ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்..!
ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் இன்று அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் அதிகமாக நிலநடுக்கம் ஏற்படுவதுண்டு. ஜப்பானில் உள்ள வீடுகளும் இதற்கு ஏற்றவாறு தான் கட்டப்பட்டுள்ளது. இதனால் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அங்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. இருப்பினும் சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்படும்போது அங்கு கடுமையான பாதிப்பு நிகழ்ந்துவிடும். இந்த ஆண்டு துவக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஜப்பானில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. இரண்டாவது முறை ஏற்பட்ட நிலநடுக்கமானது 7.1 ஆக பதிவானது.
இதனால் பதறிப்போன மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருவில் தஞ்சமடைந்தனர். சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.