எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!! – 3 – ஆரா அருணா
என்னவென்று கேட்க வேண்டிய நீயே எட்டி நிற்கையில்-
கொட்டிக் கெடக்கும் பணத்தால் என்ன பயன்?
என்னவனே!
ஆயிரங்களல்ல…. தேவை உன் அருகாமைதான் என்பது எப்போது புரியும் உனக்கு !!!
கடந்த சில ஆண்டுகல்ல வாக்குவாதம், சண்ட, முகச்சுளிப்பு இல்லாத ஒரு விசேஷமாவது நம்ம வீட்டுல வந்துருக்கா? எது சொன்னாலும் உடனே உனக்கென்ன தெரியும் ? ன்னு ஒரே கேள்வி கேட்டு என்ன மடக்குற! பரவாயில்ல ஆனா இப்ப நம்ம கொழந்தைங்க கூட போம்மா உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?
நீயும் சேந்துகிட்டு பேசுறியே தவிற தப்புன்னு அவங்களுக்கு சொல்லித்தர மாட்டிங்கிற அதெல்லாம் விளையாட்டா தெரியுதா மனோ ? நெறைய சம்பாரிச்சு கொழந்தைங்கள சந்தோசமா வச்சுக்கன்னும்னு நெனக்கிறது தப்பு இல்ல ஆனா ஒரு எட்டு வயசு கொழந்த கேட்டுச்சுன்னு பதினோராயிரம் கொடுத்து ஒரே ஒரு டிரஸ் வாங்கிட்டு வர்றிங்களே அது தப்புதானே ! பெத்தவங்க பிள்ளைங்களுக்கு விளையாட்டு பொருள் வாங்கித் தர்றது தப்பு இல்ல ஆனா 5 வயசு பையன் கேட்டன்னு 30௦௦ க்கு ஒரு ரிமோட் கார் வாங்கித் தர்றது தப்பு தானே ! அத சொன்னா உலகம் தெரியாதவ ,பட்டிக்காடு ,பிள்ளைங்களுக்கு செய்யாம யாருக்கு செய்யப்போறோம்.
உலகத்தில் அவன் அவன் என்னெல்லாம் வாங்குறான். இதுக்கு போய் இம்புட்டு பேசுறன்னு கொழந்தைங்க முன்னாடியே சொல்லுரிங்க. அப்போ அவங்க மனசுல என்ன பதியும் ? இப்பவே இவ்வளவு ஆடம்பரத்துக்கு பழகினா வளர வளர குழந்தைங்க இதவிட அதிகமாக எதிர்பார்ப்பாங்கதானே ! அது ஏங்க உங்களுக்கு புரியல ! ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நாலு மணி நேரம் கூட நீங்க கொழந்தங்க கூட இருக்கிறது இல்ல.
அப்படியே ஏதாச்சும் லீவு நாள்ல இருந்தாலும் அவங்களுக்கு தேவையே இல்லன்னாக்கூட கண்டதயும் வாங்கிக் குடுத்துட்டு மொபைல நோண்டிக்கிட்டே இருக்க வேண்டியது. இப்போ கொழந்தைங்க மனசுல என்ன பதிஞ்சு இருக்கு. அப்பா ரொம்ப நல்லவரு. எது கேட்டாலும் வாங்கித்தருவாரு.
அம்மாதா மோசம். ரொம்ப கண்டிக்கிராங்கன்னு தோணாதா? அவங்களோட கொஞ்ச நேரம் செலவழிச்சா தானே அவங்க என்ன மனநிலைல வளந்த்துட்டு வர்றாங்கன்னு தெரியும். குழந்தைங்கள இப்ப கண்டிச்சு வளக்காம எப்பங்க கண்டிச்சு வளக்குறது. குறைஞ்சது எங்கூடவாச்சும் கொஞ்ச நேரம் செலவழிச்சாதானே இதபத்திஎல்லாம் பேச முடியும். ஒருவேள நீங்க சொல்ற மாதிரி நா உலகம் தெரியாதவளா, பட்டிக்காடா, முட்டாளாவே இருந்துட்டு போறேன். நீங்க செய்யுறது சரின்னா எனக்கு புரியவைங்க.
அதுவும் செய்ய மாட்றீங்க. அப்போ நான் என்ன தாங்க செய்யுறது ? வாழறதுக்கு வருமானம் தேவதான். ஆனால் ஆடம்பரத்துக்காக சம்பாரிக்க நெனக்கிறதும் அதிகமாக சம்பாதிக்க சம்பாதிக்க அதுக்கு ஏத்த மாதிரி செலவ கூட்டிக்கிறதயும் நெனச்சா எனக்கு பயமாத்தாங்க இருக்கு ! அடுத்தவங்களோட ஒப்பிட்டு ஒப்பிட்டு நீங்க வருமானத்து பின்னாடி போறதுன்னால நானும் நம்ம கொழந்தைங்களும் எவ்வளவு கஷ்டப்படுறோம்ன்னு உங்களுக்கு தெரியலயா?
உங்களுக்காகத்தான இவ்வளவு கஷ்டப்படுறேன்னு அடிக்கடி சொல்லுறிங்களே ! எனக்கும் பிள்ளைங்களுக்கும் தேவ கொஞ்ச நேரம் உங்க கூட இருக்கிறதும் உங்க கிட்ட கலந்து பேசி எல்லா முடிவும் எடுக்கணும்ங்கிற ஆச தாங்க இத சொல்லவந்தா உங்களுக்கு உலகம் தெரியாதவளாகி புள்ளைங்களுக்கு கோபக்கார அம்மாவாகி மனசே வெறுத்துப் போச்சுங்க ஆனா அவன் அப்படி இல்ல தெரியுமா ?
“வாழ்றதுக்குதான்டா பணம் வேணும் பணத்துக்காக நாம வாழக்கூடாதுன்னு அடிக்கடி சொல்லுவான் தனக்கு மேல இருக்கவங்கள பாத்து ஏங்கமாட்டான் நம்ம விட கீழ இருக்கவங்கள ஒப்பிடும் போதுதான் நாம எவ்ளோ நல்ல நிலமயில இருக்கோம்னு நிறைவு வரும்னு எனக்கு சொல்லி குடுத்ததே அவன்தான். எவ்வளவு வேல இருந்தாலும் எனக்கான நேரத்த அவன் கொறச்சதே இல்ல.
எனக்கு புரியும் புரியாது தெரியும் தெரியாதுன்னு இல்லாம எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லி அதுக்கு நான் சொல்ற பதிலையும் காது குடுத்து கேப்பான். காச விட காதலும் காசு பின்னாடி ஓடுரத விட காதலிக்கிறவங்களுக்கு நேரம் ஒதுக்குறதும் முக்கியம்ன்னு என்ன உணர வச்சதே அவன் தான். அதுனாலதான் சொல்றேன்.
எனக்கு நீ வேண்டாம் அவன் தான் வேண்டும்!!!!