நடிகர் விஜயகாந்த்தின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

 நடிகர் விஜயகாந்த்தின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

சென்னை தீவுத் திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த்தின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தன்னுடைய நினைவலைகளை அவர் பகிர்ந்துகொண்டார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை 9:30 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் உடல் இன்று பொதுமக்களின் பார்வைக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை 4 மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு  இன்று மாலை 4:45 மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த வேட்டையன் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை புறப்பட்டார். இதனைத்தொடர்ந்து தற்போது மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு அவர் தீவுத்திடல் பகுதிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நின்றவர் விஜயகாந்த்.
கேப்டன் என்பது பொருத்தமான பெயர். விஜயகாந்துடன் பழகினால் அவர் அன்புக்கு அடிமையாகி விடுவர். விஜயகாந்த் பற்றி பேச நிறைய உள்ளது. நட்புக்கு ஒரு இலக்கணம் விஜயகாந்த். ஒரு முறை அவரிடம் பழகிவிட்டால் வாழ்வில் அவரை மறக்கவே முடியாது. அவருக்காக உயிரையே கொடுக்க நிறைய நண்பர்கள் உள்ளனர்.

தவறு யார் செய்தாலும் நண்பர்கள், உறவினர்கள், ஊடகத்துறையினர் யாராக இருந்தாலும் கோபப்படுவார். ஆனால் யாருக்கும் அவர் மீது கோபம் வராது. ஏனென்றால் அவரது கோபத்தில் நியாயமான காரணம் இருக்கும். ஒரு அன்பு இருக்கும் அவரது கோபத்தில். அவர் ஒரு தைரியத்திற்கும், வீரத்திற்கும் இலக்கணமானவர். அவர் மக்களை மகிழ்வித்த கலைஞர்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...