உனை நீங்கியே உயிர் கரைகிறேனே அத்தியாயம் – 2 – சுதா ரவி
அத்தியாயம் – 2
அமைதியான பௌர்ணமி இரவு ஊரடங்கிய வேளையில் கருப்பு நிற ஜாகுவார் கார் சீரான வேகத்துடன் போய்க் கொண்டிருந்தது.நாள் முழுவதும் ஓடி உழைத்து அசதியில் உறங்கும் மக்களிடையே குற்றங்கள் புரியும் மனங்கள் மட்டும் உறங்காது விழித்திருந்தது. கடற்கரையின் இருளில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு தன் நீள கால்களை வேக வேகமாக எடுத்து வைத்து நாலே எட்டில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகின் அருகே வந்தான். அவன் படகின் அருகில் வந்த மறுநிமிடம் செடிகளின் இடையில் இருந்து படு வேகமாக ஒருவன் ஓடி வந்து தன் இரு கைகளையும் பவ்யமாக கட்டிக் கொண்டு ஆர்ஜேவின் முன் நின்றான்.
படகில் தாவி ஏறியவன் அங்கு நின்றிருந்தவனிடம் காரை காட்டி பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு துடுப்புப் போட ஆரம்பித்தான். ஆர்ஜே சிறிது தூரம் செல்லும் வரை தன் தலையை சொறிந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தவன் மெதுவாக காரினருகில் சென்று படுத்துக் கொண்டான்.
இரு மருங்கிலும் குறுமரங்களும் செடிகளும் நெருக்கமாக வளர்ந்திருக்கும் சதுப்புநில காடுகளில் பகலில் பார்க்கும் போது ரம்யமாக தெரிந்த காட்சிகள் இரவில் ஒரு வித பயத்தையே கொடுத்தன. எப்பேர்பட்ட பலவானும் அந்த இருட்டில் அக்காடுகளில் பயணப்படும் போது சற்று சலனப்பட்டு தான் போவான். ஆனால் ஆர்ஜேவோ எதற்கும் அஞ்சாமல் நெஞ்சுரமும் உறுதியும் கொண்டு தான் செல்ல வேண்டிய இடத்திற்கு அந்த இரவிலும் மிகச் சரியாக வந்து சேர்ந்தான்….
பிச்சாவரத்தில் பில்லுமேடு என்கிற அந்த திட்டு சுனாமிக்கு முன்பு மீனவர்கள் வாழ்ந்தப் பகுதி தான். ஆனால் சுனாமியால் அங்கிருந்தவர்கள் அழிந்த போக,அரசாங்கம் அங்கு குடிபுகுவதை தடை செய்தது. படகை கரையில் கொண்டு நிறுத்தி வைத்து விட்டு காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தான்.விழுந்து கிடந்த சருகுகளின் மீது அவன் நடக்கும் போது ஏற்படுத்திய ஓசை அங்கிருந்த அமைதியான சூழலில் திகிலை ஏற்படுத்தியது.ஒரு கையில் டார்சும் மறு கையில் சிறு கத்தியும் வைத்துக் கொண்டு வழியில் குறுக்கிட்ட செடியின் கிளைகளை வெட்டி வழி ஏற்படுத்திக் கொண்டே நடந்தான். ஆளரவமின்றி போனதால் எங்கும் செடிகொடிகள் செழித்து வளர்ந்து கிடந்தன. சிறிது தூரம் போனதும், செடிகளின் ஊடே சல சலவென்று சத்தம் எழுந்தது.ஒரு நிமிடம் தயங்கியவன் வேகமாக நடக்க ஆரம்பித்தான். எவ்வளவு விரைவாக நடக்க முடியுமோ நடந்து தான் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விட வேண்டும் என்று நினைத்து நடந்தான். நரி ஒன்று தன்னை கவனித்து விட்டு வந்து கொண்டிருக்கின்றது என்பது புரிந்து போனது. ஒற்றை நரி என்றால்
சமாளித்து விடலாம். கூட்டமாக வந்து விட்டால் தப்பிப்பது சிரமம் என்பதை புரிந்தவன் நடையை வேகப்படுத்தினான்.
