பபாசியும்…பாக்கெட் நாவலும்.

 பபாசியும்…பாக்கெட் நாவலும்.

பபாசியும்…

பாக்கெட் நாவலும்.

பேரன்புமிக்க பபாசி நிர்வாகிகளுக்கு வணக்கம்.

என் பெயர் ஜி.அசோகன், கடந்த 45 ஆண்டுகளாப் பத்திரிகை மற்றும் பதிப்பகத் துறையில் வாழ்ந்து வருகிறேன்.

நீண்ட நாட்களாக உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ஏனோ எழுதவில்லை.

இப்போது அதற்கு நேரம் வந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாகப் பெரும் மழை, வெள்ளம் என உள்ளது.

சென்ற மாதம் பெய்த மிக்ஜாம் புயலில் சென்னையே அதிர்ந்து விட்டது, தொடர்ந்து தென் தமிழ்நாட்டில் காட்டாற்டு வெள்ளம் வீதிகளில் ஓடி சொல்லொண்ணா துயரத்தில் உள்ளார்கள்.

மீண்டும் சென்னையில் மழை வரும் என வானிலைக் குறிப்புகள் வந்தவண்ணம் உள்ளது.

இந்தியாவின் பெரிய புத்தகத் திருவிழாவில் பபாசி நடத்தும் விழாவும் ஒன்று.

விழா முடிந்த சிலமணி நேரத்திலேயே பல கோடி வர்த்தகம் என பபாசியே பொதுத் தகவல் தருகிறது.

அந்தளவு வர்த்தகம் நடக்கும் இந்தத் திருவிழாவை நடத்த எவ்வளவு பெரிய திட்டமிடல் வேண்டும்.

பபாசி நடத்தும் இந்தப் புத்தக விற்பனைச் சந்தையான இந்தத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் கிராமங்களில் நடக்கும் வாரச்சந்தை போல் தான் நடக்கிறது என்பதைப் பல வருடங்களாகத் தமிழ் உலகமே பார்த்து வருகிறது.

ஆயிரக்கணக்கான விற்பனைக் கடைகளை அமைத்து அதைச் சங்க உறுப்பினர்களுக்கு குலுக்கல் முறையில் ஒரு குறிப்பிட்ட தொகையில் விற்பனை செய்வதும், உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்குக் கள்ளமார்க்கெட் போல் தாறுமாறு விலையில் பாவ புண்ணியத்திற்கு ஒதுக்குவதுபோல் ஒதுக்குவீர்கள். நான் கேட்கிறேன், புத்தகங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட விலையில் விற்கப்படும் ஒன்று, அதை உறுப்பினர்கள் அல்லாதவர்கள் இவ்வளவு யானை விலை குதிரை விலை கொடுத்து வாங்கினாலும் அதே விலைக்குத் தான் விற்பனை செய்வார்கள், அப்ப உறுப்பினர்கள் எவ்வளவு லாபம் சம்பாதிப்பார்கள் என்று எடுத்துக் கொள்வதா அல்லது உறுப்பினர்கள் அல்லாதவர்கள் நஷ்டம் அடைவார்கள் என எடுத்துக் கொள்ளலாமா?

இவ்வளவு கூட்டம் வருகிறது. பொதுமக்கள் வரும் இடத்தில் அவர்களுக்கு தகுந்த வசதிகளை எப்போதுமே செய்து தந்ததுமில்லை. நான்கு பக்கமும் இயற்கை உபாதைகளுக்கான வசதி கிடையாது.

வாங்கும் புத்தகத்திற்குக் கட்டணம் செலுத்த வங்கிப் பண அட்டைகளைப் பயன்படுத்த சரியான இணைய வசதி இல்லாமல் அங்க நில்லுங்க வரும், இங்க நில்லுங்க வரும், என மக்கள் அலையும் வேதனைக் காட்சிகள் பரிதாபத்திற்கு உரியது.

இவ்வளவு பெரிய புத்தக சந்தையில் நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொண்டு, அதை எடுத்துச் செல்ல பெரிய சணல் பைகளை லாபமற்ற விலையில் பபாசி பெயரோடு கொடுத்தால் எவ்வளவு மகிழ்வார்கள் மக்கள்!.

உணவு ஏற்பாடுகளைப் பற்றிய விமர்சனங்களை முகநூலில் கழுவிக் கழுவி ஊற்றுவதையெல்லாம் நீங்கள் பார்ப்பது இல்லை எனத் தெரிகிறது.

