நீயெனதின்னுயிர் – 3 – ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 3 – ஷெண்பா
“இளம் தொழில் அதிபரின் காதல் அரங்கேற்றம்… இளம் பெண்களின் கனவுக் காதலன். நான்கே ஆண்டுகளில் தொழில் சாம்ராஜியத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த, செந்தளிர் குழுமத்தின் உரிமையாளர் விக்ரம் குமார் சௌத்ரியின் காதல் லீலைகள். இது உண்மையா? அல்லது எப்போதும் தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள, அவர் செய்யும் தந்திரமா?”
கல்லூரியை விட்டு வரும்போதே, ஹாஸ்ட்டலின் விசிட்டர்ஸ் அறையிலிருந்த செய்தித்தாளைக் கையோடு கொண்டு வந்திருந்த ராகினி, முதல் பக்கத்திலிருந்த சூடானச் செய்தியைப் பார்த்ததும், அதை வைஷாலியின் காதில் விழும்படி சப்தமாகப் படித்தாள்.
அடுத்த வரியை அவள் படிப்பதற்குள், அவளது கையிலிருந்த செய்தித்தாளைப் பிடுங்கிக் கொண்டாள் வைஷாலி.
விக்ரமைக் கட்டியணைத்து ஒரு பெண் முத்தமிடும் புகைப்படத்தை, கடமையாக முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். முன்தினம் மாலில் அவள் கண்ட அதே காட்சி தான். ‘நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது, இவங்களுக்கு இதுதான் முக்கியமா?’ என எரிச்சலுடன் நினைத்துக் கொண்டவள், எதுவும் பேசாமல் யோசனையுடன் இப்படியும் அப்படியுமாக நடந்தாள்.
ராகினியும், மற்றவர்களும் அமைதியாக, அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவசரமாகக் கைப்பையை எடுத்துக் கொண்டு, யாரிடமும் எதுவும் சொல்லாமல் கிளம்பினாள் வைஷாலி.
“இத்தனை வேகமா எங்கேடீ போறா?” என்று புரியாமல் கேட்டாள் ஜனனி. “இதுகூடவா தெரியலை! எல்லாம், அந்தத் தொழில் சாம்ராஜ்ஜியத்து இளவரசரைப் பார்க்கத்தான்!” என்று கேலியாகப் புன்னகைத்தாள் ராகினி.
விக்ரமின் அலுவலகத்தினுள் நுழைந்தவளை, எதிரிலிருந்த ரிசப்ஷன் பெண் புன்னகையுடன் வரவேற்று, “குட் மார்னிங் மேடம். வெல்கம் டூ செந்தளிர் குரூப் ஆஃப் கம்பெனீஸ். கேன் ஐ ஹெல்ப் யூ!” என்று வினவினாள்.
பதிலுக்குப் புன்னகைத்தவள், “குட்மார்னிங்! உங்க சேர்மனைப் பார்க்கணும்.”
”எக்ஸ்கியூஸ் மீ! சார், இப்போ யாரையும் பார்க்க மாட்டாங்களே!”
“இல்ல, அவர்தான் என்னை வரச்சொல்லியிருக்கார்.”
“இருக்காதே… இது சார் ரிலாக்ஸ் பண்ற நேரம்… சார் யாரையும் பார்க்கமாட்டாங்க” என்று பதிலளித்தாள்.
‘அப்படியென்ன வெட்டி முறித்தார் உங்க சேர்மன்?’ – மனத்திற்குள் தோன்றிய எண்ணத்தை முகபாவத்தில் வெளிக்காட்டாமல், “நான் அவர் சொல்லித் தான் வந்திருக்கேன். என்னை உள்ளே அனுப்பலேன்னா, நீங்கதான் உங்க சேர்மனுக்குப் பதில் சொல்லணும்!” என்றபடி தோளைக் குலுக்கினாள்.
அதை நம்பமுடியாமல் வைஷாலியைப் பார்த்தவள், “ஒரு நிமிஷம் மேடம்! நான் செக்ரட்டரி சாரிடம் கேட்டு, கன்ஃபார்ம் பண்ணிக்கிறேன்!” என்றபடி, விக்ரமின் பர்சனல் செக்ரட்டரியைத் தொடர்பு கொண்டாள்.