அவனது நோக்கம் புரிந்த நரி ஊ…ஊ…என்று தன் கூட்டாளிகளை துணைக்க அழைக்க ஊளையிட ஆரம்பித்தது. நரியின் ஊளையை கேட்ட மற்ற நரிகளும் அதற்கு பதில் கொடுக்க ஓநாய்களும் அவற்றுடன் சேர்ந்து கொண்டது. அதை கேட்டதும் ஆர்ஜே ஓட ஆரம்பித்தான். அவன் சுதாரித்து கொண்டதை அறிந்த நரி எங்காவது தன் இரை தன்னிடம் இருந்து போய்விடுமோ என்ற பயத்தில் அவன் மீது பாய்ந்து விட்டது.
அதன் அடுத்த நடவடிக்கையை என்று உணர்ந்தே இருந்ததால் முதலில் சற்று தடுமாறினாலும் சட்டென்று அதன் கழுத்தை பிடித்து தன் கையில் இருந்த கத்தியால் அறுத்து தூக்கிப் போட்டு விட்டு ஓடினான். எவ்வளவு தான் தயாராக இருந்தாலும் நரி அவனை கையில் கடித்து விட்டிருந்தது. மூச்சிரைக்க ஓடியவன் அங்கிருந்த பாழடைந்த வீட்டின் வாசலின் முன் போய் நின்றான்.
அந்த வீட்டைச் சுற்றி மின்வேலி இடப்பட்டிருந்தது. பாதுகாப்பான இடத்திற்கு வந்து விட்டோம் என்று தெரிந்த பின் லேசாக திரும்பி பார்த்தான். அங்கு இரையை தவற விட்ட ஆத்திரத்துடன் நான்கு நரிகள் கண்கள் ஜொலிக்க அவனை பார்த்துக் கொண்டு நின்றன. ஒன்று மட்டும் நாவினில் எச்சில் ஊற சற்று முன்னேறி வேலியின் அருகே வந்தது. அதுவரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன் தன் கையில் இருந்த ரிமோட்டை எடுத்து ஆன் செய்தான்.நரி சரியாக வேலியின் அருகே வந்து கால் வைக்கவும், அதனுடலில் ஹை வோல்ட் மின்சாரம் பாய்ந்து நிமிட நேரத்திற்குள் உடல் கருகி கீழே விழுந்தது. அதைப் பார்த்த மற்ற நரிகள் அதிர்ந்து, அடுத்த நிமிடம் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி மறைந்தது.
அவை ஓடியதை பார்த்து திருப்தியுடன் தலை அசைத்துக் கொண்டு கதவினில் கை வைத்து மூன்று முறை தட்டினான். இருளாக இருந்த வீட்டினுள், கதவு தட்டிய ஓசைக் கேட்டதும் ஒரு சிறு மஞ்சள் விளக்குப் போடப்பட்டது. யாரோ நடந்து வரும் காலடி ஓசையும் கேட்டது. கதவின் தாள் திறக்கப்பட்டு அங்கே நின்ற அந்த கரிய பெண் உருவம் ஆர்ஜேவை பார்த்ததும் நகர்ந்து வழி விட்டது. அவள் கதவை சாத்திவிட்டு வரும்வரை பொறுமையாக நின்றவன் அவளிடம் தன் கையை காட்டி முதலுதவி பெட்டியை கொண்டு வரும்படி கூறினான்.
அவள் கொண்டு வந்து கொடுத்ததும் மடமடவென்று சுத்தம் செய்து தானே ஊசி போட்டுக் கொண்டும் தையலும் போட்டுக் கொண்டு எழுந்து நின்றான். அவன் செய்து கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தவளிடம் வாசலில் விழுந்து இருக்கும் ரத்தத்தை துடைக்கும்படி சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று ஒரு அறையினுள் நுழைந்தான்.
படாரென்று கதவை திறந்துக் கொண்டு நுழைந்தவன் அதே வேகத்துடன் சாத்தினான். கதவு திறந்து மூடும் சப்த்தத்தில் உள்ளே சங்கிலிகள் சரசரவென்று நகரும் ஒலி எழுந்தது.. அதன் பின்னர் அமைதியாக நிசப்தமாக இருந்தது. வெளியில் இருந்த பெண் ரத்தத்தை எல்லாம் துடைத்து விட்டு ஹாலில் இருந்த சோபாவில் வந்து அமர்ந்தாள். ஆர்ஜே சென்ற கதவையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். அவன் சென்று ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு மெல்லிய இசை ஒலிக்க ஆரம்பித்தது.