புத்தகங்களின் பிரம்மாக்கள் எழுத்தாளர்கள். அவர்களை வைத்துத்தான் இந்தப் புத்தக உலகமே!, அவர்களுக்குரிய மரியாதையை நீங்கள் தருகிறீர்களா?, எழுத்தாளர்களுக்கு ஒர் ஓய்வு அறை உண்டா?,

புத்தகம் வாங்க அவர்களுக்கு எதுவும் சிறப்பு சலுகைகள் தருகிறீர்களா?

உணவு வேளையில் கடை எடுத்துள்ள பதிப்பாளர்களுக்கு உணவு தருவதும் ஜெயில் கைதிகளை விட கேவலமான நிலைமை.

உணவு நேரத்தில் உணவுகளை அவர்களைக்குத் தனியிடத்தில் தரலாம். அல்லது உணவுகளை அட்டைப்பெட்டிகளில் வைத்துக் கடைகளுக்கே அனுப்பி விட்டால் அவர்களுக்கும் உதவியாக இருக்கும், கூட்ட நெரிசலையும் தவிர்க்கலாம்.

பபாசி ஒவ்வொரு வருடமும் நடத்தும் இந்த முழு வியாபார நோக்க சந்தையில் தினமும் பொதுக்கூட்டம் நடத்துவீர்கள். அதில் இலக்கிய எழுத்தாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட ஒருசிலரையே வருடா வருடம் அழைத்துப் பேச வைப்பீர்கள். அதில் பேசும் அவர்களின் புரியாத எழுத்தைப் போலவே பேச்சும் இருக்கும் என்பதால் அங்கு மக்கள் ஒதுங்கவே மாட்டார்கள்.

ஒர் உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த அளவு மக்கள் படிக்க ஆர்வமாக வருவதற்கு முக்கிய காரணமே சுஜாதா, ராஜேஷ்குமார், தேவிபாலா, பட்டுக்கோட்டை பிரபாகர், சிவசங்கரி, இந்துமதி, சுபா, ரமணி சந்திரன் இந்திரா சௌந்தர்ராஜன், பாலகுமாரன், அனுராதா ரமணன் போன்ற எளிமையாகப் படிக்கும்படி எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் தான். இவர்களுக்கு இதுவரை எந்தவித தனிமரியாதையையும் செய்தது இல்லை.

நீங்கள் அவர்களுக்குப் பெரிய மரியாதை செய்வது இருக்கட்டும், அவர்கள் இந்த விழாவிற்கு வர இலவச அனுமதி அட்டையையாவது கொடுக்கலாமே?, அதில் கூடவா உங்கள் வர்த்தகம்?.

நானும் பலமுறை பதிவு செய்துள்ளேன், சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் போன்ற எழுத்துக் கடவுள்களுக்கு சிலை வைக்க முயற்சி எடுக்கலாம் என்று.

இவ்வளவு கோடியில் வர்த்தகமும் வரவுசெலவும் செய்யும் பபாசி அதற்கான ஒரு தனி சொந்தக் கட்டிடம் கட்டியிருக்கலாம், அல்லது அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தால், அது அரசால் ஏற்கப்பட்டு பெரிய கட்டிடம் கட்டித்தந்திருக்கலாம்.

இத்தனை கோடி வர்த்தகம் நடக்கிறது, இந்த வரவுசெலவுக் கணக்கை உறுப்பினர்கள் பார்க்க முடியுமா?, இதன் தலைவர், செயலாளர், பொருளாளர்கள் நியமிப்பதில் ஒரு வட்டம் உள்ளது, அவர்களே சுற்றுமுறையில் வருவது தான் வாடிக்கை. காரணம், புதிய அமைப்பு வந்தால் உள்ளே நடக்கும் ஊழல்கள் வெளியே வந்துவிடும் என்ற பாதுகாப்பு அரணே.

இந்த முறை மழையால் பாதிக்கப்பட்ட பதிப்பகங்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டுள்ளார்களே… அவர்களுக்கு நீங்கள் எந்தக் காப்பீடு செய்தீர்கள்?. அவர்களை பபாசி நிர்வாகிகள் சந்தித்து, கவலபடாதீங்க உங்க நஷ்டத்தை நாங்க ஏற்கிறோம் என்று ஆறுதல் சொன்னீர்களா.

அப்படி செய்யாமல் எப்படி இவ்வளவு பெரிய விற்பனை சந்தையை அமைக்கிறீர்கள்?, அதை அரசாங்கம் பார்க்காதா?.

இதுபோன்ற குறைபாடுகளையே பெரிய புத்தகமாக எழுதலாம். நான் இதை எழுத தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கிடையாது, அப்ப உனக்கேன் அக்கறை என கேட்கலாம்.

