“இலக்கணம் மாறுதோ” – அகிலா ஜ்வாலா
நிலைகுலைந்து போனாள் சுமா,.
இப்படி ஒரு அவலம் .
அன்று பெற்றோருக்கு தெரியாமல் காதலில் விழுந்ததற்கு இத்தனை நாள் தண்டனை அனுபவித்தாள்.
இன்று, அவள் செய்யாத பாவத்திற்கு,
இனி என்ன?
வாழ வேண்டுமா?
சாக வேண்டுமா?
இன்னும் ஒரு மணி நேரத்தில் அப்பா அம்மா வருவார்கள். அவர்களிடம் என்ன சொல்ல…இதை எல்லாம் தாங்கும் வயதா அவர்களுக்கு
”என்னால் அவர்களுக்கு எப்போதும் துன்பம் மட்டும் தானா” எனத் தவித்தாள்
கல்லூரியில் காதலித்ததே மாபெரும் தவறென குற்ற உணர்வில் தவித்தவள் அவள் பெற்றவர்களை எப்படி நேர்கொள்வது என மருண்டவள். இன்று தன் வீட்டிலேயே தன்னைத் தொலைத்து நிற்கிறாள்.
கல்லூரி நாட்களில், உயிருக்கு, உயிராய் காதலித்த ஸ்ரீ குரு, சாலை விபத்தில் இறந்து போனதை தொலைக்காட்சியில் செய்தியும் புகைப்படமுமாய் பார்த்ததில் நிலைகுலைந்து போனவள். தன்னை சரிசெய்து கொள்ள அவளின் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஸ்ரீகுருவுக்கு பின் திருமணமே வேண்டாம் என துறவு வாழ்க்கை வாழ்பவள் அவள்
கல்லூரியில் இளங்கலை முடிந்தும், அம்மாவுக்கு அவளுக்கு திருமணம் செய்து வைப்பதில்தான் மொத்த கவனமும் இருந்தது, அப்பா முதலில் அவள் தன் காலில் நிற்கட்டும் என அவள் பக்கம் நின்றார்
முதுகலை முடித்து பி.எச்.டி நெட் தேர்வு முடித்து, வீட்டுக்கு ஓரளவு அருகிலேயே, அரசு மகளிர் கல்லூரியில் விரிவுரையாளர் பதவி கிடைத்ததில் பெற்றோருக்கும் மகிழ்ச்சி.
கல்லூரி வீட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலேயே. பெண் தினமும் சிரமப்படக்கூடாதென அப்பா அவளுக்கென தனி கார் மற்றும் டிரைவர் ஏற்பாடு செய்தார்’
காலையில் மாலையில் கார் பயணம், பயணத்தின் போதே பழைய நினைவுகளில் மூழ்கிப்போவாள். தானே பின் தெளிவாள்
பொதுவாகவே கலகலப்பான குணம் சுமாவிற்கு. ஸ்ரீ குருவால் மெளனமாகிப்போன அவள் மனம் கல்லூரியில் மாணவிகளுடன் நேரம் செல்வழித்ததில் மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்து.
அன்று காலையிலிருந்தே நல்ல மழை அம்மா அப்பா இரண்டு பேரும் காலை திருவண்ணாமலை கிளம்பிச் சென்றிருந்தார்கள், சுமாவிற்குத் தெரியும் திருமண விஷயமாக அவள் மனம் மாறுவதற்குத் தான் அவர்கள் வேண்டுதல் எல்லாம் என. வருவதற்கு இரவு 10 மணி ஆகிவிடும் கவனமாக இரு என்று சொல்லிவிட்டு சென்றார்கள்.
கல்லூரி முடிந்து 5 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்தாள். கொஞ்ச நேரத்தில் சூடாய் சாதம், இரசம் வைத்து சாப்பிட்டாள் ,
மழை வலுக்கத்துவங்கியது, இடி மின்னலும் அதிகமாக கரண்ட் போனது. சுமா அப்பாவிற்கு கால் செய்தாள் ”நேரமாகிடுச்சு இப்போதான் கிளம்பி இருக்கோம் நீ 9 மணிக்கு கதவை சாத்திட்டு தூங்கு , வீட்டுக்கு கிட்ட வந்ததும் நாங்க கால் செய்யறோம்” என்றார்கள்
இன்வெர்ட்டர் இருந்ததால் சிரமம் தெரியவில்லை., 7 மணிக்கு வேலைகளை முடித்து புத்தகம் ஒன்றுடன் படுக்கைக்கு சென்றாள் கதவு தட்டும் ஒலி இப்போ யாரு இந்த நேரத்தில் என யோசித்தபடியே கதவைத்திறந்தாள். அவளை வழக்கமாக அழைத்துச் செல்லும் டிரைவர் அவன்,
என்னாச்சு? என்று கேட்டாள் சுமா , கதவினை இலேசாக திறந்தபடி
”இல்லைங்க நாளைக்கு அவசரமா வெளியூர் போக வேண்டி இருக்கு நான் ஒரு நம்பர் தரேன் அதுக்கு கால் செய்ங்க டிரைவர் வருவார், என நம்பர் எழுதிய பேப்பர் ஒன்றை தந்தான் ”கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்றான்
”ஒரு நிமிஷம்” என்றபடி தண்ணீர் எடுக்கப்போனவள் தண்ணீருடன் திரும்பிய போது.. ”மேடம் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும், நீங்க வேணும் மேடம் எனக்கு” என இரு காலையும் பற்றிக்கொண்ட அவனைப்பார்த்து ஒரு நிமிடம் தடுமாறி பின்
” சீ ” எனத் தள்ளி விட்டாள்.
