பென் நெவிஸ் -மலைச்சிகரம் / தொடர் பகுதி {2}
பென் நெவிஸ் -மலைச்சிகரம் / தொடர் பகுதி {2}
தொடக்கத்தில் இருந்த புத்துணர்ச்சி அப்படியே இருக்க, சறுக்கி விழுந்த கல்லை திரும்பி பார்த்து விட்டே ஆரம்பிக்க, ஆரம்பித்து சிறிய அச்சம்.
அதுவரை வந்த பாதையை காட்டிலும் இப்போது பாதை சற்று கடினம் அதிகமாகவே இருந்தது. கற்கள் மேலும் கீழுமாக அடக்கியதாக பாதையமைந்தது.
கைப்பேசி சட்டைப்பையில் சென்றுவிட இரும்பு குச்சிகளை கைகள் உறவாய் கொண்டன.
சங்கிலி பொருத்திய அந்த காலணியில் நடக்க கிடைத்த ஓசையும் புதிதாய் இருந்தது, படங்களில் கொலைகாரன் அமைதியாக கருப்பு காலணியில் நடந்து வரையில் மிகைப்படுத்தி கேட்கும் சத்தமது. அந்த அனுபவம் மனதில் சிறு மகிழும் கொடுத்தது ஏதோ நாம் புதிதாய் செய்வது போன்ற அற்ப ஆசையால்.
பாதை கொஞ்சம் கொஞ்சமாக செங்குத்தாக மாறியது முரளியும், சூரியும் பேசியது போலவே வேகமாய் முன்னேறினர். விக்கியும், நானும் அவர்களை காட்டிலும் மிக மெதுவாய் சென்று கொண்டிருந்தோம்.
நான் உறைபனியில் நடப்பதில் மிக்கவனமாய் நடந்தேன், காலணியின் கீழ் இருக்கும் இரும்புக் குத்தியை பனியில்
நன்றாக அழுத்திய பின்பே அடுத்த அடியை எடுத்து வைத்தேன்.
கதிரவன் தாக்கம் குறைந்து வெளிச்சம் மட்டும் கொடுக்கும் கருவியாய் மாறினான், ஒரு அரை மைல் தாண்டியிருப்போம், அப்போது நான் கண்ட காட்சி, இக்கணம் நினைத்தாலும் மனம் அவ்விடம் செல்ல ஏங்குகிறது.
ஆம், ஆதவன் கீழ் இருந்த அத்தனை மேகங்களும் விலகி நாங்கள் ஏற வேண்டிய அந்த பாதை தெள்ள தெளிவாய் தெரிந்தது. பெரியகோவில் கட்டுமானத்திற்காக கோபுரத்தை சுற்றி மணல் மேடுகளால் குறுக்கு மறுக்கான பாதையை உருவாக்கினர் என படித்திருப்போம். அதே போன்றுதான் இதுவும் இருந்தது. இரண்டு வித்தியாசம் உணர்ந்தேன், பாதை மலையை சுற்றிச் செல்லாமல் முன்பக்கமே வளைந்து நெளிந்து செல்கின்றன.இரண்டாவதாக நான் முதல் முறை அவ்வளவு உயரமான பனிமலையை காண்கிறேன். மலையை பாதிதூரம் அடைந்தும் மலையின் உச்சி இரண்டு மூன்று பெரிய கோவிலின் உயரம் தாண்டி போய்க்கொண்டிருந்தது.
அச்சம் கிளைவிடத் தொடங்கியது, மக்கள் ஈரடி பாதையில் மிகவும் கவணமாகவும் பொறுமையாகவும் ஏறவும் இரங்கவும் செய்கின்றனர். நாங்கள் நடையை தொடங்கிய பின்பு எங்களை தாண்டி யாரும் செல்லவில்லை என்ற அற்ப கர்வம் வேறு.
பனிமலையை படமெடுக்க கூட முடியாத சூழலாய் நிலமை மாறத் தொடங்கியது, கையுறையை கழ ட்டினால் விரல்கள் விநாடிகளில் விரைக்க ஆரம்பித்தது. மெது மெதுவாக பனிகளில் நடையை தொடர்ந்தோம். விக்கியும், நானும் எங்களுடைய வேகம் குறைந்ததை உணரந்தோம், உயரம் செல்லச் செல்ல மூச்சுவாசம் சிரமப்பட தொடங்கியது விளைவாய் மூச்சிறைப்பு அதிகமாயிற்று.