விஷயத்தை போனில் அவனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அங்கிருந்து மெல்ல நழுவினாள் வைஷாலி. அதைக் கவனித்துவிட்டு, “மேடம்!” என்று குரல் கொடுத்த ரிஷப்ஷனிஸ்ட்டை அசட்டை செய்து விட்டு, வேக நடையுடன் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தவள் பாதி ஹாலைக் கடக்கும் போதே, விக்ரமின் செக்ரட்டரி அவளை எதிர்கொண்டு வந்தான்.
“ஹலோ! எங்கே வந்தீங்க? இப்படி அனுமதியில் லாமல் வரக்கூடாதுன்னு தெரியாது உங்களுக்கு? எதுக்கு இப்படி அடாவடித்தனம் பண்றீங்க?” என்றவனது அழுத்தமான குரலில், கேட்டான்.
“ப்ளீஸ்… ஒரு பத்து நிமிஷம். சாரைப் பார்த்துப் பேசிட்டு போயிடுறேன். இது ரொம்ப முக்கியமான விஷயம்!” என்றாள் கெஞ்சலாக.
“ப்சு! ஒருமுறை சொன்னால், புரியாதா உங்களுக்கு?” அவன் எரிச்சலுடன் கேட்க, வைஷாலிக்கும் கோபம் வந்தது.
“அதையே தான் நானும் சொல்றேன்; ஒருமுறை சொன்னால் புரியாதா உங்களுக்கு? போன வாரம் காலேஜ் ஃபங்ஷனுக்கு வந்த போதே, அவரைப் பார்த்துப் பேச அனுமதி கேட்டும் மறுத்தீங்க. இப்போ, இங்கே வந்தால் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக பேசறீங்க!” என்றவளை மொத்த அலுவலகமும் ஆர்வத்துடன் பார்த்தது.
“இன்னைக்கு என்ன ஆனாலும் சரி. என் வேலை முடியாமல், இங்கிருந்து போகமாட்டேன். எடுத்த வேலையை, ஒழுங்காகச் செய்யத் தெரியாத, இர்ரெஸ்பான்சிபில் பெர்சன் உங்க சேர்மன்!” என்றாள் கோபத்துடன்.
“மைண்ட் யுவர் வேர்ட்ஸ்…” என்று குரலுயர்த்தியவனை, “ராகவ்! அங்கே என்ன பிரச்சனை?” என்று கேட்ட விக்ரமின் குரல் தடுத்தது.
தனது அறை வாசலருகில் நின்றிருந்த விக்ரமைப் பார்த்தாள் வைஷாலி. விக்ரமின் செகரெட்டரி ராகவ் பவ்யமாக, “சார்! இவங்க நம்ம…” எனச் சொல்ல ஆரம்பித்தவனை, கைநீட்டித் தடுத்தான்.
ரோஜா வண்ண சல்வாரில், கலைந்த தலைமுடி நெற்றியில் புரள, நீண்ட விழிகளின் இமைகள் கோபத்தில் விரிந்திருக்க, உதட்டைச் சுழித்து நின்றிருந்தவளை, கண்கள் இடுங்கப் பார்த்தான் விக்ரம்.
“வெயிட் ராகவ், நான் பேசிக்கிறேன்” என்றவன், வைஷாலியிடம், “ப்ளீஸ் கம் இன்” என்றான்.
ஒதுங்கி நின்ற ராகவை முறைத்துவிட்டு, விக்ரமின் அறைக்குச் சென்றாள்.
“உட்காருங்க மிஸ்…”
“வைஷாலி” என்றாள் அழுத்தமாக.
லேசாக முறுவலித்துக் கொண்டவன், “சொல்லுங்க; என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்தீங்க?”
“நான் எஸ்.எஸ்.வீ. காலேஜில் எம்.எஸ்சி. ஃபிசிக்ஸ் ஃபைனல் இயர் படிக்கிறேன்” என்றவளுக்கு, கோபம் சிறிதும் குறையவில்லை.
“ஓ! அந்தக் காலேஜில் படிப்பது, இவ்வளவு கோபப்படும் அளவுக்கு இருக்கா என்ன?” என்றதும், அவன் தன்னைக் கிண்டல் செய்கிறான் எனப் புரிந்தது அவளுக்கு.
