உதகையில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழை..!
நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, உதகையில் அமைந்துள்ள அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளில் தண்ணீரின் அளவு குறைந்து கடும் வறட்சி ஏற்பட்டு வந்தது.
அதேபோல் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக திகழும் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் சாகுபடி முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த இரண்டு நாட்களாக பகல்
நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் மாலை நேரங்களில் லேசான சாரல் முதல் மிதமான மழை பெய்து வந்தது. இதையடுத்து, உதகையில் இன்று பிற்பகல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தேயிலை மற்றும் மழை காய்கறிகள் சாகுபடி செய்யும் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.