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி – நீலமயில்
தனை நெஞ்சமும் மறக்கவில்லை நேசமுடன் கலந்த
பாசமோ மறையவில்லை – கோலகுமரன் மனக்கோயிலில்
நிறைந்து விட்டான் குறுநகை தனை காட்டி நறுமலர்
சூட்டிவிட்டான் – கண்டநாள் முதலாய்
பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும் மிகப் பெரிய கொட்டாவியை விட்டு கை கால்களை நீட்டி சோபாவில் படுத்து உறங்க ஆரம்பித்தாள். மீண்டும் மீண்டும் அந்தப் பாடல் மூன்று நான்கு முறை ஒலித்த பிறகு, சிறிது நேரம் அமைதி தவழ்ந்தது. பின்னர் ஒரு பெண்ணின் விசும்பல் ஒலி மெலிதாகக் கேட்டது. மூன்று மணி வாக்கில் படாரென்று கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தான் ஆர்ஜே.
அவன் கதவை திறந்த சத்தத்தைக் கேட்டு சோபாவில் படுத்திருந்தவள் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றாள். கதவை நோக்கி நடந்து கொண்டே “பார்த்துக்க” என்று சொல்லி விடு விடுவென்று சென்று விட்டான். அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவள் உள்ளே சென்று மீண்டும் படுத்து விட்டாள். உள்ளறையில் இருந்து வந்த விசும்பல் சத்தம் மட்டும் குறையவில்லை…
சென்னையில் மயிலாப்பூரில் உத்ராவின் இல்லம்…..
அன்று உத்ராவின் நினைவு நாள். ஆம் இன்றோடு உத்ரா மறைந்து நான்கு வருடங்கள் உருண்டோடி இருந்தது. நான்கு வருடங்கள் முன்பு சிதம்பரத்தில் மிகவும் மகிழ்ச்சியானதொரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்த குடும்பம் ஒரே நாளில் அனைத்தையும் இழந்து உயிரற்று போனது.
வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். ஆனால் ஒருவர் மனமும் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. அதிலும் மித்ராவின் மனமோ உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டிருந்தது. எங்கே தன் உணர்வுகளை வெளிப்படுத்தினால் அது பெற்றோரை பாதிக்குமோ என்று பயந்து மனதிற்குள்ளேயே அழுது கொண்டு நடமாடிக் கொண்டிருந்தாள்.
“சாகின்ற வயதா அவளுக்கு பத்தொன்பது முடியும் முன்பே போய் விட்டாளே.இருக்கின்ற வரை அனைவரையும் தன் மனதால் கட்டிப் போட்டு விட்டு இன்று அனைவரையும் தவிக்க விட்டு சென்று விட்டாளே” என்று எண்ணி கலங்கிக் கொண்டிருந்தாள்.
ஹாலில் படத்தில் சிரித்துக் கொண்டிருந்த உத்ராவை பார்த்ததும் மித்ராவின் நினைவுகள் பின்னோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தது.
நான்கு வருடங்கள் முன்பு விடியலின் நேரம் போர்வைக்குள் இருந்த உத்ரா கனவுலகில் நாட்டியத் தாரகையாக சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தாள்.கனவில் ஆடிக் கொண்டிருந்தவள் பக்கத்தில் படுத்திருக்கும் தங்கை மித்ராவை கையை காலை வீசி துவம்சம் செய்து கொண்டிருந்தாள்.
சற்று நேரம் பொறுத்துப் பார்த்த மித்ரா போர்வையை விளக்கி விட்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து மெல்ல குனிந்து உத்ராவிடம் “இன்னைக்கு எங்கே நடக்குது நாட்டியம்?” என்றாள்.
கனவுலகில் ஆடிக் கொண்டே “ஒரு ராஜா முன்னாடி ஆடுறேன் மித்து. அப்படியே அசந்து போய்ட்டான்”என்றாள் உத்ரா.
“ராஜா எப்படி ரொம்ப அழகா?” என்று கேட்டாள் மித்ரா.
“மச்…மச்…..இல்ல மித்து வில்லன் மாதிரி இருக்கான்”என்றாள் உத்ரா.
“அப்போ வேட்டைய மகாராஜாவா?” என்றாள் மித்ரா.