பதிலுக்குப் பேச்சை வளர்க்காமல், தன் வேலையில் கவனமானாள். “சாரி சார். உங்க தாத்தாவோட காலத்தில் ஆரம்பித்த காலேஜ். அவருக்குப் பிறகு, உங்க அப்பாவோட பொறுப்பில் இருந்த வரைக்கும், எல்லாம் நல்லாவே நடந்தது. ஆனால், நீங்க இந்தப் பொறுப்பை எடுத்து நடத்த ஆரம்பித்த பின், எல்லாமே தலைகீழாக மாறிடுச்சி. நீங்க ஆரம்பித்த பிஸினஸை மட்டும் நல்லா பார்த்து வளர்த்தா போதுமா?
ஒண்ணு, இந்தக் காலேஜ் நம்ம பொறுப்பில் இருக்கே என்ற அக்கறையில் நிர்வாகம் பண்ணணும். அப்படி இல்லைனா, தான் ஒப்படைத்த ஆள் திறம்பட நடத்துறாரா என்ற அளவுக்காவது அவ்வப்போது கண்காணிச்சிருக்கணும்.  ரெண்டும் இல்லாம, இத்தனைப் பேரோட எதிர் காலத்தை, ஏன் கேள்விக்குறி ஆக்கறீங்க?” என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்.
சுழல் நாற்காலியில் ஒரு பக்கமாகத் திரும்பி அமர்ந்து, வலது முழங்கையை டேபிள் மீதும், இடது கையை முகவாயில் வைத்துக் கொண்டு, கால் மீது கால் போட்டு, அவள் சொல்வதைக் கவனமாகக் கேட்டவன், “சொல்ல வர்றதை, கொஞ்சம் தெளிவாகச் சொன்னால் நல்லா இருக்கும்” என்றான்.
“சார்! எத்தனையோ பேருக்கு இந்தப் படிப்பு தான் ஆதாரமே! எங்களுக்கு நல்ல கிளாஸ் ரூம்ஸ், லேப் கிடையாது. புதுசாக வந்த புரொஃபசர்ஸ், லெக்சரர்ஸ் எல்லாம் சரியே இல்லை. இவ்வளவு ஏன்? இப்ப அடிப்படை வசதி கூடச் சரியாக இல்லை. ஹாஸ்டல் லட்சணம் அதுக்கு மேல… சாப்பாடு முதல் குடிக்கும் தண்ணீர் வரைக்கும், வாயில் வைக்க முடியறதில்லை.
இவ்வளவு எதுக்கு சார்? நைட்ல, எங்களுக்கு ரூம்ல இருக்கவே பயமா இருக்கு. திடீர்னு யாரோ காம்பௌண்ட் சுவர் மேல ஏறிக் கத்தறாங்க. கதவு மேல கல்லை விட்டெறியறாங்க. ஹாஸ்டல் போனில் யார் பேரையாவது சொல்லிக் கூப்பிட்டு, சே…! சொல்லவே கூசுது!” என்றவளின் முகம் சுருங்கியது.
“இதையெல்லாம் வார்டனிடமோ, பிரின்சியிடமோ கம்ப்ளெயிண்ட் செய்தால், அவங்க, எங்களைத்தான் குறை சொல்லி அசிங்கப்படுத்தறாங்க” என்றாள்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த விக்ரமின் முகம், கடினமாக மாறியிருந்தது.
“சாரி மிஸ்.வைஷாலி! இத்தனைப் பிரச்சனையும், இந்த நான்கு வருடத்தில்… ஒரு முறைகூட என் கவனத்துக்கு வரவில்லை. ரியலி சாரி!” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.
“டோண்ட் வொர்ரி! இனி இப்படி எந்தத் தவறும் நடக்காமல் பார்த்துக்கறேன். தேவையான நடவடிக்கையை உடனே எடுக்கிறேன்” என்றான் உறுதியான குரலில்.
“தேங்க்யூ சார்!” எனச் சந்தோஷமாக சொன்னவள், “உங்களை நம்பலாமா?” எனக் குறும்புடன் கேட்டாள்.
“நம்பித்தான் ஆகணும். வேற வழியே இல்லை” என அவனும் இலகுவாகப் புன்னகைத்துவிட்டு, இண்டர் காமில் தன் செக்ரட்டரியை அழைத்தான்.
“ராகவ்! நாளைக்குக் காலையில பதினோரு மணிக்கு, எந்தப் ப்ரோக்ராம் இருந்தாலும் கேன்சல் பண்ணிடுங்க. நம்ம ட்ரஸ்ட் மெம்பர்ஸ் அத்தனைப் பேருக்கும், மெயில் அண்ட் போன் மூலமா… தகவலைச் சொல்லி, வரச் சொல்லுங்க. அதுக்கான ஏற்பாட்டையும் செய்திடுங்க!” என்று உடனே தனது உத்தரவைப் பிறப்பித்தான்.
