அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு | சதீஸ்
எண்ணூர் தனியார் தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை எண்ணூரில் கடற்பரப்பில் இருந்து கோரமண்டல் தனியார் உர ஆலைக்கு கடலுக்கு அடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த டிசம்பர் 26ஆம் தேதி நள்ளிரவில் வாயு கசிந்தது. இதனால் ஆலைக்கு அருகே உள்ள சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் உள்ளிட்ட 8 கிராமங்களில் வசித்து வந்த ஏராளமான பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன.
அம்மோனியா வாயுவை சுவாசித்ததால் பாதிப்புக்கு உள்ளான மக்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அப்பகுதிகளில் வசித்த மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறி பிற பகுதிகளுக்குச் சென்றனர். அம்மோனியா வாயு கசிந்த சம்பவத்தால் கொந்தளித்த அப்பகுதி மக்கள்,கோரமண்டல் ஆலையை முற்றுகையிட்டனர்.
அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் இந்த பகுதி மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குழு அமைத்து இது குறித்த ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. கோரமண்டல் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட 7 பேர் கொண்ட குழுவினர், அந்த நிறுவனம் தற்காலிகமாக செயல்பட தடை விதித்து நோட்டீஸ் ஒட்டினர்.
பின்னர் அடுத்த ஓரிரு நாட்களில் மீண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஐஐடி நிபுணர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய குழு கோரமண்டல் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அந்தக் குழு, ஆலை மீண்டும் இயங்க அனுமதி அளித்தது. எனினும், தொழிற்சாலையை மூட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்திருப்பதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் விரைவில் இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அம்மோனியா கசிவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சரின் தனிச் செயலாளர் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் சுற்றுச்சுழல் துறை கூடுதல் தலைமை செயலாளர், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, இழப்பீடு வழங்குவது பற்றி ஆலோசித்து முக்கிய முடிவை எட்டியதாக தெரிகிறது.