இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை..!
மக்களவை தேர்தலுக்கு பிறகு முன்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார்.
மேலும் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதே சமயம், பொது நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன. இதனிடையே, இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படாமல், 22ஆம் தேதியுடன், தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 2024 ஜூன் மாதம் 24 ஆம் தேதி காலை சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்குள் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே ஜூன் 20 ஆம் தேதியே தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழக சட்டசபை இன்று (20-06-24) கூடுகிறது. முதல் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மெளன அஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும், இந்த சட்டசபைக் கூட்டத்தில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படவுள்ளது.