அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான தர நிர்ணய ஆணைய ஒப்புதல் அறிவிப்புவெளியீடு..!

 அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான தர நிர்ணய ஆணைய ஒப்புதல் அறிவிப்புவெளியீடு..!

அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான புதிய விதிக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய (லேபிளிங் மற்றும் காட்சிப்படுத்துதல்) விதிகள் 2020-ன் படி, உணவு தர நிர்ணயிப்பாளர் பொதுவெளியில் வரைவு அறிவிப்பினை வெளியிட்டு பல்வேறு பங்குதாரர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று முடிவுகளை எடுப்பார்கள்.

எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்டுள்ள ஒப்புதல் குறித்த அறிவிப்பில், அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களிலுள்ள உப்பு, சர்க்கரை, கொழுப்பு போன்ற ஊட்டச்சத்து விவரங்களைப் பெரிய அளவிலான எழுத்துகளில் நன்றாகத் தெரியுமாறு அச்சிடும்படி அறிவுறுத்தியுள்ளது.

நுகர்வோர் தாங்கள் வாங்கும் உணவுப் பொருளின் ஊட்டச்சத்து அளவினைத் தெரிந்துகொண்டு ஆரோக்கியமான முடிவுகளை எடுக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும், இது நாட்டில் அதிகரித்து வரும் தொற்றாத நோய்களை எதிர்கொள்ள உதவும் என்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை குறித்த முடிவு எஃப்எஸ்எஸ்ஏஐ தலைவர் அபூர்வ சந்திரா தலைமையில் நடந்த 44-வது கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், வர்த்தக அமைச்சகம், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சகம் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முக்கிய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொழிற்சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பல்வேறு பங்குதாரர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் இணையமுறை வணிகத்தில் உணவுப்பொருள்கள் தயாரித்து விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள் ‘ஆரோக்கியமான பானங்கள்’, 100% பழச்சாறு’, ‘சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு’ போன்ற தவறான மற்றும் பொய்யான தகவல்களைத் தெரிவிக்கும் வாசகங்களை நீக்குமாறு எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தியுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...