இன்று தாக்கலாகிறது மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதா..!

 இன்று தாக்கலாகிறது மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதா..!

கள்ளச்சாராயத்திற்கு முடிவு கட்டும் வகையில், கடுமையான சட்டப்பிரிவுகளுடன் மதுவிலக்கு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கள்ளச்சாராயத்திற்கு முடிவு கட்டும் வகையில், கடுமையான சட்டப்பிரிவுகளுடன் மதுவிலக்கு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தில் மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த 20ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலித்தது. கூட்டத்தொடர் முழுவதும் கருப்பு உடையில் வந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், பாஜக, அதிமுக, தேமுதிக என அரசியல் கட்சிகள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், ஆளுநரை சந்தித்து, கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கவும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், கடுமையான சட்டப்பிரிவுகளுடன் தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத் துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர்,

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பொருட்களை காய்ச்சுதல் போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாக இல்லை என்று கூறினார். இக்குற்றங்களை முற்றிலும் தடுப்பதற்கு முதற்கட்டமாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் நடவடிக்கையால் கள்ளச் சாராய குற்றங்கள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டின் மே மாதம் வரை கள்ளச்சாராயம் தொடர்பாக 4,968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,959 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் சுமார் 74 ஆயிரம் மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 73 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பிலான மதுவகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...