உனை நீங்கியே உயிர் கரைகிறேனே அத்தியாயம் – 1 – சுதா ரவி

 உனை நீங்கியே உயிர் கரைகிறேனே அத்தியாயம் – 1 – சுதா ரவி

அத்தியாயம் – 1

இருளைக் கிழித்துக் கொண்டு காரின் விளக்கொளியில் அடை மழையில் தன் கையில் இருந்த பையை தூக்கி வீசி விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த ஒருவனை  பல வித வாகனங்கள் நாலா புறமும் தேடிக் கொண்டிருந்தது. ஓடியவன் மனமோ இன்றுடன் என் ஆயுள் முடிந்தது ஆனால் தன் வாழ்வின் கடமையை முடிப்பதற்கான சிறிய சந்தர்ப்பத்தை தேடிக் கொண்டிருந்தான். அதற்கு ஏதும் வழி கிட்டுமோ என்ற எண்ணத்துடனே ஓடிக் கொண்டிருந்தான்.

ஓடியவனை தேடியவனோ தன்னை தவிர இவன் யார் கையில் சிக்க கூடாது என்று வெறியுடன் தேடலை தொடங்கி இருந்தான். தங்களின் ரகசியத்தை கண்டுபிடிக்க வந்தவனை தன் கையாலேயே முடிக்க வேண்டும் என்று தேடினான்.

இருவருக்கும் இடையில் நடந்த ஓட்டப்பந்தயம் ஒரு முடிவுக்கு வந்தது. மழையின் காரணமாக தெருவெங்கும் ஓடிய நீரினாலும் ஏற்கனவே அடியாட்களிடம் சிக்கி உடல் நைந்து போய் இருந்ததாலும் அவனால் தொடர்ந்து வேகமாக ஓட முடியவில்லை கால்கள் எந்த நேரம் தொய்ந்து விழுமோ என்ற நிலையில் பறந்து வந்து தாக்கிய உருட்டு கட்டை சரியாக காலில் தாக்க வலியில் அப்படியே மடங்கி விழுந்தான்.

அவனை தேடிக் கொண்டு வந்த வண்டிகள் அனைத்தும் க்ரீச்…என்று சத்தத்துடன் நிற்கவும் அதிலிருந்த ஆட்கள் மட மடவென்று குதித்து கீழே விழுந்து கிடந்தவனை சுற்றிக் கொண்டனர்.

அப்போது அங்கு வந்து நின்ற ஜாகுவார் காரில் இருந்து இறங்கிய ஆர்ஜேவை  கண்டதும் சுற்றி நின்ற அடியாட்கள் அவனுக்கு வழி விட்டு இருபுறமும் நின்று கொண்டனர். வந்தவன் நேரே சென்று கீழே கிடந்தவனை சட்டையை பற்றி தூக்கினான். இருவருவரின் கண்களிலும் ஒரு வித சீற்றம் இருந்தது.

ஆர்ஜேவின் கையில் இருந்து தன் சட்டையை உதறிக் கொண்டு நின்ற ஹரி அவனை பார்த்து நக்கலாக சிரித்தான். “என்ன, என்னை பிடிச்சிட்டா உன்னோட ரகசியங்கள் எல்லாம் வெளிவராதுன்னு நினைக்கிறியா?”

அவனது சிரிப்பில் கொதிநிலைக்குப் போனவன்  “நீ எதை எல்லாம் கண்டு பிடிச்சியோ அதை எதையுமே சொல்ல முடியாத நிலைக்கு போக போற, இது எங்க சாம்ராஜ்யம் எங்களை மீறி ஒரு ஈ எறும்பு கூட நுழைய முடியாது” என்று சொல்லி கீழே தள்ளினான்.

கீழே விழுந்தவன் மீண்டும் மெல்ல எழுந்து நின்று தன்னை சுற்றி உள்ள ஆட்களை ஒருதரம் பார்த்து விட்டு “ம்ம்ம்…உன்னை சுத்தி இத்தனை பாதுகாப்பு இருக்கும்போதே தனி ஒருவனா நான் உள்ளே நுழைஞ்சு உன்னை கண்டுபிடிச்சு இருக்கேன்.இன்னைக்கு நீ என்னை என்ன பண்ணினாலும் கண்டிப்பா நான் இல்லேன்னாலும்  இன்னொருத்தன் வருவான் அவனுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்”.

அதை கேட்டு கண்களில் கொலைவெறியுடன் நின்று கொண்டிருந்த ஆர்ஜே தன் ஆட்களில் முக்கியமானவனை கண்ணசைவில் அருகில் அழைத்தான்.

ஆர்ஜேவின் அருகில் வந்த பாண்டி “இவனை முடிச்சிடவா ரொம்பப் பேசுறானே” என்றான்.

உடனே அவனை கை காட்டி நிறுத்திவிட்டு “இவன் எனக்கு உயிரோட இருக்கணும். இவனோட நாக்கையும்,கை ,கால் எல்லாத்தையும் எடுத்திட்டு நம்ம இடத்துல  கொண்டு போடுங்க”.

அதை கேட்டு சிரித்த ஹரி “நீ இதை தான் பண்ணுவேன்னு தெரியும் ஆர்ஜே. உன்னுடைய ஆட்டம் அடங்க போற நாள் வெகு தூரத்தில இல்ல நியாபகம் வச்சுக்கோ!”

