IPL 2024: புதிய வரலாறு படைத்தது சன்ரைசர்ஸ் அணி..!
மும்பை அணிக்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 277 ரன்கள் குவித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2013-ல் நடந்த போட்டியின்போது புனே அணிக்கு எதிராக 263 ரன்கள் எடுத்திருந்தது. இதுவே உச்சமாக இருந்த நிலையில் அதனை சன்ரைசர்ஸ் முறியடித்துள்ளது.
சன்ரைசர்ஸ் அணியின் டிராவிஸ் ஹெட், அபிசேக் சர்மா, ஹெய்ன்ரிச் கிளாசன் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் மும்பை அணியின் பவுலிங்கை வெளுத்தெடுத்தனர். இரு அணிகளும் இந்த தொடரில் முதல் வெற்றியை பெறாத நிலையில் இன்று வெற்றி பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் டிராவிஸ் ஹெட் களத்தில் இறங்கினர். மயங்க் அகர்வால் 11 ரன்னில் வெளியேற, அடுத்து இணைந்த ஹெட் – அபிசேக் சர்மா இணை மும்பை பவுலிங்கை சிக்சரும் பவுண்டரியுமாக வெளுத் தெடுத்தது.
பும்ராவை தவிர்த்த மற்ற பவுலர்களின் ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர்கள் பறந்ததால் ஐதராபாத் அணி ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். 23 பந்துகளை எதிர்கொண்ட அபிசேக் சர்மா 7 சிக்சர் 3 பவுண்டரியுடன் 63 ரன்களும், டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 3 சிக்சர் 9 பவுண்டரியுடன் 62 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கடந்த போட்டியைப் போன்று இந்த மேட்ச்சிலும் வெளுத்து வாங்கிய ஹெய்ன்ரிச் கிளாசன் 34 பந்துகளில் 7 சிக்சர் 4 பவுண்டரியுடன் 80 ரன்கள் குவித்தார். எய்டன் மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சன்ரைசர்ஸ் அணி 277 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். தற்போது 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். வெற்றி பெற்று புதிய சாதனையை மும்பை அணி ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.