முடிந்தவரை வேகத்தை குறைக்காது நடந்து கொண்டிருந்தோம், தாகத்தினால் நின்றதை காட்டிலும் குளிரின் களைப்பினால் இரண்டு முறை அமர்ந்தே நடையை தொடர்ந்தோம்.
மலையில் ஏற ஏற குறிஞ்சியின் அழகு கண்களை பறித்து வைத்து கொண்டது
, அருணன் அடிக்கடி ஆசி வ ழங்க அருகில் இருக்கும் மலைகள் தெள்ள தெளிவானது.
கண்ணெதிரே பனியால் போர்த்திய மாபெரும் மலை, உவமை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று ஆனால் அந்த அழகுக்கு என்னால் உவமையை கூற நிச்சயம் முடியவில்லை.
மனம் கொள்ளைப் போகும் அளவு இன்பம் கொண்டது அந்தக் காட்சியைக் காண, எவ்வளவு இன்பமெனில் பிறந்த கைக்குழந்தை அழுகையில், கைகளில் ஏந்தி அதன் கண்களின் ஊடாக நம் மனமகிழ்வை கடத்த அக்குழந்தை அழுகை மறந்து சிரித்தால்,எவ்வளவு இன்பமும், ஆச்சரியமும் யாருக்கும் இது கிட்டவில்லையென்ற கர்வம் இருக்குமோ அப்படிப்பட்ட தருணம்.
நிமிடம் தாண்டி நின்று மனதில் படம் எடுத்துக்கொண்டக் காட்சி அது, பயணம் தொடந்தது. அந்த காட்சி தந்த உற்சாகம் உயரப் பறந்தது, வெகு நேரம் கழித்து காலடிகள் கடினமில்லாதது போல் தெரிந்தது. நடையைக் கட்டினோம்.கொஞ்சம் கொஞ்சமாக பாதை குறுகிட ஒற்றையடிப் பாதைப் போல் ஆனது. நாம் நடக்க அது போதுமென்றாலும் எதிர் திசையில் யாரேனும் வந்தால் நாம் குறிப்பிட்ட இடம் நின்று வழிவிடத் தேவை இருந்தது. அதன் பொருட்டு உற்சாகம் போய் சலிப்புத் தட்ட தொடங்க வந்த பாதையை எட்டிப் பார்த்தால் பனி மட்டுமே பிரதானமாய் இருந்தது, கூர்மையான அகலமான கரும்பாறைகள் மட்டுமே ஆங்காங்கே தென்பட்டது.
எனக்கு இறைப்பு அதிகமாயிற்று.இதனால் ஓரிரு இடங்களில் தடுமாறவும் நேர்ந்தது, இரு ம்பு குச்சிகளின் ன் உதவியை முன்னை விட அதிகம் நாடினேன், எதிர் திசையில் வருபவர்களிடம் எவ்வளவு தூரம் இன்னும் இருக்கிறதென்று அடிக்கடி கேட்டுக் கொண்டோம். ஒருசிலர் மன ஆறுதலுக்காக இன்னும் மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரம்தான் என் நம்பிக்கை கூறினர்.
சிரமத்தின் அளவு அதிகரித்து கொண்டே போக ஓய்வு எடுக்க விக்கி அடிக்கடி அமர்ந் தார்.
வீம்புப்பிடியாய் எங்கேயும் அமராமல் தொடர்ந்தேன் அவரை, ஓரிடத்தில் ஓய்வு முடித்து பயணத்தை தொடங்க முன்னே விக்கியும் பின்ன ஒரு நாலடி இடைவேளியில் நானும் நடந்து கொண்டிருக்க எதிர்நோக்கி வந்த பெரியவருக்காக வழிவிட்டு நின்றோம், எங்களைப் பார்த்துக்கொண்டே களைப்பாய் வந்தவர் பாதை சறுக்கிட கீழே வேண்டியவரை விக்கி எதிர்திசையில் தள்ளி தாங்கிப்பிடித்தார். பதறிய அந்த பெரியவரை ஆசுவாச படுத்து வழிவிட்டு அனுப்பினோம்.அவரது தோள் பையில் ஒருநாய் குட்டி வேறு குளிரில் நடுங்கி கொண்டிருந்தது.
