நீயெனதின்னுயிர் – 4 – ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 4 – ஷெண்பா

4

ஒரு மாதத்திற்குப் பிறகு… அந்தச் சனிக்கிழமையில் விக்ரமின் கைப்பேசி ஒலித்தது.

“ஹலோ சார்! குட்மார்னிங்.”

“ஹாய் மிஸ்.வைஷாலி! என்ன காலையிலேயே என் ஞாபகம்?” என்று  சிரிப்புடன் கேட்டான் விக்ரம்.

“ஸ்டூடண்ட்ஸ் சார்பாக உங்களுக்கு, எங்களோட நன்றியைச் சொல்லணும். உங்க செகரெட்டரிகிட்ட சொல்லி, உங்களுக்கு எப்போ வசதிப்படும், ஒரு சின்ன ஃபங்ஷன் வைக்கணும்னும் கேட்டேன். அவர் இப்போதைக்கு முடியாது; நீங்க ரொம்ப பிஸின்னு சொல்லிட்டார். சரி சார்! எந்த ஒரு அங்கீகாரமும், சரியான நேரத்தில் கிடைத்தால் தானே அதற்கு மதிப்பு? அதே போல, சொல்ல வேண்டிய நன்றியை, உடனே சொன்னால்தானே  எங்களுக்கும் சந்தோஷம்?”

“நன்றிதானே? போனிலேயே சொல்லிடுங்க!”

“நான் மட்டும் இல்லை சார். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோருமே சொல்லணும். அதனால்…”

“அச்சச்சோ! லஞ்சுக்கெல்லாம் கூப்பிடாதீங்க மேடம். உண்மையாகவே ரொம்ப பிஸி” என்று போலியாக அலறினான்.

“நீங்களும், பெரிசா எதையும் எதிர்பார்க்காதீங்க சார்! பொக்கேவும், தேங்க்ஸும் தான் உங்களுக்கு” என்றபடியே சிரித்தாள் வைஷாலி.

“கருமி கண்ணம்மா!” என்றவன், புன்னகைத்தான்.

“சொல்லுங்க சொல்லுங்க. இதுக்கெல்லாம் கவலைப்படும் ஆள், நான் இல்லை!” என்று பதிலுக்குப் பதில் பேச, இப்படியே இருவருக்கும் சற்றுநேரம் பொழுது போனது.

“ஓ! மணி எட்டரை. நான் காலேஜுக்கு கிளம்பணும். உங்களை எப்போ சந்திக்க வரலாம்னு, நீங்க ஒரு டைம் சொன்னால் நல்லா இருக்கும்”  என்றாள் தன் வேலையில் கவனமாக.

“ம்! இன்னைக்கு மதியம் ரெண்டு மணிக்கு ஓகே…?”

“தாராளமா சார். தேங்க்யூ!” என்றவள் போனை அணைத்தாள்.

புன்னகை மலர்களாக வைஷாலியும், அவளது தோழிகளும் கையில் ஆளுக்கொரு பூங்கொத்துடன், விக்ரமின் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

கடுகடுவென்ற முகத்துடன் ரிசப்ஷனிலேயே அவர்களை எதிர் கொண்டான், விக்ரமின் செக்கரட்டரி ராகவ். தன்னைக் கண்டதும் கடுகடுத்த அவனது முகத்தைப் பார்த்ததும், வைஷாலிக்கு உற்சாகம் பீறிட்டது.

‘அன்னைக்கு எனக்கு என்ன ஆட்டம் காட்டின… அது முடியாது… இது முடியாதுன்னு? இன்னைக்குப் பார்த்தியா… என்னை வரவேற்க, உன்னை வாசலுக்கே வரவழைச் சிட்டேன்!’ என்ற எண்ணத்துடன் அவனைப் பார்த்தவள்,  கிண்டலாகப் புன்னகைத்தாள்.

“வெல்கம் ஆல் ஆஃப் யூ! சார், உங்களை மீட்டிங் ஹாலில் சந்திப்பாங்க. ப்ளீஸ்…” என்றபடி முன்னால் செல்ல, “தேங்க்யூ!” என்றபடி, தோழிகளுடன் அவனைப் பின் தொடர்ந்தாள் வைஷாலி.

பத்து பேர் அமரக்கூடிய அளவிற்கு இருந்த வட்டமான பெரிய மேஜையைச் சுற்றிலும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஐவரும் அமராமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “ஹாய்!” என்று புன்னகைத்த படி, மற்றொரு வழியாக உள்ளே நுழைந்தான் விக்ரம்.

”ஹலோ சார்!” என்ற ஐவரும், புன்னகைத்தனர்.

“ப்ளீஸ் உட்காருங்க!” என இருக்கையைக் காட்டினான்.

“இந்தக் குறுகிய காலத்துல, எங்களுடைய தேவைகளை ரொம்பவே நிறைவாக செய்து கொடுத்திருக்கீங்க சார். அதுக்கு, அனைவரின் சார்பாக நன்றியைத் தெரிவிச்சிக்கிறோம் சார்!” என்றபின், பூங்கொத்தை நீட்டினாள் வைஷாலி. ஒரு புன்னகையுடன், “தேங்க்யூ” என்றபடி அதை வாங்கியவன், மற்றவர்கள் கொடுத்த பூங்கொத்தையும்  வாங்கிக் கொண்டான்.