அவன் சொல்லி முடியும் முன் ஓங்கி அறை ஒன்றை கொடுத்த ஆர்ஜே “இவனை இழுத்திட்டு போய் நான் சொன்னதை செய்ங்க, இவன் பேச்சை மறுபடியும் நான் கேட்க கூடாது” என்று சொல்லி திரும்பி நடக்கத் தொடங்கினான்.

பாண்டியும் மற்ற ஆட்களும் சேர்ந்து ஹரியை தங்கள் கைகளில் இருந்த உருட்டு கட்டைகளால் தாக்க தொடங்கினர். கண்மண் தெரியாமல் நடந்த தாக்குதலில் உடலெங்கும் ரத்தமயமாகி போனது. அப்போது இருவர் கைகளை பிடித்துக் கொள்ள ஒருவன் வீச்சரிவாளுடன் வந்து ஹரியின் இரு கைகளையும் துண்டாக்கினான். மீண்டு மற்றிருவர் கால்களை பிடித்துக் கொள்ள கால்களும் வெட்டப்பட்டது.

காரினருகில் சென்று நின்று கொண்டிருந்த ஆர்ஜே அவனின் மரண ஓலத்தில் நிம்மதியாக ஒரு புன்சிரிப்பை சிந்திக் கொண்டே கையால் தன் முகத்தை மூடி இருந்த துணியை சரி செய்து கொண்டு காரினுள்ளே ஏறச் சென்றான். அப்போது ஹரி கைகளையும் இழந்து கால்களையும் இழந்து மண்ணில் வீழ்ந்து கிடக்கும் நிலையில் இருந்தபடியே “ஆர்ஜே நான் உன்னோட ரகசியத்தை எந்த அளவுக்கு கண்டு பிடிச்சேன்னு தெரிஞ்சுகிட்டு போ!” என்றான்.

அதை கேட்ட ஆர்ஜே நின்று நிதானமாக திரும்பி இடி இடிப்பது போல ஒரு சிரிப்பை உதிர்த்து…”இனி எந்த ரகசியமும் என்னை ஒன்னும் செய்ய முடியாது” என்றான்.

தலை உடைந்து ரத்தம் கன்னங்களில் வழிய நிமிர்ந்து அவனை  பார்த்து வலியுடன் ஒரு ஏளன  சிரிப்பை சிரித்து “உன்னுடைய பலம் எது பலவீனம் எதுன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன் ஆர்ஜே”.

“ஹாஹா என்னுடைய பலம், பலவீனம் இருக்கட்டும். இனி, உனக்கு பலவீனம் மட்டும் தான் என்று சொல்லி டேய் இவனை தூக்கிட்டு போங்கடா பேசியே கொல்றான்” என்று ஆணையிட்டு விட்டு கார் கதவை திறக்க சென்றான்.

“உத்ரா”

ஹரி அந்த பெயரை உச்சரித்த நேரம் காரின் கதவை திறந்து கொண்டிருந்த ஆர்ஜேவின் உடம்பில் ஒரு அதிர்வு தோன்றி மறைந்தது.

“உத்ரா”

மீண்டும் ஹரி உச்சரித்து முடிக்கும் முன் அவன் முன் வந்து நின்ற ஆர்ஜேவின் கண்கள் நெருப்பு துண்டங்களாக சிவந்திருந்தது. ஹரியின் முகத்தருகே குனிந்து அவன் தலைமுடியை ஒரு கையால் பிடித்து மற்றொரு கையை பாண்டியின் பக்கம் நீட்டினான். பாண்டி தன்னிடம் இருந்த பட்டாக்கத்தியை அவனிடம் கொடுக்க, அடுத்த நிமிடம் ஹரியின் தலை துண்டாக மழை நீரில் ரத்தவெள்ளத்துடன் கலந்து உருண்டோடிக் கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த ஆர்ஜேவின் ஆட்களுக்கே திகில் பிடித்து போய் நின்றனர். கொலையே தொழிலாக கொண்டவர்கள் கூட அந்த நிமிடம் ஆர்ஜேவின் செயலில் அதிர்ந்து போய் நின்றனர்.

தலை இல்லாத ஹரியின் சடலத்தை தன் காலால் ஓங்கி உதைத்து “யாருடைய பெயரை  சொல்ற? அவ என்னோட உயிர்.நான்  மட்டுமே அவ பெயரை உச்சரிக்கணும்”  என்று சொல்லி தன் கையிலிருந்த பட்டாகத்தியை தூக்கி போட்டுவிட்டு பித்து பிடித்தவன் போல மண்டியிட்டு அமர்ந்து   நெஞ்சில் கை வைத்து.வானத்தை நோக்கி “என் உத்ரா…என் உத்ரா…என் உயிர்…உடமை எல்லாமே அவள். அவள் விடும் மூச்சுக்காற்றை கூட நான் மட்டுமே சுவாசிக்கணும் , அவளை தீண்டிய காற்று என்னை மட்டுமே தீண்டனும்” என்று வெறி பிடித்தவன் போல கத்தினான்.

நடந்து கொண்டிருந்த சம்பவங்களை கண்டு அந்த வானமே நடுங்கி போய் கண்ணீரை சிந்திக் கொண்டிருந்தது.

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...