எனக்கோ விக்கியை கண்டு மிகவும் பெருமை, ஏனெனில் அவரை விக்கி தாங்கிப்பிடிக்காவிடில் அவர் கீழே விழுந்திருக்க கூடும், அப்படி விழுந்திருப்பாரெனில் ஓர் உயிர் போவதை கண்முன்னே கண்டிருக்க கூடும். ஆம், அத்தகைய வயோதிகர் பாறைகளில் அடிப்பட்டால் கீழே சமவெளிக்கு தூக்கிச் செல்வதற்க்கு நிச்சயம் மூன்று மணிநேரம் ஆகியிருக்கும் அதுவரை அவர் பிழைத்திருப்பது கடினமே.
அவரைப் பாராட்டிக்கொண்டே நடையை தொடங்க அதீத கவனத்துடன் காலடிகளை எடுத்து வைத்து நடந்து கொண்டிருந்தேன். வெய்யோன் மேகங்களின் இடையில் மறைய தொடங்கினான். வினையாய் காற்றின் வேகம் அதிகரித்தது ஆனால் இம்முறை இலவச இணை ப்பாய் பனிச்சாரலாய் காற்று பறந்தது. காற்றின் வேகம் அதிகரிக்க அடிக்கடி நின்றேன். பயம் பற்றிக்கொண்டது. பொதுவாக மலையேறுகையில் கீழே பார்க்க கூடாதென சொல்வார்கள் அது நிச்சயம் உண்மைதான்.
நான் கீழே எட்டிப் பார்த்தேன், என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனி மட்டுமே, விக்கியும் தடுமார பயம் அதிகமானது. இச்சூழலிலும் ஆங்கிலேயர்கள் பயம் கடந்து நடையை தொடந்து கொண்டுதான் இருந்தனர். அதிலும் குறிப்பாய் ஓர் குழுவினர் கம்பளித் தோல் உடைய நாயை அழைத்துக் கொண்டு இறங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் முகத்தில் இருந்த சிரிப்பும் அவர்களது வாழ்த்தும் ஒரு அசட்டு நம்பிக்கையை தந்தது. கையுறையை க ழ ட்டி கைப்பேசியை எடுத்து ஒளி நாடாப்பதிவு செய்து கொண்டேன். கைகள் குளிரும் முன்னே விக்கி நடந்து வருவதையும் பதிவு செய்து கொண்டேன்.
இவையனைத்தும் நிமிட இடைவெளியில் நடந்தது, மறுபடியும் கைப்பேசி சட்டைப்பை செல்ல கையுறை கவசமானது. நீர் எடுத்துக்கொண்டோம். நடையை தொடர்ந்தோம் அந்த பனிக்குவியலில் இரும்புக்குச்சிகளே எங்களுக்கு நம்பிக்கை விளக்காய் இருந்தது அதன் ஆழத்தையும் இருக்கத்தையும் நம்பியே அடுத்தடுத்த அடி நகர்ந்தது. வேகம் முற்றிலும் முறிந்தது, காற்றின் வேகத்தால் ஓரிரு முறை பாதைமாறி யும் அடிகள் எடுத்து வைத்தேன். ஆங்கிலேயர் ஒருவர் வேண்டாம் பாதையை மட்டும் பின்தொடரென்று சை lகைக்காட்டி சிரித்து சென்றார்.எதிர் திசையில். தலையசைவில் நன்றி கூறியபடி பாதையில் அடி எடுத்து ஆமை வேகத்தில் நடந்தேன்.
பனியின் தாக்கம் அதிகமாய் இருந்தது. பத்தடி தள்ளி நிற்பவரை பனிச்சாரல் கானல் நீர் பிம்பம் போல் ஆக்கியது, மலைமுகடு போல் ஒன்று பார்த்தேன் அதனை எல்லையென நினைத்து அடிகளை அடிக்கடி வைத்து அடைந்தேன். மூச்சிறைப்பு அதிகமானது. விக்கி வரும்வரை காத்திருந்தேன், வந்தமர்ந்தார் தாகம் தீர்க்க தண்ணீர் திறந்தேன். அடித்த காற்றில் நீர்ப்பையின் மூடி பறந்து போனது அது போன வேகத்தில் இருநொடியில் மறைந்து போயிற்று. விக்கி அதை எடுக்க முயற்ச்சிக்கிறேன் என்றார், ஆம் நீங்கள் நினைப்பது போல அது தேவையில்லாத வேலை என்றே அவரிடம் கூறி நீரைப் பருகிவிட்டு நடையை தொடர்ந்தோம்.