ஏ பந்தமோ இதி ஏ பந்தமோ
ஏ ஜென்ம பந்தால சுமகந்தமோ
ஏ ஸ்வப்னமோ இதி ஏ ஸ்வப்னமோ
நயனால நடயாடு தொணி ஸ்வப்னமோ
அவளின் சுகமான கனவில் இடை புகுந்து அவளின் காதருகே குனிந்து “லகலக….லகலக… அம்மா வேட்டையன் தொடப்பகட்டையோட வராங்க வேகமாக எழுந்திரு சந்திரமுகி”என்றாள் மித்ரா.
அவசரமாக எழுந்து உட்கார்ந்த உத்ரா “டி பிசாசே என்ன அழகான கனவு இப்படி பாதியில நிறுத்திட்டே” என்று சொல்லி தலையணையால் அடித்தாள்.
“எது அழகான கனவு வேட்டையன் உன் கனவுல வரதா?” என்று கேட்டாள் மித்ரா.
“போ மித்து.நான் ஆடுறது தான் அழகான கனவுன்னு சொன்னேன்…எப்படி ஆடினேன் தெரியுமா?”
“கனவுல தான் ஆட முடியும் நீ…அம்மாவுக்கு தான் டான்ஸ் ஆடுறது பிடிக்காதே அக்கா” என்றாள் மித்ரா.
“ஆமாம் மித்து…இந்த அம்மா ஏன் தான் இப்படி இருக்காங்களோ ?” என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டாள் உத்ரா.
“அதெல்லாம் சரி இன்னைக்கு என்ன பாட்டுக்கு ஆடினே? அந்த ராஜா தர்பார்ல ஒரு ஆள் கூடவா நல்லா இல்ல?”என்று கேட்டாள் மித்ரா.
“ஹே நீ கேட்டதும் தான் நியாபகம் வந்துச்சு இப்போ எனக்கு ஒரு ஹீரோவை ரொம்ப பிடிச்சு இருக்கு”என்றாள் உத்ரா.
“யாருக்கா அது? சிவகார்த்திகேயன்?”
“ம்ம்..இல்ல”
“கௌதம் கார்த்திக்”
“மச்..இல்ல மித்து”
“அப்புறம் யாருக்கா?”
“இப்போ ரெண்டு மூணு நாள் முன்னாடி ஒரு கதை படிச்சேன் மித்து அந்த ஹீரோ தான் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு”.
“ஹீரோ பேர் என்னக்கா?”
“நரேன்”
“ஒ..அந்த பரப்ஸ்ஸா.ஆனா எனக்கென்னவோ உனக்கு வேட்டையன் தான் ஹீரோன்னு தோணுது” என்று சொல்லி உத்ராவின் அடியில் இருந்து தப்பிக்க எழுந்து ஓடினாள்.
அவளை அடிக்க துரத்திக் கொண்டு ஓடிய உத்ரா நேரே சென்று சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த அன்னையை கட்டிக்கொண்டு மூச்சை இழுத்து வாசம் பிடித்துக் கொண்டே “எப்படிம்மா காலையிலேயே இவ்வளவு வாசனையா இருக்கீங்க?”
“ம்ம்ம்…எழுந்தவுடனே குளிச்சா வாசனையா தான் இருப்பேன்.இப்படி பல்லு கூட தேய்க்காம வந்து நின்னா நாறத் தான் செய்யும்” என்றார் உத்ராவின் அன்னை ராஜி.
“மா…என்று கையை காலை உதறியவள் ராஜேஸ்வரி சுதாரிக்கும் முன்னே கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு நகர்ந்து கொண்டாள்.லேசாக முகத்தை சுளித்து கண்களால் தன் கண்டனத்தைக் காட்டி…அம்மு போ போய் பல்லை தேய்ச்சிட்டு வா காபி தரேன்” என்றார்.
தன்னைத் துரத்திய அக்காவை காணாமல் அங்கு வந்த மித்ரா “அதானே பார்த்தேன் அம்மாவும் பொண்ணும் கொஞ்ச ஆரம்பிச்சாச்சா…எல்லா வீட்டிலேயும் ரெண்டாவது பிள்ளைக்கு தான் செல்லம் ஜாஸ்தியா இருக்கும் ஆனா, இங்கே என்று மித்ராவின் காதை பிடித்து திருகி கையில் இருந்த காப்பி கப்பை அவள் கையில் திணித்து…போ! போய் அப்பா கிட்ட கொடுத்திட்டு வா.இன்னைக்கு உனக்கு டெஸ்ட் இருக்கு படிக்கனும் என்று சொல்லிட்டு இருந்தே இங்கே நின்னு இவளோட வம்பு வளர்த்துகிட்டு இருக்கே” என்று விரட்டினார்.
