உனை நீங்கியே உயிர் கரைகிறேனே அத்தியாயம் – 3 – சுதா ரவி
அத்தியாயம் – 3
சந்திரனும் சூரியனும் ஒரு நிமிடம் சந்தித்து பிரியும் விடியலின் நேரத்தில் மெல்லிய காற்று உடலை தழுவி செல்ல, தன் வீட்டு தோட்டத்தில் ஜாகிங் போய் கொண்டிருந்தான் கதிர்.
வீட்டினர் அனைவரும் உறக்கத்தில் இருக்க அவன் மட்டுமே தோட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தான். அண்ணன்கள் இருவருக்கும் இதிலெல்லாம் ஆர்வம் இருந்தது இல்லை. எந்த நேரமும் அப்பாவுடன் பிசினஸ் விஷயமாக அலைவார்களேத் தவிர இதற்கெல்லாம் வரவே மாட்டார்கள்.
ஒரு மணி நேரம் ஓடி முடிக்கும் வேளையில் வீட்டில் விளக்குகள் எரியத் தொடங்கியது. உட்காருவதற்காகப் போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்தவன் தன் வாழ்க்கையின் பக்கங்களை புரட்டிப் பார்க்க ஆரம்பித்தான்.சிறுவயதில் இருந்தே எதை செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செய்ய இயலாமல் போனது. அதனால் எங்கும் எதிலும் தோல்விகள் மட்டுமே.
அதுவே தந்தைக்கு லேசான வெறுப்பை உண்டாக்கியது . அண்ணன்கள் இருவரும் தம்பி என்ற பாசம் இருந்தாலும், இந்த விஷயத்தில் கேலியாகவே நடத்துவார்கள். அம்மா ஈஸ்வரி மட்டுமே எது எப்படி இருந்தாலும் அவன் என் பிள்ளை என்று மட்டுமே நினைப்பார்.என்றாவது ஒரு நாள் அப்பாவும், அண்ணன்களும் தன்னை மதிக்கும்படி எதிலாவது சாதித்துக் காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து எழுந்து உள்ளே சென்றான்.
பூஜை செய்துவிட்டு ஈஸ்வரி வெளியே வரவும் , ஜாகிங் முடித்து உள்ளே நுழைந்த மகனைப் பார்த்தவர், நல்ல உயரமும் அளவான தோள்களும் சாந்தம் தவழும் முகமும் உள்ளவனிடம் எதையும் நிதானத்துடன் செய்யும் போக்கு மட்டும் இருந்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமே என்று எழுந்த எண்ணத்தில் பெருமூச்சொன்றை உதிர்த்து “என்ன கதிர் ஜாகிங் முடிச்சாச்சா?” என்றார்.
அன்னையைப் பார்த்து மெலிதாக புன்னகையை சிந்தியபடி “முடிச்சாச்சுமா.நீங்க ஏன்மா அதுக்குள்ளே எழுந்தீங்க?” என்று கேட்டான் கதிர்.
“எப்பவும் எழுந்திரிக்கிறதுதானே.அப்படியே பழகிப் போச்சு” என்று சொல்லி சமையலறைக்குச் சென்று சமையல்காரரிடம் இருந்து காபியை வாங்கிக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்து விட்டு சென்றார்.
அவன் காபி குடித்து முடிக்கும் தருவாயில் ஒவ்வொருவராக எழுந்து வர ஆரம்பித்தார்கள். சிவதாண்டவம் தூங்கி எழுந்து வந்து ஹாலில் உள்ள சோபாவில் அமர,கதிர் அங்கிருந்து கிளம்பினான். அப்போது தாண்டவம் அவனிடம் “எழுந்திரிக்கிறதுல இருக்கிற சுறுசுறுப்பு மத்ததுலையும் இருந்தா தேவலை” என்றார்.
அதற்கு எந்த வித உணர்வுகளையும் காட்டாமல் “ம்ம்..சரிப்பா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
அந்த நேரம் அங்கு வந்த ஈஸ்வரி கணவர் மகனை பேசிய வாக்கியங்கள் காதில் விழ சிறு சலிப்புடன் காபியை அவர் கையில் தந்து விட்ட “காலையிலேயே அவனை கிளப்ப ஆரம்பிச்சுட்டீங்களா?” என்றார்.
