தமிழ்நாட்டில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்பு.. 664 மனுக்கள் நிராகரிப்பு..!
தமிழ்நாட்டில் வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிவடைந்துள்ள நிலையில், ஆயிரத்து 85 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி மாலை 3 மணியுடன் முடிந்தது. மொத்தமாக 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக, கரூரில் 73, வட சென்னையில் 67, தென் சென்னையில் 64 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அந்தந்த தொகுதி பொது பார்வையாளர்கள் முன்னிலையில், மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனுக்கள், பிரமாண பத்திரங்களில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா? என்பது தேர்தல் நடத்தும் அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மனுவாக ஏற்கப்பட்டது. வேட்பாளர்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள், உரிய ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 1,085 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இறுதிப் பட்டியலின் படி, அதிகபட்சமாக கரூரில் 56 மனுக்களும், குறைந்தபட்சமாக நாகையில் 9 மனுக்களும் உள்ளன. போட்டியிட விரும்பாதோர் தங்களது மனுக்களை நாளைக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இதைத் தொடர்ந்து நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலை பொருத்தவரையில் 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 8 நிராகரிக்கப்பட்டு 14 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.