“பூத் ஸ்லிப் இல்லையென்றாலும் வாக்களிக்கலாம்” : தலைமைத் தேர்தல் அதிகாரி..!
பூத் ஸ்லிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்க முடியும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் 190 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். மேலும் 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்காளர்கள் வாக்களிக்கலாம். பூத் ஸ்லிப் இல்லாதவர்களுக்கும் விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.