பின்பு அனைவரும் அமர, அவர்களுக்கு ஸ்வீட், காரம் கொண்டு வந்து வைக்கப்பட, அவனது உபசரணையில் திக்குமுக்காடிப் போயினர் ஐவரும்.

“எதுக்கு சார் இந்தப் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம்?”

“உங்களையெல்லாம், கொஞ்சம் கூல் பண்ணத் தான்!” என்றவன், திடீரென அவளருகில் அமர்ந்திருந்த ஜனனியின் பக்கமாகத் திரும்பி, “உங்களோட சொந்த ஊர் எது? பேரண்ட்ஸ் என்ன பண்றாங்க?” என்று விசாரித்தான்.

இப்படியே ஒவ்வொருவரிடமும் கேட்டபின்னர், கடைசியாக வைஷாலியிடம் வந்து முடித்தான்.

“என்னோட அப்பா பெயர் சங்கரன். அம்மா பெயர் தேவிகா” என்றவள், ஒரு புகழ்பெற்ற இருசக்கர மோட்டார் வாகன உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் கம்பெனியின் பெயரைக் குறிப்பிட்டு, “அப்பா, அதில் ஜெனரல் மேனேஜராக இருக்கார். அம்மா ஹவுஸ் வைஃப்! அவங்களுக்கு, நான் ஒரே பொண்ணு!

போன வருஷம் தான் ரத்னகிரில புதுக் கிளையை ஆரம்பிச்சாங்க. அப்பா தான் இன்சார்ஜ். அதனால், அப்பா அம்மா ரெண்டு பேரும், இப்போ ரத்னகிரியில் இருக்காங்க. நான் இங்கே ஹாஸ்டலில் சேர்ந்துட்டேன்” என்றாள் விளக்கமாக.

“ஓ! என்றபடி எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டான் விக்ரம். “நீங்க எல்லோருமே வேற வேற டிபார்ட்மெண்ட்! அப்புறம் எப்படி ஃப்ரெண்ட்ஸ் ஆனீங்க?” என்றான் கேள்வியாக.

“தாய்மொழி தான் சார், எங்களையெல்லாம் ஒண்ணு சேர்த்து வச்சிருக்கு. ஹாஸ்டலிலும், எங்களுக்குப் பக்கத்துப் பக்கத்து ரூம்” என்றாள்.

முழுதாக ஒருமணி நேரத்தை விக்ரமின் அலுவலக த்தில் செலவழித்தபின்பே,  அவர்கள் ஒரு வழியாகக் கிளம்பினர்.

ஹாஸ்டலுக்கு வந்தவள் குளித்துவிட்டு, கூந்தலைக் கோதியபடியே கட்டிலில் சாய்ந்தாள். ஹிந்திப் பாடலொன்றை முணுமுணுத்தபடி அமர்ந்திருந்தவளை கைப்பேசி அழைத்தது.

“ஹலோ அம்மா! எப்படியிருக்கீங்க?” என்றது தான் தாமதம்…, “ஏண்டி! நீ என்கிட்ட ஒழுங்கா பேசி, ஒரு மாசத்துக்கு மேல ஆகுது. இன்னைக்காவது உனக்கு டைம் இருக்கா? இல்லை…, பேசிட்டு இருக்கும் போதே, போனைக் கட் பண்ணப் போறியா?” என்று சூடாகக் கேட்டார் தேவிகா.

“இத்தனை நாளும், கொஞ்சம் வேலை இருந்துச்சும்மா. இன்னைக்கு நான் ரொம்பவே ப்ரீ! நீங்க, ஒரு மணி நேரம் கூடப் பேசலாம்” என்றாள் புன்னகையுடன்.

“சந்தோஷம். சரி, நீ சாப்பிட்டியா?”

“ஆச்சும்மா. நீங்க சாப்பிட்டீங்களா? அப்பா எங்கே…? சத்தமே இல்லை!” என்றாள் ஆர்வமாக.

“இதோ… வழக்கம் போல, அமைதியா என் பக்கத்திலேயே தான் உட்கார்ந்திருக்கார்.”

“அட ஆமாம்! மறந்தே போயிட்டேன். நீங்க இருக்கும் போது, அப்பா என்னைக்குப் பேசியிருக்காங்க? ஒரே வருஷத்தில் இதெல்லாம் மறந்து போச்சு பாருங்களேன்!” – ஆசையுடன் அன்னையிடம் வம்பிழுத்தாள்.

“இந்த வாயில ஒண்ணும் குறைச்சல் இல்லை! உனக்கு, இது மட்டுமா மறந்து போச்சு? எங்களையே மறந்து தானே, இந்தப் பக்கமே வராமல் இருக்க?”

அவர், சட்டெனச் சூடானதில், வைஷாலியின் புன்னகை முகம் வாடியது. “கல்ச்சுரல் ப்ரோக்ராம், கொஞ்சம் காலேஜ் வேலைன்னு, ரெண்டு மாசமா ரொம்பவே பிஸிம்மா!” என்றவள், அதை மெதுவாகவே சொன்னாள்.