அவர் அங்குப் பேசிக் கொண்டிருக்கும்போதே தனக்கென்று அவர் கலந்து வைத்திருந்த காப்பியை அவசரமாக எடுத்து மட மடவென்று குடித்துக் கொண்டிருந்தாள் உத்ரா. அதை பார்த்துச் சற்று அதட்டலாக…”அம்மு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் பிரஷ் பண்ணாம குடிக்காதேன்னு.சரி-சரி போய் சீக்கிரம் கிளம்பு.ஆடி அசைஞ்சு கிளம்பிட்டு டிபன் வேண்டாம்ன்னு சொல்லி ஓடுவே” என்று மகளை விரட்டினார்.
மகள்களை விரட்டி பள்ளிக்கும் கல்லூரிக்கும் தயாராக சொல்லி விட்டு ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணவனிடம் வந்து “என்னங்க இன்னைக்கு குத்து விளக்கு பூஜை இருக்கு, நான் மூணு மணிக்கே கோவிலுக்குப் போய்டுவேன்.நீங்க கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டா நல்லது. இல்லேன்னா அம்மு வந்து வாசலில் தான் நிக்கணும்”என்றார் ராஜி.
பேப்பரில் இருந்த செய்தியில் மூழ்கி இருந்தவர் மெல்ல தலையை நிமிர்த்தி “சரி ராஜி.நான் நாலு மணிக்கு போய் அம்முவ காலேஜ்லே இருந்து கூட்டிட்டு வந்து விட்டுட்டுப் போறேன். இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்குமா” என்றார் மணிகண்டன்.
அதை கேட்டு பதறியவர் “என்னங்க நீங்க அம்முவ தனியா விட்டுட்டுப் போனா என்ன செய்வான்னு தெரியாது.போன தடவை நடந்தது எல்லாம் மறந்துப் போச்சா?”
சட்டென்று கடுப்பாகி “என்னை என்ன செய்ய சொல்ற ராஜி, இன்னைக்கு நான் சீக்கிரம் வரதே பெருசு.இதிலே இவளுக்கு காவலுக்கு இருக்க முடியுமா?”என்று கேட்டார் மணி.
“நல்ல பெண்ணை பெத்து வச்சு இருக்கேன் ஒரு நாளு கிழமையினா கூட வெளில தெருவுல போக முடியல.ரெண்டு மூணு தடவையா பூஜைக்கு போயிட்டு வந்து நான் பட்ட பாடு ஆடு, மாடு குரங்குன்னு எதையாவது இழுத்து வீட்டுக்குள்ளே விட்டு இருப்பா சை”என்று தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றார்.
ராஜி சொன்ன சம்பவத்தை நினைத்துச் சிரிக்க ஆரம்பித்தார் மணிகண்டன். அன்றும் அப்படி தான் கோவிலில் பூஜை என்று ராஜி சென்று விட அம்முவை வீட்டில் விட்டுவிட்டு மணி வேலைக்குச் சென்று விட்டார். கல்லூரிக்கு சென்று வந்த ஆடையை கலைந்து விட்டு நைட்டியை மாட்டிக் கொண்டு , அம்மா செய்து வைத்திருந்த கைமுறுக்கை தட்டில் வைத்து சாப்பிட்டபடியே டிவியின் எதிர் அமர்ந்து படம் பார்க்க அமர்ந்தாள். சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் வாசலில் மாடு ஒன்று கத்தும் சத்தம் கேட்டு கதவை திறந்து சென்றுப் பார்த்தாள்.
