தனித்து போட்டி:மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!

 தனித்து போட்டி:மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!

லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என அக்கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். தேர்தல் தொகுதி உடன்பாடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் அக்கட்சிக்கு பதிலடி தரும் வகையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவித்துள்ளார் மமதா பானர்ஜி.

லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகளை உள்ளடக்கிய “இந்தியா” கூட்டணி உருவாக்கப்பட்டது. “இந்தியா” கூட்டணியில் 28 கட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியலில் எதிரும் புதிருமாகவும் இந்த கட்சிகள் இருந்து வருகின்றன.

லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை “இந்தியா” கூட்டணியில் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரை திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு பேச்சுகள் நடைபெற்றன. காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 2 தொகுதிதான் தர முடியும் என கறார் காட்டியது திரிணாமுல் காங்கிரஸ். எங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் பிச்சையா போடுகிறது? என எதிர்ப்பு காட்டியது காங்கிரஸ்.

இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் மிக அதிகபட்சமாக 4 அல்லது 5 தொகுதிகளைத்தான் தர முடியும் என்றது மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ். இதற்கும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தது காங்கிரஸ். மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டித் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மமதா பானர்ஜியையும் திரிணாமுல் காங்கிரஸையும் மிக கடுமையாக தொடர்ந்து விமர்சித்தும் வருகிறார்.

இந்நிலையில்தான் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என அதிரடியாக அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி. இது தொடர்பாக மமதா பானர்ஜி கூறியதாவது: காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. எப்போதுமே மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என்பதைத்தான் சொல்லி வருகிறோம். திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் என்ன நடக்கும் என்பதை பற்றி கவலை இல்லை. ஆனால் நாங்கள் மதச்சார்பற்ற கட்சி. மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவை திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே நின்று வீழ்த்தும். “இந்தியா” கூட்டணியிலும் நாங்கள் இடம் பெற்றுள்ளோம். ராகுல் காந்தி நடத்துகிற பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கு வங்க மாநிலத்துக்கும் வருகை தருகிறது. ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...