2024 ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார், பால் சாகித்திய புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு..!

 2024 ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார், பால் சாகித்திய புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு..!

ஆங்கில எழுத்தாளரான கே.வைஷாலி மற்றும் ஹிந்தி எழுத்தாளர் கௌரவ் பாண்டே உள்பட 23 எழுத்தாளர்கள் பல மொழிகளில் மதிப்புமிக்க யுவ புரஸ்கார் விருதுகளையும், பால சாகித்ய புரஸ்கார் விருதை வென்ற 24 பேரின் பெயர்களையும் சாகித்திய அகாதெமி சனிக்கிழமையன்று அறிவித்தது.

சமஸ்கிருதத்தில் யுவ புரஸ்கார் வெற்றியாளர் யார் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அகாதெமி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சாகித்திய அகாதெமியின் நிர்வாகக் குழுத் தலைவர் ஸ்ரீமாதவ் கௌசிக் தலைமையில் இன்று (ஜூன் 15) நடைபெற்ற கூட்டத்தில், சம்பந்தப்பட்ட மொழியில் தலா மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 23 எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுக்க ஒப்புதல் அளித்தது.

கே. வைஷாலி தனது ஹோம்லெஸ்: க்ரோயிங் அப் லெஸ்பியன் அண்ட் டிஸ்லெக்ஸிக் இன் இந்தியா” என்ற நினைவுக் குறிப்பிற்காக கௌரவிக்கப்படுகிறார். கௌரவ் பாண்டே தனது ஸ்மிருதியோன் கே பீச் கிரி ஹை பிருத்வி” என்ற கவிதைத் தொகுப்பிற்காக விருது பெறவுள்ளார்.

யுவ புரஸ்கார்

யுவ புரஸ்கார் விருது 10 கவிதை நூல்கள், 7 சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஒரு நாவல், ஒரு கஜல் புத்தகம் மற்றும் ஒரு நினைவுக் குறிப்பு ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.

லோகேஷ் ரகுராமன் (தமிழ்), நயன்ஜோதி சர்மா (அஸ்ஸாமி), சுதபா சக்ரவர்த்தி (பெங்காலி), ராணி பரோ (போடோ), ஹீனா சௌத்ரி (டோக்ரி) , ரிங்கு ரத்தோட் (குஜராத்தி), ஸ்ருதி பி.ஆர் (கன்னடம்), முகமது அஷ்ரப் ஜியா (காஷ்மீர்), அத்வைத் சல்கோன்கர் (கொங்கனி), ரிங்கி ஜா ரிஷிகா (மைதிலி), ஷியாம்கிருஷ்ணன் (மலையாளம்), வைகோம் சிங்கிங்கன்பா (மணிப்பூரி), தேவிதாஸ் சவுதாகர் (மராத்தி), சூரஜ் சபாகெய்ன் (நேபாளி), சஞ்சய் குமார் பாண்டா (ஒடியா), ரந்திர் (பஞ்சாபி), சோனாலி சுதார் (ராஜஸ்தானி) , அஞ்சன் கர்மாகர் (சந்தாலி), கீதா பிரதீப் ரூபானி (சிந்தி), ரமேஷ் கார்த்திக் நாயக் (தெலுங்கு) மற்றும் ஜாவேத் அம்பர் மிஸ்பாஹி (உருது) ஆகியோரும் யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

யுவ புரஸ்கார் விருது பெற்றவர்களுக்கு, செப்புப் தகடு அடங்கிய விருதும், 50,000 ரூபாய்க்கான காசோலையும் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்.

பால சாகித்திய புரஸ்கார்

பால சாகித்திய புரஸ்கார் விருதுக்காக, ஆங்கில எழுத்தாளர் நந்தினி சென்குப்தாவை அவரது வரலாற்றுப் புனைவுக் கதையான தி புளு ஹார்ஸ் அண்ட் அமேஸிங் அனிமல் ஸ்டோரீஸ் ஃப்ரம் இண்டியன் ஹிஸ்ட்ரி” மற்றும் தேவேந்திர குமாரின் குழந்தைகள் கதைகளின் தொகுப்பு “51 பால் ககானியான்” ஆகியவற்றிற்காக தேர்வு செய்துள்ளது.

ஏழு நாவல்கள், ஆறு கவிதைப் புத்தகங்கள், நான்கு கதைகள், ஐந்து சிறுகதைகள், ஒரு நாடகம் மற்றும் ஒரு வரலாற்றுப் புனைவுக் கதை ஆகியவற்றுக்கு பால் சாகித்திய புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

பால சாகித்திய புரஸ்கார் விருதுக்காக ரஞ்சு ஹசாரிகா (அஸ்ஸாமி), திபன்விதா ராய் (பெங்காலி), பிர்கின் ஜெகோவா மச்சாஹரி (போடோ), பிஷன் சிங் ‘டார்டி’ (டோக்ரி), கிரா பினாகின் பட் (குஜராத்தி) மற்றும் கிருஷ்ணமூர்த்தி பிலிகெரே (கன்னடம்), முசாஃபர் ஹுசைன் தில்பர் (காஷ்மீரி), ஹர்ஷா சத்குரு ஷெட்டியே (கொங்கனி), நாராயணீ (மைதிலி), உன்னி அம்மையம்பலம் (மலையாளம்), க்ஷேத்ரிமாயூன் சுபாதானி (மணிப்பூரி), பாரத் சாசனே (மராத்தி), பசந்த தாபா (நேபாளி) மற்றும் மனஸ் ரஞ்சன் சமால் (ஒடியா), குல்தீப் சிங் தீப் (பஞ்சாபி), பிரஹலாத் சிங் ‘ஜோர்தா’ (ராஜஸ்தானி), ஹர்ஷ்தேவ் மாதவ் (சமஸ்கிருதம்), துகல் துடு (சந்தாலி), லால் ஹோட்சந்தானி ‘லச்சார்’ (சிந்தி), யுமா வாசுகி (தமிழ்), பி சந்திரசேகர் ஆசாத் (தெலுங்கு) மற்றும் ஷம்சுல் இஸ்லாம் ஃபரூக்கி (உருது) ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

பால சாகித்திய புரஸ்கார் வெற்றியாளர்களுக்கு, செப்புப் தகடு அடங்கிய விருதும், 50,000 ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்படும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...