மனதளவில் தெளிவாக இருந்தவள்தான் ஒரு பெண் அனுமதிக்காமல் ஆணால் எல்லைத் தாண்ட முடியாது என..ஆனால் அவளின் போராட்டங்கள் எல்லாம் வீணாகின ”கடவுளே இல்லையா” எனக் கதறினாள்.
”சாரி எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் எனக்கு வேற வழி தெரியல மன்னிச்சுடுங்க, உங்களை கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி” என சொல்லி விட்டு வாசல் தாண்டிப் போனவனை அழுகையும் அருவெறுப்புமாய் பார்த்தாள் சுமா
மணி 8, காலம் அப்படியே நின்று விட்டாற்போல் உறைந்து போனது.
” ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் என தத்துவம் பேசும் இந்த உலகத்துக்கு தன்னுடைய குற்றமின்மையை எப்படி நிரூபிக்கப் போகிறாள்
ஏனோ தன் விருப்பமின்றி நடந்த இந்நிகழ்விற்கு தன்னை துளியும் பொறுப்பாக்கிக் கொள்ளாமல் மனம் வேடிக்கைப் பார்க்க,,கறை பட்டதாக கதறிக்கொண்டிருந்தது உடல் மட்டும்..
உண்மை சத்தியம் என சொல்லி வளர்க்கப்பட்டவள் தான் அவள்
ஏனோ பெற்றவர்கள் மனம் உடைக்க தைரியம் வரவில்லை.
குளித்தாள் வேறு உடை அணிந்தாள். எதுவுமே நடக்காதது போல பெற்றோருக்கு உணவு சூடு செய்து வைத்தாள்
வந்த பெற்றோரை துளி சுவடும் தெரியாமல் உபசரித்தாள், திருவண்ணாமலை சாமி தரிசனம் பற்றி கதை கேட்டாள்
பின் தன் அறையில் சென்று படுத்து தூக்கம் வராமல் புரண்டாள்
அந்த டிரைவருக்கு தண்டனை வாங்கித் தர வேண்டுமா? இல்லை சில திரைப்படங்களில் வருவது போல் அவனையே மணந்து கொள்ள வேண்டுமா
எந்த ஒன்றையும் அவளால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை
அடுத்த நாள் அவன் வரவில்லை
அவன் கொடுத்த எண்ணிற்கு போன் செய்து வேறு டிரைவரை வரவைத்து கல்லூரி சென்றாள். 10 நாட்கள் புதிய டிரைவர்தான் வந்தான். சுமா கலங்கவில்லை லேடி டாக்டரைப் பார்த்தாள் . என் அனுமதி இல்லாமல் நடந்த நிகழ்வு என்னை பலியாக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றாள். பரிசோதனை செய்து கொண்டாள். நல்லவேளையாக சினிமாக்களில் நடப்பது போல் எதுவும் இல்லை.
அதற்கு 10 நாட்கள் கழித்து அவள் வீட்டில் ஏதும் சொல்லி இருப்பாளோ எனும் தயக்கத்துடன் வந்தான் . அமைதியாக எதுவும் நடக்காதது போல் வண்டியில் ஏறினாள்
அவளே பேச்சைத் துவங்கினாள்
”எந்த தைரியத்தில் திரும்ப இங்கே வந்தீங்க?
நான் வீட்டில் சொல்லி உங்களை பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தால்?” எனக் கேட்டாள்
”எதுவா இருந்தாலும் ஏத்துக்கலாம், ஜெயிலுக்கு அனுப்பினாலும் சரி என்னை ஏத்துக்கிட்டாலும் சரி என்றுதான் வந்தேன். நா பயப்படலங்க எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும் நீங்க வேணும்னு நினைச்சேன் என் தகுதிக்கெல்லாம் நீங்க கிடைக்க மாட்டீங்க, வேற வழி தெரியல எனக்கு” என்றான்
அவன் முகத்தைக்கூட சரியாகப் பார்த்ததில்லை அவள் காரின் முன்பக்க கண்ணாடி வழியே அவன் முகத்தையே அப்போதுதான் ஆழ்ந்து பார்த்தாள் சுமா..
கட்டையான உருவம் முகத்தில் களை எனக்கூடிய எந்த அம்சமும் இல்லை.
”என்ன படிச்சுருக்கீங்க?” எனக் கேட்டாள் சுமா
”டிகிரி முடிச்சிருக்கேன்” என்றான் சுமாவின் கண்களை நேரடியாக பார்க்காமல் தலை குனிந்தவாறு
”வண்டியை அந்த காபி ஷாப்பில் நிறுத்துங்க எனக்கு ஒரு காபி சாப்பிடணும்” என்றாள் சுமா
இருவரும் எதிரெதிரே உட்கார்ந்தார்கள்
சுமா வெட்கப்படவில்லை, விழிகள் அலைபாயவில்லை அவன் கண்ணைப் பார்த்து பேசினாள்
”நான் என் பெற்றவங்களுக்கு ஒரே பொண்ணு என் முதல் காதல் தோல்விக்குப் பின்னால, எனக்கு திருமணம் எனும் ஆசை இல்லை, படிப்பு , வேலை பெற்றோர் பராமரிப்பு கொஞ்சம் பொது சேவை இதுதான் வாழ்க்கைன்னு தீர்மானம் பண்ணிட்டேன். நீங்க வந்தால, எனக்கு நடந்த அந்த நிகழ்வினால. எனக்கு எதுவும் மாறல
நிறைய சினிமா பார்ப்பீங்களோ!
ஒரு பொண்ணை அவ அனுமதி இல்லாம தொட்டா உடனே அவ அவனையே கல்யாணம் பண்ணிப்பான்னு யோசிக்க சொல்லிக் கொடுத்துதா உங்க டிகிரி ?”
”இப்போ நான் போலீஸ்க்கு போகல, அதனால இவள் பயப்படுவான்னு மட்டும் என்னை நினைச்சுடாதீங்க. நான் அப்படி பயந்தவள் எல்லாம் இல்லை
படிக்கிற படிப்பு நமக்கு, நாம யாருன்னு தெளிவுப்படுத்தணும் என்ன செய்யறோம்னு புரிய வைக்கணும். தகுதி இல்லை உங்களுக்குன்னு நினைச்சதா சொன்னீங்க ஆனா தகுதி என்பது உங்கள் பண்பு மட்டும்தான். அந்த பண்பால நீங்க என்னை ஈர்க்க முயற்சி செய்திருக்கலாம் ஆனா இப்படி ஒரு கேவலமான வழியைத் தேர்ந்தெடுத்து இருக்கீங்க..
இப்போ இந்த அயோக்கியத்தனம் செய்ததைப் பற்றி நீங்க அவமானப்படலன்னா, ஒரு நல்ல குடும்பத்துல நீங்க பிறக்கலன்னு அர்த்தம்
ஒரு பொண்ணை விரும்ப வைக்க இப்படி ஒரு கீழ்த்தரமான ஆயுதத்தைக் எல்லா ஆண்களும் கையாள ஆரம்பிச்சா நாளைக்கு உங்க அம்மா, கூடப் பொறந்தவங்க, ஏன் உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அது கூட நிம்மதியா நடமாட முடியாது.”
என்றபடி அவனைப் பார்த்தாள்.
அவன் கண்களில் கண்ணீர் ..
”மன்னிச்சுடும்மா
நான் தப்பு பண்ணிட்டேன். மிருகமா ஆயிட்டேன் கூடப்பொறந்தவங்க இல்லை சரி தவறுன்னு எடுத்து சொல்ல உங்களைப்போல பக்குவமான மனம் கொண்ட நண்பர்கள் இல்லை. ஆனா புரிஞ்சுக்கிட்டேன். இனி கண்ணியக்குறைவா நடந்துக்க மாட்டேன் மன்னிச்சுடுங்க ப்ளீஸ் என்றான். ஒரு வாய்ப்பு கொடுங்க நான் யோக்கியமானவனா நடந்து காட்டறேன், உங்களுக்கு என்னால எந்த தொந்தரவும் வராது இது சத்தியம்” என்றவாறு கண்களைத் துடைத்துக் கொண்டான்
அவன் கண்களில் உண்மை இருந்தது,
நான் நாளையிலேருந்து உங்களை பார்க்கமாட்டேன் கண்ணுலேயே படாதீங்க என எந்த வார்த்தைகளையும் விடல. ஏன்னா உங்களைப் பார்த்தாலே சலனப்படற மனசு எனக்கு இல்லை.
வாங்க ஆனா என் டிரைவரா மட்டும்..
என்றபடி கடைசி வாய் காபியை ருசித்து எழுந்தாள்
அவன் அமைதியாக பின் தொடர்ந்தான்.
வரையறைகள் மாறும், இவள் வாழ்வு இப்படித்தான்
சரணடைதல் அல்லது எதிர்த்தல் மட்டுமே வழி என இலக்கணங்கள் ஏதுமில்லை. மன்னிப்பும். மாறா உறுதியும் கூட, சுமாவை நேர்கொண்ட பார்வையுடன் தான் நடக்கச் செய்தது.
இலக்கு சரியெனில் இலக்கணங்கள் மாறத்தானே வேண்டும்?