பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..! | சதீஸ்
விமான நிலைய புதிய முனையம் உட்பட 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருச்சி வந்தார். திருச்சி வந்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வரவேற்ற முதல்வர் ஸ்டாலின் அவருடன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். நேற்று முதல்வர் ஸ்டாலின் சந்தித்த நாளையில் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல உள்ளார்.
2024-ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி, வரும் 19-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 13 நாட்களுக்கு தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்து வருகிறது.
இந்நிலையில், கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
அண்மையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பெருவெள்ளத்தில் சிக்கிய போது, அதனை பேரிடராக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும், நிவாரணத்துக்கு யார் வீட்டு பணத்தை கேட்கிறோம்.. உங்கள் வீட்டு பணத்தையா கேட்கிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கேள்வி எழுப்பியதும் சர்ச்சையானது.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அப்போது, தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி பெறுவது குறித்தும் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுக்க உள்ளார்.