“ஆங்! நீ சொல்றதை, நான் அப்படியே நம்பறேன். நீ ஏன் அங்கேயே படிக்கிறேன்னு சொன்னதுக்கான காரணம், எனக்கொன்னும் தெரியாமலில்லை!”

பேச்சின் கோணம் திசை மாறுவதை உணர்ந்த வைஷாலி, சற்று அமைதி காத்தாள்.

“ஏய் வைஷு! லைனில் இருக்கியா?”

“ம், இருக்கேன்” என்றாள் சுரத்தே இல்லாமல்.

“போன வாரம், நீ அந்த ஜோதி வீட்டுக்குப் போயிருந்த போல?”

உதட்டை அழுந்தக் கடித்தவள், “ஆமாம், போனேன்!” என்றாள்.

“அதை, என்கிட்ட ஏன் சொல்லலை?”

“நீங்க இப்படி கேட்பீங்கன்னு தான், சொல்லலை!” என்றாள் எரிச்சலுடன்.

“நானூறு கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம் இருக்கவளுக்கு, இது எப்படித் தெரியப் போகுதுன்னு, சொல்லாம விட்டுட்டியாக்கும்?”

வைஷாலி சற்றே கடுப்பானாள். “அம்மா போதும்! உங்களுக்கு, ஏன் அவளைப் பார்த்தாலே பிடிக்க மாட்டேன்னுதுன்னு கேட்கமாட்டேன். ஏன்னு, எனக்கே நல்லா தெரியும். ஜோதிக்கு, இது ஏழாம் மாதம்! வீட்டில அவ தனியா இருக்காளேன்னு, போய்க் கொஞ்சநேரம் அவளோடு இருந்துட்டு வந்தேன்!”

“அதோடவா விட்ட…? அவளை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போய், தாதி வேலை பார்த்துட்டு வந்ததை மட்டும், ஏன் சொல்லாமல் விட்டுட்ட?”

வைஷாலிக்கு இப்போது விஷயம் புரிந்தது. ஜோதியை, செக்கப்பிற்காக ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்ற இடத்தில், குல்கர்னி ஆன்ட்டியைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவர்தான் அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விட்டார் என்றும் புரிந்தது.

“ஆமாம், போனேன்! ஏம்மா நீங்க இப்படி இருக்கீங்க? அவள் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட். அவளுக்கு, நான் இந்த ஹெல்ப்பைக் கூட, செய்யக்கூடாதா?” என்றாள் கோபத்துடன்.

“ஏண்டி! நீ யாரு… உன்னோட ஸ்டேட்டஸ் என்ன… இன்னும் இதெல்லாம் தெரியாமல் இருக்கியே! நீ திருந்தவே மாட்டியா? இந்த மிடில் கிளாஸ் புத்தியெல்லாம், உனக்கு இப்போ தெரியாது… பட்டால் தான், உனக்குப் புத்தி வரும்!”

அன்னையின் பேச்சைக் கேட்டவளுக்கு, பொறுமை பறந்தது. ‘இதைப் பேசவா என்னைக் கூப்பிட்ட. என்னோட சந்தோஷமான நாளையே, நீங்க ஸ்பாயில் பண்ணிட்டீங்க!’ சொல்ல நினைத்ததைச் சொல்ல முடியாமல், வார்த்தைகள் அவளது தொண்டைக்குழியிலேயே சிக்கிக் கொண்டன.

“போதும் தேவி! குழந்தையை எதுக்கு வறுத் தெடுக்கற? அவளே, அங்க தனியா இருக்கா; பேச, உனக்கு வேற விஷயமா இல்லை?” -மனைவியின் பேச்சில் இடைபுகுந்து, மகளைக் காப்பாற்றினார் சங்கரன்.

“இப்படிச் செல்லம் கொடுத்தே, நீங்க அவளைக் குட்டிச்சுவராக்கி வச்சிருக்கீங்க. இந்தாங்க, நீங்களே பேசுங்க… உங்க அருமை மகளோட!” என்றபடியே போனை கணவரின் கையில் திணித்தார் தேவிகா.

“என்னடா கண்ணா! எப்படியிருக்க?” – ஆதூரத்துடன் கேட்டார்.

“நான் நல்லா இருக்கேன்ப்பா. நீங்க எப்படி இருக்கீங்க!” என்றாள் சிரித்தபடியே.

“உங்கம்மா ரொம்ப காய்ச்சி எடுத்துட்டாளா?”

“அம்மா இப்படிப் பேசறது ஒண்ணும், புதுசு இல்லையேப்பா!”

“சரிம்மா, இன்னைக்கு விக்ரமோட ஆஃபீஸுக்கு போகப்போறதா காலையில் சொன்னியே… போனீயா?” என்று கேட்டது தான் தாமதம்… மடைதிறந்த வெள்ளமாக அதைச் சொல்ல ஆரம்பித்த மகளின் வேகத்தைக் கண்ட சங்கரன்,  மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...