வங்கக்கடலில் இன்று புயல் சின்னம் உருவாகும் – வானிலை மையம் அறிவிப்பு..!
தென்மேற்கு வங்கக் கடலில் இன்று புயல் சின்னம் உருவாகிறது. இது வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, மே 24-இல் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் 6 நாள்கள் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,
“தென்மேற்கு வங்கக் கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வலுவடைந்து, இன்று (மே 22) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். மேலும், இந்தப் புயல் சின்னம் வடகிழக்கு திசையில் நகர்ந்து, வெள்ளிக்கிழமை (மே 24) காலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மையம்கொண்டு வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும்.
இந்தப் புயல் சின்னம் தமிழக கரையையொட்டி உருவாகி வடகிழக்கு திசையில் வங்கதேசம் நோக்கிச் செல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இன்று முதல் மே 24 வரை இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை எச்சரிக்கை:
தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை கனமுதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வெள்ளி முதல் சனிக்கிழமை (மே 25-27) வரைதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று (மே 22) கர்நாடக, கேரள கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். நாளை (மே 23) கேரள கடலோரப் பகுதி, குமரிக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதி, தெற்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்”
என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தையொட்டி உருவாகும் புயல் சின்னம், நாளை மறுநாள் (மே 24) புயலாக மாறும்போது அதற்கு ‘ரிமால்’ என்று பெயர் சூட்டப்படும் என்று வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்போதைய கணிப்புப்படி இந்தப் வங்கதேசம் நோக்கிச் செல்லவே வாய்ப்பு அதிகம் உள்ளது. வடகிழக்கு நோக்கி புயல் நகர்ந்துவிட்டால் தமிழகத்தில் மீண்டும் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.