திருவாதிரைக் களியும் தாளகக் குழம்பும்
திருவாதிரை ஸ்பெஷல்
திருவாதிரைக் களியும் தாளகக் குழம்பும்
மார்கழி திருவாதிரை
– ஆருத்ரா தரிசனம்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் விசேஷ தினமாகக் கொண்டாடப்படும். சிவபெருமானின் திருக்கோலங்களில் சிறப்புமிக்கது நடராஜர் திருவடிவம். ஐந்தொழில்களையும் ஒருங்கே புரிந்து பிரபஞ்சத்தை இயக்கும் நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அதில் மார்கழி திருவாதிரை அபிஷேகம் விசேஷமானது. ‘திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி’ என்பது பழமொழி. எனவே, மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை அன்று இந்தக் களியைச் செய்து ஆண்டவனுக்குப் படைத்து உண்பது வழக்கம். திருவாதிரைக் களியுடன், தாளகக் குழம்பையும் சேர்த்துப் படைத்து, பின்னர் களிக்கு இந்தக் குழம்பைத் தொட்டு சாப்பிடுவது சிறப்பு.
என்ன தேவை?
பச்சரிசி – ஒரு கப் பயத்தம்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன் துருவிய வெல்லம் – ஒன்றரை கப் துருவிய தேங்காய் – கால் கப் ஏலக்காய்தூள் – ஒரு டீஸ்பூன் நெய் – 3 டேபிள்ஸ்பூன் உடைத்த முந்திரித் துண்டுகள் – ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:- வெறும் வாணலியில் அரிசி, பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்து சற்று ஆறியதும் ரவை பதத்துக்கு உடைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் 3 கப் நீர்விட்டு ஒரு கொதிவந்ததும் வெல்லத் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொதிக்கவிடவும். 2 டேபிள்ஸ்பூன் நெய்யையும் சேர்க்கவும். உடைத்த ரவையைச் சேர்த்துக்கிளறி மூடி வைக்கவும். இடையிடையே திறந்து கிளறிவிடவும். களி வெந்ததும் ஏலக்காய்த்தூள் தூவி, ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரித் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கிளறிவிட்டு இறக்கவும்
. திருவாதிரை தாளகக் குழம்பு தேவையானவை:-
பறங்கிக்காய், வாழைக்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, கொத்தவரங்காய், பூசணிக்காய் (எல்லாவற்றையும் ஒரே அளவுள்ள துண்டுகளாக நறுக்கியது) – 2 கப் திக்கான புளிக்கரைசல் – அரை கப் மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப. வறுப்பதற்கு பச்சரிசி – 2 டேபிள்ஸ்பூன் கறுப்பு எள் – ஒரு டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 தேங்காய்த் துருவல் – கால் கப் பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன் கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன் மல்லி (தனியா) – 2 டீஸ்பூன் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் தாளிக்க எண்ணெய் – ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை – 8 இதழ்கள் கடுகு – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
செய்முறை: வெறும் வாணலியில் பச்சரிசியைச் சிவக்க வறுத்து தனியே வைக்கவும். பிறகு கறுப்பு எள்ளையும் வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மல்லி, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து இறுதியில் தேங்காய்த் துருவலையும் சேர்த்து இரண்டு புரட்டு புரட்டி இறக்கவும். மிக்ஸியில் வறுத்த பச்சரிசியைப் போட்டு சுற்றி, பிறகு எள் மற்ற அனைத்து வறுத்த பொருள்களையும் சேர்த்து நீர்விட்டு சற்றுக் கொரகொரப்பாக அரைக்கவும். அகன்ற பாத்திரத்தில் நறுக்கிய ஏழு காய்களையும் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அளவான நீர்விட்டு வேகவிடவும். காய்கள் பாதியளவு வெந்ததும் புளிக் கரைசலை அதில் சேர்த்துக் கொதிக்கவிடவும். எல்லாமுமாகச் சேர்ந்து கொதித்து காய்கள் வெந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் இரண்டு கொதிவிட்டு (விருப்பப்பட்டால் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்க்கலாம்) தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும். இறக்கியபின் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.