக்குள் செலுத்துகிறது. நல்ல பாத்திரப்படைப்பு. நாயகனின் தாயாரின் தேர்ந்த நடிப்பு படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது. நாயகியின் தாயாராக வரும் தோழி @சத்யா மருதாணி முதல் நியாயமான கேள்விகளை தெளிவாக ஆரம்பம் முதலே கேட்டுக்கொண்டே இருக்கும் அச்சிறுவன்வரை எல்லோருமே தம் பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
தவறு செய்கிறார் என்று அறிந்தும் “மாமா சாப்பிட்டு போங்க..” என்று அவர் மீதான கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, உணவு ஊட்டி விடும் காட்சி மனைவி என்ற உறவிற்கு பலரும் அளிக்கக்கூடிய இடம் அவ்வளவுதான் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. மிடுக்கும், ஆளுமையும் கொண்ட வாத்தியாரின் மனைவி என்பதற்கு நியாயம் செய்து, அளவான பாந்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் தோழி சத்யா மருதாணி .உண்மைக்குத் துணை நிற்கத் தவிக்கும் கரிசனமும், அதே நேரம் கணவனை எதிர்த்துப் பெரிதாக எதையும் செய்தும் விட முடியாத, கிராமத்து மனைவியின் கையறு நிலையுமாகப் பொருத்தமான மென்முக பாவம்.என் உளப் பூர்வமான வாழ்த்துக்கள் தோழி.
கதையோட்டத்தின் நடுவே..நிகழும் காலம் துல்லியமாகக் காட்டப்படவில்லையோ என்ற கேள்வி தோன்றியது.பழைய மாடல் செல்ஃபோன் காட்டப்படுவதால் 90 – களின் பிற்பகுதியாக இருக்கலாமெனக் கணிக்கிறேன்.
அர்ஜுனன் வேடமிடுவதுதான் நாயகனின் இலக்கு என்பதில் இயக்குனர் மிகத் தெளிவாக உறுதியாக இருப்பதை நாம் புரிந்து கொள்கிறோம். ஏன் ராஜபார்ட் மட்டும்தான் உயர்ந்ததா அதுதான் இலக்கா…மற்ற கதாபாத்திரங்கள் உயிர்ப்பு மிக்க கலைவடிவங்கள் இல்லையா… உண்மையான கலைஞனுக்கு திரௌபதியும், கர்ணனும் ஏன் வாயில் காப்போன் வேடமும்கூட சமமானது இல்லையா அவையும் முக்கியத்துவம் வாய்ந்த மதிக்கத்தக்கவைதானே என்ற தெளிவைக் கொடுத்திருக்கலாமே என்ற ஐயம் எனக்குத் தோன்றியது..கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னரான கர்ணன் வேடமும், குந்தியின் பேராற்றல் நடிப்பும் உண்மையான கலையின் போக்கை, அர்ப்பணிப்பை உணர்த்திவிட்ட போது அங்கேயே படத்தை நிறைவு செய்திருக்கலாம் என்றுமொரு மாற்றுப்பார்வை கிட்டியது.
இப்படி வெவ்வேறு கோணங்களில் நிறைய அலசுவதற்கான கலைநயமான காட்சியமைப்புகளை விரிவாக அமைத்திருப்பதே ஜமாவின் பெரும்பலம். இப்படியான சிந்தனையைத் தூண்டியெழுப்பும், களப்போராட்டங்களின் தருணங்களைத் திரையில் கண்டு எத்தனை நாளாயிற்று.மேலும், எங்கே எவ்வளவு வளைய வேண்டும் குழைய வேண்டும் அதிர வேண்டுமென இசைஞானிக்கு சொல்லித் தரத் தேவையில்லை. எப்போதும்போல் கதைக்களத்திற்கு ஆகப்பொருந்தும் எளியோரின் நல்லிசை.
வசனங்கள் ஆங்காங்கே விழிவிரியச் செய்து நறுக்கெனத் தைக்கின்றன.வசூல் சாதனை நிகழ்த்தும் உத்தரவாதம் அளிக்காத அபூர்வமான கூத்துக் கலைஞர்களின் வாழ்வை எடுத்துச் சொல்ல எவ்வளவு கருணையும், துணிச்சலும் வேண்டும்.அதற்கே இயக்குனருக்குப் பூங்கொத்து கொடுக்க வேண்டும்.
மேட்டிமைக் கலைவடிவங்கள் பலவற்றை நம் திரைப்படங்கள் பேசியிருக்கின்றன. ஆனால் ஜமா நம் மண்ணின் மாந்தர்களின் மொழி. அவசியம் ஆதரிப்போம்.
ஜமா குழுவினரின் தனித்துவமிக்க இம்முயற்சிக்கு என் பேரன்பின் நல்வாழ்த்துகள்.