கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்..!

 கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்..!

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க அனுமதிக்க கோரி ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேட்டிலிருந்து புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கலுக்கு பிறகு அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதிலும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஜனவரி 24 ஆம் தேதிக்குள் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில் இன்று மாலை 7 மணி முதல் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்துதான் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் இடப்பற்றாக்குறை, கிளாம்பாக்கத்தில் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு பேருந்துகளை நிறுத்த திரும்பவும் கோயம்பேட்டிற்கு காலியாக இயக்குவதில் எந்த பயனும் இல்லை போன்ற காரணங்களுக்காக ஆம்னி பேருந்துகள் சங்கம் இந்த உத்தரவை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது என ஆம்னி பேருந்துகள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்க வேண்டும் என திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

மேலும் ஈசிஆர் சாலை மார்க்கம் நீங்கலாக அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட வேண்டும். ரெட் பஸ், அபி பஸ் உள்ளிட்ட பயணச் சீட்டு முன் பதிவு செயலிகளில் உரிய மாற்றம் செய்யவும் போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு 7 மணிக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் எதுவும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கக் கூடாது என ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறுகையில் இந்த தொடர் விடுமுறையையொட்டி 1500 பேருந்துகளை இயக்குகிறோம். இந்த பேருந்துகளுக்கு 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. தற்போது இரு தினங்களுக்கு முன்பு கிளாம்பாக்கத்தில்தான் பயணிகளை ஏற்ற வேண்டும் என அறிவித்தால் அது பயணிகளை அலைக்கழிப்பது போல் உள்ளது.

இந்த 1500 பேருந்துகளில் 60 ஆயிரம் பேர் பயணிக்கவுள்ளார்கள். கிளாம்பாக்கத்தில் 144 பார்க்கிங் உள்ளது. இங்கு நாங்கள் எப்படி 1500 பேருந்துகளை நிறுத்த முடியும். கால அவகாசம் கொடுக்காமல் இரு நாட்களில் எல்லாவற்றையும் எப்படி மாற்ற முடியும். படிப்படியாகத்தானே மாற்ற முடியும். எங்களுக்கு வரதராஜபுரத்தில் பார்க்கிங் வசதி செய்துள்ளார்கள். அந்த இடத்தில் ஒரு கட்டமைப்பு வசதியும் இல்லை. அரசு செவி சாய்க்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என தெரிவித்தார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...