தேர்தல் நாளன்று (ஏப்ரல் 19 ) திரையரங்குகள் இயங்காது..!
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் திரையரங்குகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள் தவிர அரசியல் தலைவர்களின் சமூக வலைதள பக்கங்களும் சில நாட்களாகவே பெரும் கவனிப்பை பெற்று வருகின்றன.
தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளன்று வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடியவிடுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
அதனால் அன்றைய தினம் அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளிகள் கல்லூரிகள், டாஸ்மாக் கடைகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்றைய தினம் திரையரங்குகளும் இயங்காது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஆனாலும் மளிகைக் கடைகள், மருந்தகங்கள், பால் பூத்துகள் உள்ளிட்டவை இயங்கும் என்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் நேராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.