“அவன் நல்லதுக்கு தானே சொல்றேன்.அதுகென்னவோ அலுத்துக்கிற…இதுக்கு தான் உம்புள்ள விஷயத்துல நான் தலையிடுறது இல்ல” என்று கடுப்படித்தார் தாண்டவம்.
அவரின் பேச்சில் மனசு பாதிக்கப்பட்டு “என்னங்க இப்படி பேசுறீங்க.நீங்க இப்படி பேசி பேசி தான் பெரியவனுங்க ரெண்டு பேரும் இவனோட ஒட்டவே மாட்டேன்றானுங்க”என்று வருத்தமாக சொன்னார் ஈஸ்வரி.
காப்பியை குடித்துக் கொண்டும் பேப்பரில் கவனத்தை வைத்துக் கொண்டும் இருந்தவர் மனைவியின் பேச்சில் சற்று கோபமுற்று “அவனால யார் கூடவும் ஓட்ட முடியலேன்னு சொல்லு ஈஸ்வரி.ஏன்னா அவனுக்கு வேலையும் தெரியல,சொல்றதைப் புரிஞ்சுகிட்டு நடக்கவும் தெரியல.அதுக்கு எங்க மேல குறை சொல்லாதே” என்றார்.
அவர் வைத்த கப்பை கையில் எடுத்துக் கொண்டு “ஆமாம் புரியல புரியலன்னு சொல்லி சொல்லியே அவனைப் பைத்தியமாக்கிடுங்க” என்று சொல்லிவிட்டு வேகமாக சென்று சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.
கதிரோ அறைக்குள் போனவன் மனதில் தந்தை சொன்னதின் தாக்கம் இருக்க நேராக சென்று பால்கனியில் நின்று கொண்டு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான் . தனக்குள் இருக்கும் பல விதமான உணர்வுகளை வெளிக்காட்ட இயலாமல் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தான். பின்னர் தனக்கு மிகவும் பிடித்த போட்டோவை எடுத்து பார்த்தபடியே சிறிது நேரம் அமர்ந்துவிட்டான். அமைதியிழந்து தவித்த மனம் ஆறுதலடைந்தது.காலை வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகத்துக்கு கிளம்பினான். அப்பாவும் கந்தவேலும் ஒன்றாக காரில் கிளம்ப, குமாரவேலுவும் வேறு விஷயமாக கடலூர் கிளம்பினான். தான் அன்று எங்கு போவது என்று புரியாமல் தாண்டவத்தையும், கந்தவேலுவையும் பார்க்க, “நீ உன் காரில் ஸ்டீல் பாக்டரிக்கு வந்திடு கதிர். நானும் அப்பாவும் எம்.எல்.ஏவை பார்த்திட்டு அங்கே வரோம்” என்றான் கந்தவேல்.
அவர்களிடம் தலை அசைத்து விட்டு தன் காரில் ஏறினான். அதை பார்த்துக் கொண்டிருந்த தாண்டவம் “ஏதாவது உணர்ச்சி தெரியுதா பாரு.இல்ல நாம எதுக்குப் போறோம் என்ன விஷயம் அப்படினாவது கேட்டானா.இவன் திருந்த மாட்டான்” என்றார் ஆங்காரமாக.
“விடுங்கப்பா…அவன் எப்பவும் அப்படி தானே. பேசவே காசு கேப்பான்” என்றான் கந்தவேல்.
அங்கிருந்து கிளம்பிய கதிர் ஸ்டீல் பாக்டரிக்கு தன் காரை செலுத்தினான். உள்ளே நுழையும் போதே அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது. ஒற்றை ஆளாய் இருந்து அப்பா ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார். அதனால் தான் அவருக்கு தன் மேல் கோபம் எழுகிறது என்று தன்னை தானே சாமாதானப்படுத்திக் கொண்டு, காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு நடந்தான். அங்கு அவர்களிடம் வேலை செய்யும் காசி தன் பையனுடன் நின்றிருப்பதை கண்டு அவர்களின் அருகில் சென்றான். காசியும் அவன் தங்கள் அருகில் வருவதை அறிந்து மகனுடன் வந்து “வணக்கம் முதலாளி” என்றான்.