அங்கே நின்றிருந்த மாடு அவளை பார்த்ததும் “மா” என்றழைக்க, உடனே அதனருகே சென்று தடவிக் கொடுத்தாள். அதுவும் தலையை அவளிடம் காட்டியபடியே நின்றது. சரி சாப்பிட ஏதாவது கொடுப்போம் என்றெண்ணி உள்ளே சென்று, ஒரு சட்டியில் “பாவம் இன்னும் பசிக்கிது போல”…என்று நினைத்து உள்ளே சென்று ராஜி வாங்கி வைத்திருந்த தர்பூஸ் பழத்தை வெட்டி எடுத்து வந்து வைத்தாள். இப்படியே இரண்டு மூன்று முறை நடக்க வீட்டில் இருந்த பழங்கள் காய்கறிகள் எல்லாவற்றையும் நிமிட நேரத்திற்குள் காலி செய்த மாடு சட்டென்று அப்படியே கீழே விழுந்து விட்டது. உத்ராவிற்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை…என்ன ஆச்சு திடீர்ன்னு கீழே விழுந்திடுச்சே”என்று சொல்லி அதை தொட்டு எழுப்பப் பார்த்தாள் ஆனால் அதுவோ அப்படியே கிடந்தது.
அவளுக்கு பயம் வந்தது.வேகமாக அதை உலுக்கிப் பார்த்தாள்.ஆனால் அதுவோ இறந்து போனதைப் போல வாயை திறந்துக் கொண்டு படுத்திருந்தது. தெருவில் அப்போது யாரும் இல்லை, என்ன செய்வது என்று புரியாத நிலையில் அழுகை வரும் போல இருந்தது.மீண்டும் ஒரு முறை முயற்சித்து பார்ப்போம் என்று…”ஏய்..ஏய்..எழுந்திரி…எழுந்திரி” என்று எழுப்பினாள். அந்த நேரம் மித்ராவும் வர இருவரும் சேர்ந்து முயற்சித்தார்கள்.ஒரு அரைமணி நேரம் கழிந்த நிலையில் மாட்டுக்காரன் தேடி வர அங்கு களேபரம் ஆரம்பித்தது.
வேலையை முடித்து விட்டு கோவிலில் போய் மனைவியை அழைத்துக் கொண்டு வீடு இருக்கும் தெருவில் நுழைந்தப் போது அவர்கள் வீட்டின் முன்னே ஒரே கூட்டமாக இருந்தது. இருவரும் பதறி அடித்துக் கொண்டு கூட்டத்திற்குள் நுழைந்து என்னவென்று பார்த்தனர். அங்கு மாடு வாசலில் விழுந்து கிடக்க , உத்ரா கையை பிசைந்து கொண்டு அழுது கொண்டும் நின்றிருந்தாள்.பக்கத்தில் நின்ற மித்ராவும் அக்கா அழுவதை பார்த்து அழுது கொண்டிருந்தாள்.
மாட்டின் சொந்தக்காரன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தான். அவனருகில் சென்ற மணிகண்டன் என்னவென்று விசாரித்தார். அவன் நடந்த கதையை சொல்ல கடுப்பான ராஜி.ஏண்டி இப்படி பண்ற வீட்டுகுள்ள ஒழுங்கா உட்கார்ந்து இருக்க வேண்டியது தானே.பாரு என்னத்தை இழுத்து வச்சு இருக்கே” என்று மொத்தினார்.
பின் ஒருவாறு அவனை சமாதானப்படுத்த முயல அவனோ பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் தான் ஆயிற்று என்ற முரண்டு பண்ண…அதற்குள் கூட்டத்திற்குள் நின்ற எவரோ மாட்டின் மீது தண்ணீரை ஊற்ற…அதுவரை மயங்கி கிடந்த மாடு உடம்பை உதறிக் கொண்டு எழுந்து நின்றது.அதை பார்த்ததும் நால்வருக்கும் போன உயிர் திரும்பி வந்தது..
பிரச்சனை முடிந்து வீட்டிற்குள் போகும் நேரம் ராஜின் தோழி போகிற போக்கில் “என்ன ராஜி உங்க வீட்டு சாப்பாட்டுல மாடே மயக்கம் போட்டுடுச்சே”என்று கேட்டு சிரித்து விட்டுப் போக…அன்று முழுவதும் ராஜி மகளிடம் பேசாமல் முறைத்துக் கொண்டிருந்தார்.
நடந்த பழைய சம்பவத்தை அசை போட்டுக் கொண்டிருந்த மூவரும் ஒவ்வொரு அறையில் இருந்தாலும், துக்கம் தாங்காமல் கண்ணீரை சிந்திக் கொண்டிருந்தனர். எங்கே சுற்றினாலும் அம்முவின் மறைவு என்கிற நிதர்சனம் அவர்களை முகத்தில் அறைந்ததுப் போல் தாக்கியது.
(தெடரும்)
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |