நீயெனதின்னுயிர் – 2 – ஷெண்பா
“செந்தளிர் குரூப் ஆஃப் கம்பெனீஸ்” பெயர்ப் பலகையைப் பார்த்து உரக்க வாசித்த ஜனனி, “வைஷு! எவ்வளவு பெரிய கேம்பஸ்டீ!” என்றாள் வியப்புடன்.
“இடம் பெரிசா இருக்கறதும், ஆள் வசதியாக இருக்கறதும் பெரிசு இல்லை. மனசு பெரிசா இருக்கணும்!” என்றாள் வைஷாலி.
“ச்சூச்சூ! தத்துவம்… வைஷாலி மாதாஜி!” எனப் பதிலுக்குக் கேலி செய்தாள் ஜனனி.
“போதும். வாயை மூடிகிட்டு வாடீ” என்றவள், உள்ளே செல்ல முயன்றாள்.
வாசலில் இருந்த காவலாளி, “மேடம்! யாரைப் பார்க்கணும்?” என்றபடி தடுக்க முயன்றான்.
“விக்ரம் சாரைப் பார்க்கணும்” என்றனர் இருவரும்.
“சார், இப்போதான் வெளியே கிளம்பினாங்க. அதோடு, அவரைப் பார்க்க அப்பாயின்மெண்ட் வாங்கியாச்சா?” எனக் கேட்டான் அவன்.
‘அடடா! இதை எப்படி மறந்தேன்?’ என நினைத்துக்கொண்டவள், “சாரி! பர்மிஷன் வாங்கலை; அவசரமாகப் பார்க்கணுமே… எப்போ அவரைப் பார்க்கலாம்?” என்றாள்.
“அப்பாயின்மெண்ட் வாங்கிட்டுப் போங்க. இல்லைனா, ஈவ்னிங் ஏழு மணிக்கு மேல் வாங்க.”
ஜனனியிடம் திரும்பியவள், “இதெல்லாம் ஆகாத வேலைடீ. எட்டு மணிக்குள் ஹாஸ்டலுக்குப் போய்ச் சேரணும். பேசாம, அவரோட வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாமா?” எனக் கேட்டாள் வைஷாலி.
“ஐயோ! வேணாம் வைஷு!” என அலறினாள் ஜனனி.
‘இத்தனைத் தூரம் வந்தும், எதுவும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே!’ என்ற சலிப்புடன், “ஹாஸ்டலுக்குப் போயிடலாமா ஜனனி?” என்று கேட்டாள்.
“காரியத்தைக் கெடுத்த போ! அங்கே போய், இருக்கற நாலு சுவத்தையும் எத்தனை நேரம்தான் பாக்கறது? அந்தக் கொடுமைக்குத் தானே, உன்கூட வந்தேன்!” -பதறினாள் ஜனனி.
‘தெரியும்டீ உன்னைப் பத்தி!’ என்பது போல் கிண்டலாகச் சிரித்தாள் வைஷாலி.
“சரி விடு. இதெல்லாம் சகஜம்! வேணா ஒண்ணு பண்ணலாம், இப்படியே சென்ட்ரல் மாலுக்குப் போய் ஒரு சுத்துச் சுத்திட்டு, கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டியது இருக்கில்ல, அதையும் வாங்கிக்கலாம்” என யோசனை சொன்னாள்.
வைஷாலிக்கும் அது சரியாகப்படவே இருவரும் கிளம்பி, புனே ரயில் நிலையத்தின் அருகிலிருந்த சென்ட்ரல் மாலுக்கு வந்தனர். இரண்டு மணிநேரம் மால் முழுவதையும் சுற்றி, தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டனர். கடையிலிருந்து வெளியில் வந்த வைஷாலியின் பார்வை, யாரையோ பார்த்துக் கையசைத்து விட்டு, லிஃப்டில் ஏறிய விக்ரமின் மீது பட்டது.
“ஏய் ஜனனி! அங்கே பாருடி…” எனப் பதட்டத்துடன் லிஃப்டைச் சுட்டிக்காட்ட, அதற்குள் மேலேறியிருந்த லிஃப்ட்டைப் பார்க்காத ஜனனி, நிதானமாக, “யாருடி?” என எட்டிப் பார்த்தாள்.
“போடீ இவளே! விக்ரம் சார்டீ!” என்றாள் வைஷு எரிச்சலுடன்.
“விக்ரம் சாரா… எங்கே… எங்கே?” என்றாள் அவள் அவசரமாக.
“உனக்காக, அவர் இங்கேயே நின்னுட்டு இருப்பாரா? வாடி சீக்கிரம். அவரை மிஸ் பண்ணிடப் போறோம்!” என்றவள், கீழே வந்து நின்ற லிஃப்டில் வேகமாக ஏறினாள்.
“வெளியே வந்தா, கொஞ்சம் சுத்தி நடப்பதையும் கவனி. கிரைண்டர் மாதிரி, கால் கிலோ பாப்கார்னை ஒண்ணா சாப்பிட்டா எப்படி விளங்கும்?” என்று தலையில் அடித்துக் கொண்டாள் வைஷாலி.
அத்தனைப் பெரிய மாலில் அவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் சுற்றும் முற்றும் தேடினர். “வைஷு! அதோ ஃபுட் கோர்ட்…” என்று பாப்கார்னை வாயில் அடைத்தபடியே சொன்ன ஜனனியை முறைத்தாள்.
“உன்னை… என்ன செய்தால் தகும்? நல்ல சான்சை மிஸ் பண்ணிட்டேனேன்னு தவிச்சிட்டு இருக்கேன். இதுல, நேரம் காலம் தெரியாம விளையாடுற!” என வாய் திட்டிக்கொண்டிருந்தாலும், கண்கள் அந்த இடத்தை அங்குலம் அங்குலமாக அலசியது.
வாயிலிருந்த பாப்கார்னை வேகமாக விழுங்கிய ஜனனி, “நீ என்கிட்ட அடிபடப் போற பாரு. விக்ரம் சார், ஃபுட் கோர்ட் உள்ளே போறார்ன்னு சொல்ல வந்தேன்” என்றாள் கோபத்துடன்.
“அப்படியா?” என்றவள், ஜனனியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நான்காவது தளத்திலிருந்த ஃபுட் கோர்ட்டை நோக்கி ஓடி, கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.
அங்கே கண்ட காட்சியில், “ஆஹ்!” என அதிர்ச்சி யுடன் விழிவிரித்து நோக்கியவள், பட்டெனத் திரும்பி அதே அதிர்வுடன் நின்றிருந்த ஜனனியை வெளியே இழுத்துக் கொண்டு வந்தவளுக்கு, நிதானமாக மூச்சுவிட சற்று நேரமானது. அங்கே நிற்கவே முடியாமல், வேகமாக மாலிலிருந்து வெளியே வந்தாள். வழியெல்லாம் புலம்பியபடி வந்த ஜனனியின் பேச்சைக் காதில் வாங்காமல், ஒருவழியாக ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தாள்.
“என்ன ஆயிற்று?’ என்று கேட்ட தோழிகளுக்கு, சுவாரசியமாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் ஜனனி.
“ஷ்! நம்ம வைஷு பயங்கர டென்ஷன்ல இருக்கா. போன வேலை முடியலை. ஆனா, சூப்பரா… ஒரு ரொமாண்டிக் லவ் சீன் பார்த்துட்டு வந்திருக்கோம்!” -கலகலவென நகைத்தாள்.
“ஏய்! என்னடி விஷயம்?” என்ற துளைத்த தோழிகளின் ஆர்வத்தை ரசித்தபடி, “ம்! எல்லாம் நம்ம விக்ரம் குமார் சௌத்ரி தான். முதல்ல, எனக்கும் பக்குன்னு தான் இருந்துச்சி! அப்புறம், ஹா ஹா ஹா…!” என்று தாங்க முடியாமல் சிரித்தாள்.
“ஹேய்! என்னது… என்னது…?” என நச்சரித்தனர் தோழிகள்.
“சொர்க்கம் மதுவிலே! சொக்கும் அழகிலே!” என்று ஜனனி பாட ஆரம்பிக்க, அடுத்த வரிகளை மற்றவர்கள் சேர்ந்து பாட, அங்கே கொல்லெனச் சிரிப்பொலி எழுந்தது.
கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்த வைஷாலி தலையைத் திருப்பி, “ஏய்! இல்லாததையெல்லாம் அளந்துவிடாதே” என்றாள் கடுப்புடன்.
“உனக்கேன் இத்தனைக் கோபம் வருது?” என்றாள் மாலினி.
“சில்லியாகப் பேசாதே!” என்றவள், தலையணையைத் தூக்கி மாலினியின் மீது வீசினாள்.
“ஹை… ஹை…! விக்ரம் சாரை சைட் அடிக்கிறியா?” என்ற ராகினியை முறைத்தாள்.
“விக்ரமை, நம்ம யாருக்கும் பர்சனலா தெரியாது. அவரைப் பத்தித் தெரியாமல், தப்பா பேசாதேன்னு சொன்னேன். அதில்லாம, அவங்க எப்படி இருந்தால் நமக்கென்ன? ஒருத்தரோட சொந்த விஷயத்தைப் பற்றிப் பேசவோ; கருத்து சொல்லவோ, நமக்கு எந்த அதிகாரமும், உரிமையும் கிடையாது” என்றாள் வைஷாலி.
விஷமப் புன்னகையுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட தோழிகள், “ஓகே… ஓகே… கூல் டவுன்! இனி, இப்படிப் பேசலை… போதுமா?” என்றனர்.
“ம்” எனத் தலையசைத்தவள், “நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்” என்றபடி அறையிலிருந்து வெளியேறினாள்.
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 | அத்தியாயம் – 11 |