“என்ன அண்ணே பையனோட வந்து இருக்கீங்க ஏதும் முக்கியமான விஷயமா?” என்று கேட்டான் கதிர்.
“பெரிய ஐயாவ பார்க்கணும் இவன் விஷயமா பேசணும், அதுக்கு தான் வந்தேன் முதலாளி” என்று சொன்னான் காசி.
“என்னன்னு சொல்லுங்க அண்ணே அப்பா கிட்ட பேசுறேன்” என்று அவனிடம் கேட்டான் கதிர்.
அதை கேட்டதும் காசியின் மகன் தங்கள் பிரச்சனையினை சொல்லத் தொடங்க “சும்மா இருடா” என்று அவனை அடக்கி விட்டு “அவன் கிடக்கான் சின்னப்பய நீங்க போங்க முதலாளி நான் பெரிய ஐயா கிட்ட பேசிக்கிறேன்”என்று கூறினான் காசி.
“சும்மா சொல்லுங்கண்ணே நான் என்ன செய்யணுமோ செய்றேன்” என்று விடாமல் அவனை கேட்டான் கதிர்.
அதைக் கேட்டதும் “வேணாம் முதலாளி சொன்னாப் புரிஞ்சுக்க மாட்டேன்றீங்களே.உங்க மூலியமா போனா நடக்கிறதும் நடக்காம போயிடும்.ஐயா நம்ப மாட்டாங்க .அதுக்குத் தான் சொல்றேன். நாங்க ஐயா கிட்ட நேரடியாவே பேசிக்கிறோம்” என்றான் காசி.
அவனது வாய் மொழியில் சற்று அதிர்ந்து ஒன்று சொல்லாமல் உடல் கூசிக் குறுகி நடந்து தன் அறைக்கு சென்றான். மனமோ தன் சுயத்தை எண்ணி உள்ளுக்குள் அழுதது. ‘தங்களிடம் வேலை செய்பவன் கூட தன்னை மதிக்காமல் நடந்து கொள்ளும் அளவிற்கு தன் நிலைமை இருக்கிறதா? தன் அண்ணன்கள் பிறந்த அதே வயிற்றில் தானே பிறந்தேன்…தன் குறைக்கு தானா காரணம்? பின் ஏன் எல்லோரும் என்னை பழிக்கின்றனர்’ என்று உள்ளம் குமுறளுடன் தன் அறைக்கு சென்றான்.மனதில் ஏற்பட்ட வலியின் காரணமாக அங்கிருந்த கண்ணாடி டம்ளரை ஓங்கி கையால் அடித்து உடைத்தான். கண்ணாடித்துகள்கள் குத்தி ஏற்கனவே அடிபட்டிருந்த கையில் ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. அவனுக்கு அந்த வலியோ ரத்தம் வழிவதோ அறியாமல் அவன் மனம் உளைக்களமென கொதித்துக் கொண்டிருந்தது.
அந்த நேரம் அவன் அறைக்கு வந்த குமாரவேல் கதிரின் கைகளில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பதறி ஓடி வந்து என்ன நடந்தது என்று கேட்டான். அதற்குள் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான் கதிர். கோப்புகளை எடுக்கும் போது கண்ணாடி டம்ப்ளர் கீழே விழுந்து நொறுங்கியதாகவும், அதை எடுக்க முயற்சிக்கும் போது கைகளில் குத்தி காயமேற்பட்டது என்று கூறினான். அவன் கைகளில் அதிக ரத்தப் போக்கு இருந்த காரணத்தால் அவன் சொன்னவற்றை அதிகம் ஆராயாமல் அவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பினான்.
சிகிச்சை அளித்தப் பின் கதிரை கொண்டு வீட்டில் விட்டு விட்டு பாக்டரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவன் ,தம்பியை பார்த்து பதறிய தாயை கண்டு கோவமடைந்த குமார் “அவனுக்கு என்ன தான் பிரச்சனைன்னு கேளுங்கமா? அப்பா கோபப்படுகிற மாதிரி தான் நடந்துகிறான் இவனும்”என்றான்.