அதுவரையில் எங்கள் பின்னே இருந்து யாரும் எங்களை முந்தவில்லை.ஆனால் ஒரு முப்பது வயது மதிக்கதக்க இளைஞன் எங்களை கடந்தான். அவன்தான் முதல் நபர் எங்களுக்கு பின் ஆரம்பித்து எங்களை கடப்பது, கர்வம் முறிந்து போனது. அதுவும் அவன் கையில் குச்சியில்லை, நடையில் பெரிய சலனமில்லை. ஆயிரம் முறை அந்த பாதையில் சென்றவன் போல் மிக எளிதாக நடந்து சென்றான். நாங்கள் பார்த்தவரை அவனளவுக்கு நிதானாமாக வேகமாக யாரும் நடக்கவில்லை. எங்களை கடந்தவன் வெகுவேகமாய் எட்டா தூரம் சென்றான்.
நடையை தொடரந்தோம்.முன்போல் பாறைப் பாதையில்லை, உறைப்பனி பயமில்லை ஆனால் பனிப்புயலும் அதில் பறந்த பனித்தூள்களும் முகத்தில் மணல் அடிக்க தலையைக் குணிந்து நடந்து கொண்டிருந்தோம். அறுபது வயது பாட்டி அடுத்த மலைமுகட்டில் சிரமப்பட்டு நிற்பதை பார்த்தோம்.எதிரில் வந்தவரிடம் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கேட்க அவர் இன்னும் அரைமணி நேரமாகுமென்றார்.
மனமே விட்டுப் போனது தமிழ் சினிமாக்களின் நகைச்சுவை காட்சிகள் போலானது நிலைமை. (தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கி.மீ நகைச்சுவை தான் நியாபகம் வந்தது) அவ்வளவு சிரமத்திலும் சிரித்துக் கொண்டே நடையை கட்ட ஒரு மிகப்பெரிய பனிமலை இருந்தது. அதுவும் செங்குத்தாக இருந்தது அதன் உயரம் சுமார் இரு பது இரு பத்தைந்து அடி இருக்கும். நான் குச்சியின் உதவியால் மனம் விடாது ஏறினேன் ஆம் சிரிப்புகள் தாண்டி இதை முடித்தே ஆகவேண்டுமென்ற திமிர் தலையேறியது.
கண்ணீர் கசிந்தது, மூக்கில் நீர் ஒழுகியது பாதிதூரம் ஏறி திரும்பி பார்க்க நல்ல மனம் கொண்ட விக்கி அந்த பாட்டி மேலேயேற உதவி செய்து கொண்டிருந்தார் அதன் பொருட்டு அவர் மிகப்பொருமையாய் வந்தார். நான் நடையை தொடரந்தேன் அந்த மிகப்பெரிய பனி மலையை கடந்தேன். நிதர் சனம் என்னவென்றால் அந்த பனிமலையை கடக்கவே எனக்கு இரு பது நிமிடமானது. விக்கிவரும் வரை காத்திருந்தேன், காற்றின் வேகம் மிக பலமானது கதிரவனை காணகிடைக்கவில்லை. எங்குநோக்கினும் வெள்ளைத்துகள்கள் பறந்து கொண்டிருந்தன.
அவர்கள் வருவதற்குள் எதிர்நோக்கி வந்தவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என கேட்க நான் கிட்டதட்ட முடித்துவிட்டேன் இன்னும் பத்துநிமிடம் கூட ஆகாதென்றார். அந்தகணம் நான் பெற்ற இன்பம் அளவிடமுடியாதது. ஏறிவந்த விக்கி நான் விசாரித்ததை கேட்டு இவர்களின் பத்து நிமிடம் நமக்கு அரை மணி நேரம் தாண்டுமென்றார். இன்பம் அத்துனையும் இருளானது சிரித்து கொண்டே ஆம் அப்படியிருக்க வாய்பிருக்கிறது என்று கூறி நடையை தொடரந்தோம்.
பனிப்புயல் கோரமாய் வீசியது, இரும்பு குச்சிகளை ஊணி காலடி எடுத்து வைப்பதே கடினமாய் இருந்தது எனக்கு. விக்கியின் பாடும் அந்த பாட்டியை பாதுகப்பாய் அழைத்து வர வேண்டி இருந்தது. ஒரு பத்து நிமிட நடைக்குப்பின் காற்றின் ஒலி காதையும் வலிக்க செய்தது. என் வாழ்வில் நான் எதிர்கொண்ட மிக மிக கடுமையான் காற்று அது, ஏன் அப்படி இருக்காது தரைப்பரப்பிலிருந்து நான்காயிரத்து நானூற்று பதிமூன்று அடி உயரத்தில் அடிக்கும் காற்றாயிற்றே.
ஆம், வந்தடைந்து விட்டோம் “பென் நெவிஸ்” மலைமுகட்டை அடைந்து விட்டோம்.
விக்கியும் அந்த பாட்டியும் அந்த உச்சியில் இருந்த மிகச்சிறிய குகைக்குள் நுழை ந்தனர், நானோ அந்த கொடுமுடியை நோக்கி சீறி நடந்தேன்.
நான்கரை மணி நேரத்து கடின உழைப்பின் பலனாய் அந்த கொடுமுடியை முதலில் தொட்டு விட்டு குகைக்குள் செல்ல விரும்பினேன். கையுறையை கழட்டினேன்.குளிர் கையை விரைக்கச் செய்தது இருந்தும் ஒளி நாடாப்பதிவு செய்தேன் என்னையும் மறந்து அதில் நிறைய பேசினேன், மகிழ்ச்சிக்கு இடையில் அடிக்கும் காற்றின் சத்தத்திற்கு மத்தியில் என் குரல் குரலற்றது போலானது.
குகையை நோக்கி சென்றேன், வெளியில் ஒரு நான்கு ஐந்து பேர் கயிறு கொக்கிகளுடன் தயாராகி கொண்டிருந்தனர், குகையினுள் வெள்ளைகார இளைஞனும், முரளியும், சூரியும் ஏற்கனவே அமர்ந்திருந்தனர் கூடவே விக்கியும் அந்த பாட்டியும் உள்ளே செல்லக் குகை நிரம்பியது. ஆம், அவ்வளவு சிறிய குகை.
வேறுவழியின்றி வெளியே அமர்ந்தேன், உண்மையை கூறவேண்டுமெனில் மலையை தொட்ட மகிழ்ச்சியில் குளிரை பற்றி மனதிற்கு பெரிதாய் தெரியவில்லை. குகையால் காற்றும் நேராய் என்மீது படவில்லை எனவே ஒரு சின்ன விடுதலை.
தோல்ப்பையை பிரித்து அதில் கொண்டுவந்த அவித்த வைத்த
முட்டையை அனைவரிடமும் கொடுத்தேன். முரளியின் அறிவுரை இதன் முக்கியத்துவத்தை உணர்த்தியது. ஆம், அவருடைய அனுபவம் எவ்வளவு புரதசத்து தேவை மலையேற என்பதை உணர்த்தியிருந்தது. அந்த பாட்டியும் உட்பட அனைவரும் அதை உணவாய் சாப்பிட்டோம்.
வெள்ளைகார இளைஞன் வெளியேற , அவனை தொடர்ந்து பாட்டியும் அவனை பின் தொடர இடமிருக்க குகைக்குள் சென்றேன்.
நிலைமை மோசமானது, புகையிலை நாற்றமும் போதைப்புகை நாற்றமும் அந்த இடத்தை கொடுங்கோல் ஆட்சி செய்துகொண்டிருந்தது, எப்படி நீங்கள் சமாளிக்கிறீர் என் நண்பர்களை கேட்க வேறு வழியில்லையென்று இயல்பை காட்டினர்.
என்னுடைய எண்ணப்படி அந்த குகையில் இரு பது நிமிடமாவது ஓய்வு எடுத்து கீழிறங்க தொடங்கலாமென்று நினைத்தேன்.ஆனால் அதிகபட்சம் ஐந்து முதல் ஏழு நிமிடம் இருந்திருப்பேன். நான்குபேரும் அங்கே புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என்னுடைய குறிபேட்டில் கொஞ்சம் எழுதினேன். கையொப்பமிட்டேன். அனைவரும் கீழ் இறங்க ஆயத்தமாகி குகைக்கு வெளியே வந்தோம்.
காத்திருந்தது பேரதிர்ச்சி…
{ தொடரும் }
_அரவிந்குமார் அண்ணாத்துரை