“இப்போ சந்தோஷமா மிஸ்.வைஷாலி?” என்றான் சிரிப்புடன்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்!” என்றவள், கடைக்கண்ணால் ராகவைப் பார்த்தாள். ‘உன்னை மாட்டி விடாமல் போறதில்லை!’ என மனதிற்குள் சொல்லிக்கொண்டவள், “சார்! நீங்க காலேஜ் ஃபங்ஷனுக்கு வந்த போதே, உங்ககிட்ட பேசணும்னு இவர்கிட்ட சொன்னேன்; இவர்தான், முடியாதுன்னு ஒரேயடியாக மறுத்துட்டார். முதல்ல, நீங்க ஒரு நல்ல செக்ரட்டரியைத் தேடிக் கண்டுபிடிங்க!” எனச் சொல்ல, விக்ரம் வாய்விட்டு நகைத்தான்.
காதில் புகைவராத குறையாக, ராகவ் உர்ரென்ற முகத்துடன் நின்றிருக்க, “ஓகே மிஸ்.வைஷாலி, நான் உடனே இதைக் கவனிக்கிறேன். உங்களோட முயற்சிக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்!” என்றான்.
”தேங்க் யூ சார். நானும் உங்களோட ரிலாக்சேஷன் டைமை எடுத்துக்கிட்டேன்; சாரி. என்னை நம்பி காலேஜ் ஜெனரல் செகரெட்டரியாக நியமிச்சவங்களுக்கு, நான் நியாயமா நடந்துக்கணுமே…”
“ம், குட்!” எனப் பேசிக்கொண்டிருக்கும் போதே, மூவருக்கும் டீ வந்து சேர்ந்தது.
மூவரும் டீயைச் சுவைத்துக் கொண்டிருக்க, வைஷாலி யோசனையும், தயக்கமுமாக விக்ரமை பார்த்தாள்.
“என்னவோ கேட்கணும்னு நினைக்கிறீங்க, கேளுங்க” என்று அவளை ஊக்கப்படுத்தினான்.
“அ…து, இன்னைக்குப் பேப்பரில் உங்களைப் பத்தி ஒரு விஷயம்…” என்றவள் ராகினி படித்த செய்தியைச் சொன்னாள்.
அலட்சியமாக புன்னகைத்தவன், “அதை மட்டும் தான் பார்த்தீங்களா? இதைப் பார்க்கலையா?” என்றவன், டேபிள் மீதிருந்த ஒரு பேப்பரைப் பிரித்து அவளெதிரில் நீட்டினான்.
‘காதலர்களின் ஊடல், பொது இடத்தில் அரங் கேற்றம்’ என்ற தலைப்பிட்டு, விக்ரம் தன்னை முத்தமிட்ட பெண்ணைத் தள்ளிவிடுவது போன்றிருந்த போட்டோ வைப் பிரசுரித்திருந்தனர். என்ன சொல்வதென்று தெரியாமல் அவனைப் பார்க்க, அவனோ எதுவுமே நடக்காதது போலச் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“இதுக்கு நீங்க மறுப்போ, கண்டனமோ சொல்லையா சார்?”
“எதுக்குச் சொல்லணும்?”
“சார்! நான் உங்களைப் பற்றி ஓரளவுக்குக் கேள்விப்பட்டிருக்கேன். இப்படிபட்ட விஷயமெல்லாம், உங்க வாழ்க்கையைப் பாதிக்கத் தானே செய்யும்?”
“என்னைக் காட்சிப் பொருளாக்கி, அவங்க விளம்பரம் தேடிக்கப் பார்க்கிறாங்க. போகட்டும். எனக்கிருக்கும் வேலையில், இந்த டென்ஷனைச் சுமக்க எனக்கு விருப்பமும் இல்லை. இதையெல்லாம் நினைத்துக் கவலைப்பட, நேரமும் இல்லை. யாருக்காகவும் என்னை நியாயப்படுத்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை! என்னைச் சேர்ந்தவங்களுக்கு, என்னைப் பற்றி நன்றாகத் தெரியும்!” என்றான் அழுத்தமாக.
அவன் சொன்னதிலிருந்த உண்மை அவளுக்கும் புரிய, மௌனமாய்ப் புன்னகைத்தாள்.
(தெடரும்)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...