குமார் சத்தம் போட்டதை காதில் வாங்காமல் மகனின் கையை ஆராய்வதிலேயே இருந்தார் ஈஸ்வரி. அதை பார்த்து கடுப்பாகி குமார் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
அதுவரை தலையை குனிந்தபடி அமர்ந்திருந்த கதிர் “எனக்கு என்ன பிரச்சனைன்னு கேட்டுட்டு போறான் குமார்.எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல .ஆனா எல்லாரும் என்னை தான் பிரச்சனையா நினைக்கிறாங்க…நான் எது செஞ்சாலும் என்னை பெத்தவரும் நம்பல, கூட பிறந்தவனுங்களும் நம்பல. இதனால வெளில உள்ளவங்க என்னை மதிக்கிறது இல்ல…இவ்வளவு அவமானத்தை தாங்கிகிட்டு நான் இன்னும் உயிரோட இருக்கனுமா அம்மா” என்று தன் மனதில் உள்ள ஆத்திரம் , சுயபச்சாதாபம் அனைத்தையும் தன் அன்னையிடம் கொட்டினான்.
அவன் கையில் உள்ள காயத்தை பார்த்துக் கொண்டிருந்தவர் அவனது வார்த்தையில் தேள் கொட்டினார் போல் துடி துடித்து போய் அவன் வாயில் கையை வைத்து மேற்கொண்டுப் பேசுவதை தடுத்து நிறுத்தினார்.”வேண்டாம் ராஜா எதுவும் பேசாதே.நீ மேல வா உன் அறைக்குப் போகலாம்” என்று சொல்லி அவனை எழுப்பி அறைக்கு அழைத்து சென்றார்.
அறைக்குள் சென்றதும் தாயை கட்டிலில் அமர வைத்து அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். ஈஸ்வரியின் கைகள் தானாக அவன் தலையை வருட “ராஜா நீ இப்படி உடைஞ்சு போய் பார்த்ததே இல்லையே….எதுவா இருந்தாலும் மனசை விடக் கூடாது” என்றார்.
தாயின் மடியில் படுத்து அமைதி காண முயன்றாலும் மனமோ நடந்தவைகளையே நினைத்து நினைத்து மருகியது. இது போல சம்பவங்கள் ஒன்றா இரண்டா எத்தனையோ பேர் தன்னை அவமதித்த பிறகும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேனே?மீண்டும் மூச்சு முட்ட எழுந்து சென்று ஜன்னலோரம் நின்றான்.
அவன் எழுந்ததும் அவனைப் பார்த்து “இப்போ என்ன நடந்து போச்சுன்னு இவ்வளவு பீல் பண்ற கதிர் .எல்லாக் காயத்துக்கும் மருந்து இருக்கு.கண்டிப்பா ஒரு நாள் உங்க அப்பா அண்ணனுங்க வியப்படைகிற மாதிரி ஒரு காரியத்தை செய்வ.ஆனா நீ உன் மேல நம்பிக்கை வைக்கணும்.மத்தவங்க உன் மேல நம்பிக்கை வைப்பதை விட நீ உன் மேல வைக்கிற நம்பிக்கை தான் உன்னை ஜெயிக்க வைக்கும்”.
அதுவரை தன்னை நினைத்து சோகத்தில் இருந்தவன் தாயின் வார்த்தைகளில் பொங்கி வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு “அதெப்படிம்மா உங்களுக்கு என் மேல அவ்வளவு நம்பிக்கை? அப்பா ஆச்சரியபடுற மாதிரி ஒரு காரியம் செய்வேன்னு சொல்றீங்க?”
“அடப்போடா ஒரு நிமிஷம் சோகமா இருக்கே அடுத்த நிமிஷம் சிரிக்கிற இந்த குணம் தான் நீ கண்டிப்பா மாத்திக்கணும்.எனக்கு என் மகன் மேல முழு நம்பிக்கை இருக்கு கதிர். கண்டிப்பா நீ ஒரு நாள் சாதிக்கப் போற”.
“இல்லமா எனக்கு மனசுக்கு நெருங்கியவங்கன்னு யாருமே இல்லை.என்னை யாருமே புரிஞ்சுக்க மறுக்கிறாங்க என்னால” என்று அதற்கு மேல் பேச முடியாமல் “நா” தழுதழுக்க நின்றான். அவனது நிலை உணர்ந்து தன்னால் இயன்ற அளவுக்கு சமாதானப்படுத்திவிட்டு நீண்ட பெருமூச்சுடன் அங்கிருந்து சென்றார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்….
ஒரு ஷோல்டர் பாக் கைகளில் ஒரு தண்ணீர் பாட்டிலுடன் சிதம்பரம் செல்லும் பஸ் அருகே வந்து நின்று கண்டக்டரிடம் சிதம்பரம் செல்ல டிக்கெட் கிடைக்குமா என்று விசாரித்தான் கார்த்திகேயன்.
பயணச் சீட்டு கிடைத்ததும் அதை வாங்கி கொண்டு எத்தனை மணிக்கு கிளம்பும் என்று விசாரித்து கொண்டு உணவகத்தை நோக்கிச் சென்றான். இரவு உணவை முடித்து விட்டு வரவும் பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது. பஸ்ஸின் உள்ளே ஏறி அமர்ந்தவன் ஜன்னல் வழியே தெரிந்த நகரத்தின் காட்சிகளை உள்வாங்கி கொண்டிருந்தான். அப்போது அவனருகில் இருந்த சீட்டில் ஒருவர் வந்து அமர்ந்தார். அவரைப் பார்த்து மெலிதாக புன்னகைத்து விட்டு மீண்டும் வெளியில் தெரிந்த காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தான்.
சென்னையை விட்டு வெளியில் வந்ததும் பேருந்தின் வேகம் அதிகரித்தது. அதனால் ஜன்னல் கதவை மூடி விட்டு தன் பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான். கார்த்திக்கின் அருகில் அமர்ந்திருந்தவன் தூக்கம் வராமலும்.டிவி யில் படம் பார்க்க பிடிக்காமலும் என்ன செய்வது என்று திரும்பி கார்த்திக்கை பார்த்தான். பலத்த யோசனைக்கு பிறகு “சார் எங்கே போறீங்க?” என்றான்.
கையில் இருந்த புத்தகத்தில் இருந்து கண்ணை விலக்கி “சிதம்பரம் போறேன்..நீங்க?” என்றான்.
“நானும் சிதம்பரம் தான்.நீங்க என்ன விஷயமா போறீங்க.சுத்தி பார்க்கவா இல்ல வேலை விஷயமா?”என்று கேட்டான்.
இவன் தன்னை படிக்க விட மாட்டான் என்று அறிந்து புத்தகத்தை மூடி வைத்து விட்டு “நான் மெடிக்கல் ரெப் ஆக வேலை பார்க்கிறேன்.வருஷத்துல ஒரு பத்து பதினஞ்சு நாள் லீவ் எடுத்துகிட்டு இப்படி எங்கயாவது போயிட்டு வருவேன்”.
“ஒ…சரி-சரி ஆனா சிதம்பரத்தில சுத்தி பார்க்க வேண்டிய இடம் அதிகம் இல்லையே”.
“எனக்கு சிதம்பரத்தில் வேலை இல்லை. நான் பிச்சாவரம் போய் பறவைகளை வாட்ச் பண்ணுவேன் அது தான் என் பொழுது போக்கு. ஆமாம் நீங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டான் கார்த்தி.
கார்த்திக் கேட்டதும் சற்று தடுமாறி “நமக்கு என்னங்க கொடுக்கல் வாங்கல் பிசினஸ் தான்.அதான் ஒரு பார்ட்டியை பார்க்க சிதம்பரம் போயிட்டு இருக்கேன்”.
அதன் பின் இருவரும் என்ன பேசிக் கொள்வது என்று தெரியாமல் கார்த்திக் புத்தகத்தை தொடர, அவனருகில் உட்கார்ந்திருந்தவர் தூக்கத்தை தொடர்ந்தார். நேரம் செல்ல செல்ல பஸ்ஸில் இருந்த அனைவரும் உறங்க கையில் இருந்த புத்தகத்தை மெல்ல மூடி வைத்து விட்டு பஸ்ஸில் இருந்த அனைவர் மீதும் கண்ணை ஓட்டினான். முன் இருக்கையில் ஒரு குடும்பமும் அதற்கு அடுத்த இருக்கையில் வயதான தம்பதியர் இருவரும், இப்படி ஒவ்வொருவரையும் ஆராய்ந்து கொண்டே வந்தவன் தன் நேர் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இருவரை பார்த்ததும் மெல்ல புன்னகத்துக் கொண்டான்.
அவர்கள் இருவரையும் பார்த்தாலே அடியாட்கள் போல் தெரிந்தது, அவர்கள் எதற்கு இந்த பஸ்ஸில் வருகிறார்கள் என்பதும் புரிந்து போயிற்று. பின்னர் தன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு நிமிடம் கண் மூடி யோசித்தான். தன்னை கண்காணிக்கவே அந்த இருவரும் தன் பக்கத்தில் அமர்ந்திருப்பவரும் வருகிறார்கள் என்று உணர்ந்து அதற்குத் தகுந்தார் போல் தன் செயல்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.
பனிரெண்டரை மணி வாக்கில் பேருந்து திண்டிவனத்தை அடைந்தது. டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு, முக்கால் மணி நேரம் வண்டி நிற்கும் பாத்ரூம் போக வேண்டியவர்களும் , சாப்பிட போகிறவர்களும் போய் விட்டு வரலாம் என்று சொல்லி விட்டு இறங்கி போனான்.
இரவு நேர மோட்டல்களில் போடப்படும் இசை மழை மனதை மயக்க, கார்த்திக் தான் இறங்க போவதாக பக்கத்தில் இருந்தவரிடம் கூறிவிட்டு செல்ல அவர் “நீங்க போங்க நான் இறங்கல” என்றார்.
அவருக்கு எதுவும் வேண்டுமா என்று கேட்டுகொண்டு தன் பையை பார்த்துக் கொள்ளும்படி சொல்லி வண்டியை விட்டு இறங்கினான். அவன் வண்டியை விட்டு இறங்கி சாப்பிடும் இடத்திற்கு சென்றதும், கார்த்திக்கின் பையை எடுத்து அவசரம் அவசரமாக ஆராய்ந்தார் பக்கத்து சீட்டு ஆசாமி. அதில் இருசெட் உடைகளும் ஒரு பைனாகுலர் மட்டுமே இருந்தது. பையை மூடி அதன் இருப்பிடத்தில் வைத்து விட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து ஜன்னலின் வழியே வெளியே தலையை நீட்டி தன் சகாவிடம் ஒன்றும் இல்லை என்று சைகையில் காண்பித்தார்.
மோட்டலின் உள்ளே சென்ற கார்த்திக் மசாலா பாலை வாங்கி அருந்தி முடித்து மீண்டும் பஸ்ஸின் அருகில் வந்தான். அவனின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் அவன் அமர்ந்திருந்த சீட்டின் ஜன்னலோரம் நின்றிருந்தார்கள்.அவர்கள் ஒருவனிடம் சென்று “உங்க போன் எதுவும் மிஸ் பண்ணிட்டீங்களா? பாத்ரூம் போற வழியில கீழே கிடக்கிறது” என்றான்.
ரெண்டு பேரில் ஒருவன் அவசரமாக மறுத்தான், மற்றவனோ சற்று சஞ்சலத்துடன் தன் பாக்கெட்டில் கை விட்டு பார்த்துவிட்டு..உடனே அவசரமாக போனை தேடி ஓடினான். கார்த்தியும் அவன் பின்னே சென்றான்…”இருங்க நான் காண்பிக்கிறேன்” என்று.
இருளான இடத்திற்கு வந்ததும் அவன் போனை தேட கார்த்திக் அவன் பின் புறம் வந்து நடு மண்டையில் நச்சென்று வைக்க அவன் அப்படியே மயங்கி சாய்ந்தான். அவன் கீழே விழுந்ததும் அவன் கால்களை பற்றி தரதரவென்று இழுத்து சென்றுஒரு ஓரமாக போட்டு விட்டு அடுத்தவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.மூன்று பேரும் ஒருவர் பின் ஒருவராக வந்து சிக்க மூவரையும் அடித்து போட்டு தன் சட்டையின் பின் புறம் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அதில் சைலன்சறை பொருத்தி மூவரையும் சத்தமில்லாமல் சுட்டு தள்ளினான்.பின்னர் பையில் இருந்து போனை எடுத்து யாருக்கோ போன் பண்ணி “முடிச்சிட்டேன்…வந்து அள்ளிட்டு போங்க” என்று சொல்லி வைத்து விட்டான். பின் அமைதியாக வந்து ஒரு உணவகத்தில் அமர்ந்து டீயை குடித்துக் கொண்டிருந்தான்.
அப்போது ஒரு பெரிய சரக்கு லாரி வந்தது. அதிலிருந்த டிரைவரும் கிளீனரும் இறங்கி வந்தனர்.
உணவகத்தின் முதலாளி அவனிடம் “எங்கே இருந்து வருதுப்பா சரக்கு”
கையால் அங்கிருந்த பெஞ்சை தூசி தட்டி அமர்ந்து கொண்டே “பெல்லாரிலே இருந்து வருது அண்ணே வண்டி கழுவ முடியுமா இங்கே…வர வழியில இந்த பன்னாட ஒருத்தனை பின்னாடி ஏத்திபுட்டான், அவன் என்னத்தையும் செஞ்சு வண்டி முழுக்க ஒரே நாத்தம். இப்படியே கொண்டு போனா சரக்கு எடுக்கிறவன் வெங்காயம் எல்லாம் அழுகி போய் இருக்குன்னு திருப்பி அனுப்பிடுவான்”.
“ஒ அதுகென்ன இதோ கடைக்கு பின்ன இடம் இருக்கு அங்கன கொண்டு போய் கழுவுங்க ஆனா அங்க விளக்கு எல்லாம் இல்ல”.
நாங்க பார்த்துக்கிறோம் அண்ணே என்று சொல்லி சாயாவை குடித்து காசை கொடுத்து விட்டு, வண்டியை எடுக்க சென்றான். அதுவரை அங்கு அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த கார்த்திக் தன் பஸ் புறப்படப் போவதை அறிந்து கிளம்பினான். போகும் வழியில் அந்த லாரி டிரைவரை பார்த்து ஒருவரும் அறியாமல் வெற்றி குறி காண்பித்து சென்றான், அவனும் பதிலுக்குக் காண்பித்து விட்டு லாரியை கடைக்கு பின்னே எடுத்து சென்றான்.
பஸ்ஸில் ஏறப் போகும் நேரம் உணவகத்தில் இருந்து ஒலித்த பாடல் அவனை புன்னகைக்க வைத்தது…”அண்ணே டீயும் சுப்பர் பாட்டும் சூப்பர்” என்று சத்தமிட்டான்.
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா பஸ்ஸில் ஏறி அமர்ந்தவன் மனதிற்குள் தான் செய்த காரியத்தை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான்…”யாரை வேவு பார்க்க ஆளை அனுப்புகிறார்கள். இந்த மூணு முகரைகளையும் பார்த்தாலே தெரியலையா அவனுங்க யார்ன்னு. இவனுங்க கூலிக்கு மாரடிக்கிற பொறம்போக்கு கூட்டம். நானெல்லாம் படிச்ச பொறுக்கி கத்தியை தூக்கவும் தெரியும், சத்தமில்லாம முடிக்கவும் தெரியும்”என்று எண்ணிக் கொண்டான்.
அவன் தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்த நேரம் பஸ் எடுக்கப் போவதாக கண்டக்டர் சொல்ல ஆனால் வர வேண்டிய மூவரையும் காணும் என்று தேட ஆரம்பித்தார்கள். ஆளாளுக்கு அங்கே போனார்கள், இங்கே போனார்கள் என்று சொல்ல ஒரு சிலரோ நேரம் ஆகிவிட்டது என்று பொறுமை இழக்க எல்லோரும் ஒரு முடிவாக அந்த மூவரையும் விட்டுவிட்டு கிளம்புவது என்று முடிவு செய்து வண்டியை எடுக்க சொல்லினர்
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |