மரப்பாச்சி – 24 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

 மரப்பாச்சி – 24 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 24

      நாட்கள் இரண்டு ஓடியிருந்தது. மணிமாறன் ஆபீஸ் டூர் முடித்து வீடு வந்திருந்தார். ப்ரியா ஸ்கூலுக்கு கிளம்பியிருந்தாள்.பிருந்தா கேட்டாள்..

“என்னங்க நீங்க ஆபீஸ் போகலையா?”

“ரெண்டு நாளா பயங்கர அலைச்சல். இன்னிக்கு லீவ்”

காலை உணவை கணவனுடன் முடித்தவள் “உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றாள்.

“என்ன பிருந்தா சொல்லு?”

“இங்க ஹாலுல வேண்டாம் பெட்ரூமுக்கு வாங்க”

      மணிமாறன் பெட்ரூமிற்கு நடந்தார் கூடவே பிருந்தாவும்..பெட்டில் அமர்ந்தார் மணிமாறன்.அருகில் அமர்ந்தாள் பிருந்தா..சிறிது நேர மௌனத்திற்குப் பின் பிருந்தா பேச ஆரம்பித்தாள் மணிமாறன் பிரம்மிப்பில் உறைந்தார்..

“ஏங்க நம்ம பிருந்தாவை சீரழிச்சவனை கண்டு புடிச்சிட்டேன்”

“யாரு பிருந்தா சொல்லு அவன் தலையை எடுக்கறேன்”

மணிமாறன் உடல் துடித்தது..

“நீங்க இப்படி ஆவேசப்பட்டு எதாவது செய்திடக்கூடாதுன்னு தான் அவனுக்கானா தண்டனையை நானே குடுத்திட்டேன்”

“ஐயோ என்ன செய்த பிருந்தா அவனை கொண்ணுட்டியா?”

“இல்லைங்க அதை விட பெரிய தண்டனையை அவனுக்குக் குடுத்துட்டேன்”

“அப்படி என்ன தண்டனை மொதல்ல அவன் யாருன்னு சொல்லு?”

“இந்தப் பாதகத்தைச் செய்தவன் ப்ரியாவோட ட்யூஷன் மாஸ்டர் கணேஷ்”

ஓரு கணம் அதிர்ச்சியில் உறைந்தார் மணிமாறன்.

“கல்வி போதிக்கும் ஒரு வாத்தியாரா இந்தக் கொடுமையை செய்தான்?”

“ஆமாங்க”

“நீ எப்படி கண்டு புடிச்ச?”

 பிருந்தா அவள் நண்பன் ராஜனை துணைக்கழைத்தது. அவன் மூலம் மருந்து கண்டுபிடித்தது. வீட்டுக்கு வரவழைத்து அதை கணேசுக்கு செலுத்தி அவனை ஆண்மை இல்லாதவனாக்கியது, என்று ஒன்று விடாமல் கூறினாள். பிரமிப்பின் உச்சியில் இருந்தார் மணிமாறன். இப்பொழுது அவளை நெருங்கி அமர்ந்தார் அவர். பிருந்தாவின் ஒல்லிக் குச்சி கைகளை தன் கையில் ஏந்தியவர் கூறினார்..

“இந்த மரப்பாச்சியின் இந்தக் கைகளா இந்தக் காரியத்தைச் செய்தது?”

அவள் தலைகுனிந்திருந்தாள்..

“சொல்லு பிருந்தா? எப்படி உனக்கு இத்தனை தைரியம் வந்துச்சு?”

“மொதல்ல அவனை கொல்லணும்னுதான் எனக்கு வெறி வந்துச்சு அப்புறம் தான் யோசிச்சேன் ப்ரியா மறுபடியும் தாயில்லாக் குழந்தை ஆயிடக் கூடாதுன்னு. ஆனாலும் அவனுக்கு தண்டனை தரணுமுங்கறதுல உறுதியா இருந்தேன். உங்க கிட்டச் சொன்னா நீங்க எதாவது தப்பா முடிவு பண்ணுனா இந்தக் குடும்பம் சிதைஞ்சு போயிடும் அதனால உங்க கிட்டச் சொல்லாம நான் ஆக்க்ஷனுல இறங்கினேன்”

அவளை கண் கொட்டாமல் பார்த்தவர் வினவினார்..

“யார் வயிற்றிலோ பிறந்த பொண்ணுக்காக ரெண்டாம் தாரமா வந்தவ இப்படி ஒரு செயலைச் செய்வாளான்னு எனக்கு பிரமிப்பா இருக்குது”

“என்னிக்கு ப்ரியா என்னை அம்மான்னு கூப்பிட்டாளோ அப்பவே நான் முடிவெடுத்துட்டேன் அவளுக்காகத்தான் இந்த ஜென்மமுன்னு”

“ஆனா ஒரு பொண்ணு முழுமை அடையிறது ஒரு குழந்தையை வயிற்றுல சுமக்கும் போது தான்னு நீ சொன்னியே?’

“சொன்னேன் ஆனா வயிற்றுல சுமக்காமலேயே ப்ரியா அந்த பாக்கியத்தை எனக்குக் குடுத்துட்டா”

“ப்ரியா வயிற்றுல சுமக்காமலே அந்தப் பாக்கியத்தை உனக்குக் குடுத்துட்டா சரி. நான் உன் வயிற்றுல ஒரு புள்ளையை சுமக்கிற பாக்கியத்தை கொடுக்கப் போறேன்”

ஆனந்த அதிர்ச்சியில் திக்கு முக்காடிப் போனாள் பிருந்தா..

“நீங்க என்ன சொல்ல வர்றீங்க?” என்றவளை அணைத்தவாறு படுக்கையில் சாய்ந்தார் மணிமாறன். இன்ப முனகலில் கேட்டாள்..

“எனக்கு குழந்தை பிறந்தா நான் ப்ரியாவை சித்திங்கற கண்ணோட்டதுல பார்த்திடுவேன்னு முன்னாடி சொன்னீங்களே?”

“என்னிக்குமே இந்த மரப்பாச்சி ஒரு சித்தியா நடந்துக்க மாட்டா. இந்த பாசக்காரி மரப்பாச்சி என்னிக்குமே ஒரு நல்ல தாயாத்தான் இருப்பா” என்றவள் அவளை மேலும் இறுக்கிக் கட்டிக்கொண்டார். சொர்க்கம் அந்த நான்கு சுவர்களுக்குள் சிருஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருந்தது..!

சுபம்

முந்தையபகுதி – 23

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...