பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சில பாடல்களை தொகுத்து வழங்க முனைகிறேன். கற்றறிந்தோர் குழுமத்தில் மீண்டும் அடியேனது பதிவுகளை தொடங்குவதில் பெருமை கொள்கிறேன்.
” அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் “
அன்பே பெரிது என்றனர் சான்றோர்கள்.
இதற்கு நற்சான்றாய் அமைந்த பாடல்.
” சுனைவாய்ச் சிறுநீரை யெய்யாதென் றெண்ணிப் பிணைமான் இனிதுண்ண வேண்டி- கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி”.
ஐந்திணை ஐம்பதில் உள்ளது இந்தப் பாடல். என்ன நூலை இயற்றியவர் மாறன் பொறையனார் என்பவர்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஒவ்வொரு திணைக்கும் பத்து பாடல்கள் வீதம் ஐந்து திணைகளுக்கு ஐம்பது பாடல்கள் கொண்டு திகழ்கிறது.
சுனையில் நீர் சிறிதே உள்ளது. அந்நீரைத் தன் பிணைமான் உண்டல் இனிது என எண்ணுகிறது கலைமான் அதாவது ஆண் மான். ஆனால் பிணைமானோ ( பெண்மான்) கலைமான் உண்ணாதிருக்கும் போது தான் மட்டும் உண்ண மறுக்கும் பான்மையுடையது. ஆகவே கலைமான் ஒரு வழி செய்தது. அது நீரை உறிஞ்சி குடிப்பது போலப் பாவனை செய்ய, அதை உணராத பிணைமான் நீரை குடித்தது.இந்த அன்பு காட்சியை கொண்டது தான் மேற்படி அமைந்த பாடல்.
முருகப்பா ஷண்முகம்
