‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்..!

சென்னையில் 15 மண்டலங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மருத்துவ முகாம் திட்டத்தினை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் மாநகராட்சி, ஊரக பகுதிகள், குடிசை பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படைப்படையில், ”நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

மாவட்டம் தோறும் அரசு விடுமுறை இல்லாத நாட்களில், குறிப்பாக சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 4 மணிவரை இந்த திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், இருதய நோய்கள், மனநலன் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருமே இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மொத்தம் 1,256 முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னையில் 15 மண்டலங்களில் முகாம்கள் நடைபெறும். முகாம் நடக்கும் இடத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கூடிய நோய் கண்டறியும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பரிசோதனை கூடம் அங்கேயே அமைக்கப்பட்டு பிற்பகலுக்குள் வாட்ஸ்ஆப் மூலம் சோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். தேவைப்படுவோரை தொடர் சிகிச்சைக்குள் கொண்டு செல்லப்படுவார்கள்.

ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள், தொழிலாளர் ஆகியோரை பங்கேற்கச் செய்ய அந்தந்த துறைகள் நடவடிக்கை மேற்கொள்கின்றன. தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் 3 லட்சம் பேர் உள்ளனர். 20 தொழிலாளர் நல வாரியங்களில் 48.56 லட்சம் பேர் உள்ளனர். அமைப்புசாரா தொழிலில் உள்ளவர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கு உடல்நலன், நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வும் கொடுக்கப்படும்.

இந்த மாதம் முதல் வரும் பிப்ரவரி வரை முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் தேவைப்பட்டால் முகாம்கள் நடத்தப்படும். திட்டத்தின் முதல் கட்டத்தில் குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!