எனக்கு இதைக் கேட்க தார்மீக உரிமை இருக்கிறது. ஆம். இங்க புத்தகங்கள் வாங்க வருபவர்களுக்கு மலிவு விலையில் புத்தகங்களைக் கொடுத்து வாசிப்புப் பழகக்கத்தை நேசிக்கவைத்தவன் நான் என்று மார்தட்டி சொல்வேன்.

நானும் இரண்டு முறை உறுப்பினர் அல்லாத ஒதுக்கீட்டில் கடை வைத்தேன்.

‘அப்ப நீ ஏன் உறுப்பினர் ஆக முயற்சி செய்யவில்லை?” எனக் கேட்கலாம். செய்தேன் …

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர்கள் ஆவதற்கு விண்ணப்ப படிவம் தந்தீர்கள், நானும் அதை வாங்கி பூர்த்தி செய்து சில ஆயிரம் ரூபாய்க்கு கேட்பு காசோலையும் தந்தேன். பலமுறை இதுபற்றி சங்க நிர்வாகிகளிடம் கேட்கும் போதெல்லாம் பரிசீலனையில் உள்ளது என்பார்கள். ஒருமுறை பபாசி அலுவலகம் போனேன். அது ஒரு எம்.எல்.ஏ அலுவலகம். போல், ஒரு அலுவலக சிப்பந்தி இருந்தார். அவரிடம் என் விண்ணப்பம் கொடுத்த விவரத்தை சொல்லிக் கேட்டேன், அதற்கு அவர்(அவர் பெயர் சுதாகர் என்று நினைக்கிறேன், இவர் இப்ப இல்ல ஆனா அப்போது இவர் தான் ராஜா) … சார் அதெல்லாம் அப்பவே முடித்து உறுப்பினர்கள் சேர்த்துவிட்டோம், உங்க விண்ணப்ப படிவம் இதோ இந்தப் பெட்டியில் இருக்கு என்றார். என் படிவத்தைத் தேடினேன், கிடைத்தது. அதில் என் விண்ணப்பம் நிராகரிக்கக் காரணம் எழுதப்பட்டிருந்தது… கையொப்பத்தில் நிர்வாகத்தின் முத்திரை இல்லை என்று. அதைப் பார்த்து நான் பட்ட வேதனை சாதாரணம் அல்ல, என் விண்ணப்பம் போல் நூற்றுக்கணக்கில் வங்கி கேட்போலையுடன் காலாவதியானவைகள் இருந்தது. அந்த விண்ணப்பப் படிவங்களை திருப்பி அனுப்பக்கூட நிர்வாக திறமையில்லை.

பலமுறை என் நண்பர்களான நிர்வாகிகளிடம் என்னை எப்ப உறுப்பினராக்குவீங்க எனக் கேட்பேன், அதற்கு அவர்கள், அசோகன் அண்ணே இன்னும் யாரையும் புதிய உறுப்பினர்கள் ஆக்கவில்லை.

இந்த வருடம் உங்களை கண்டிப்பா உறுப்பினராக்கி விடலாம் என்பார்கள். நானும் சத்யா படத்தில் கிட்டியிடம் ஏமாறும் கமலஹாசனாக வந்துவிடுவதும் வாடிக்கை(அந்த சத்யா மாதிரி அல்ல நான் விருமாண்டி என்பது அவர்களுக்குத் தெரியாது).

இதே நிர்வாகக் குறைகள் தொடர்ந்தால் பதிப்பாளர்களும் சோர்ந்து போவார்கள். மக்கள் வரமாட்டார்கள்.

ஊசிக்குறிப்பு :

இந்தக்கடிதத்தின் நோக்கம் எனக்கு உறுப்பினராக வேண்டும் என்றல்ல, என் புத்தகங்கள் இந்த நூலக வர்த்தக சந்தையில் விற்றுதான் என்ற நிலமை எனக்கில்லை, என் உயிருக்கும் மேலான வாசக தெய்வங்கள் எனக்குத் தரும் ஆதரவே போதும்

அன்புடன்,

ஜி.அசோகன்..

ஆசிரியர், வெளியீட்டாளர்:

பாக்கெட்நாவல்

க்ரைம்நாவல்

குடும்பநாவல்

ஜாப் கைடுலைன்ஸ்

பங்கு மார்க்கெட்

பேசும்பொம்மை

பாக்கெட்புக்ஸ்

விரைவில் …

கும்கி

by

Asokan Pocket Novel

thanks sir

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...