திருப்பதி லட்டுக்கு வயசு 310 ஆம்.. 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் தயாரிக்கப்படும் இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பக்தர்களுக்கு பூந்தியாக இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தது 1803 முதல் லட்டு வடிவில் விலைக்கு விற்கும் நடைமுறை அமலானது. அப்போது அதன் விலை காலணா மட்டுமே.
இந்திய அரசுச் சட்டம் (Government of India Act 1858) இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம், இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம்: கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1857 சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு, கம்பெனிக்கு இந்தியா மீதான அதிகாரத்தைக் கையாள்வது கடினமாக இருந்தது. எனவே, பிரிட்டிஷ் அரசு நேரடியாக இந்தியாவை நிர்வகிக்கத் தீர்மானித்தது. பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி தொடங்கியது. இனி, இந்தியாவின் நிர்வாகம் நேரடியாக இங்கிலாந்து ராணியின் கீழ் வந்தது. வைஸ்ராய் பதவி உருவாக்கம். கவர்னர் ஜெனரல் பதவிக்கு ‘வைஸ்ராய்’ என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டது. வைஸ்ராய் என்பவர் ராணியின் நேரடிப் பிரதிநிதியாகச் செயல்படுவார். இதன் விளைவாக, இந்தியாவின் நிர்வாகம் முழுமையாக லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இது இந்தியாவிற்கு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்தது.
தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம் (National Coloring Book Day), முன்பு குழந்தைகளுக்கான பொழுதுபோக்காக இருந்த வண்ணம் தீட்டுதல், இப்போது பெரியவர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம், உளவியல் வல்லுநர்கள் இதை மன ஆரோக்கியத்திற்கு உகந்த ஒரு செயலாகப் பரிந்துரைக்கிறார்கள். வண்ணம் தீட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்: மன அழுத்தம் குறையும்: வண்ணம் தீட்டுவது ஒருவகை தியானத்திற்கு சமமானது. இது மனதை ஒருமுகப்படுத்தி, தேவையற்ற சிந்தனைகளைத் தள்ளிவைக்க உதவுகிறது. இதனால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைகிறது. மூளைக்கு ஓய்வு: ஒரு வேலையில் இருந்து சிறிது நேரம் விலகி, வண்ணம் தீட்டும் போது மூளைக்கு ஒருவித ஓய்வு கிடைக்கிறது. இது சிந்தனைத் திறனை மேம்படுத்துவதோடு, புதிய விஷயங்களைச் செய்ய உற்சாகத்தையும் தருகிறது. கலைத்திறன் மேம்படும்: வண்ணம் தீட்டுதல், கலை ஆர்வத்தை வளர்க்க உதவுகிறது. இது பெரியவர்களுக்கும் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இந்தக் காரணங்களால், வண்ணம் தீட்டுவது ஒரு பொழுதுபோக்கிலிருந்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பழக்கமாக மாறியுள்ளது. இந்த நாளில் நாம் அனைவரும் ஒரு வண்ணப் புத்தகத்தையும், பென்சில்களையும் எடுத்துக்கொண்டு, நம் மனதிற்கு அமைதியைத் தேடி ஒரு பயணம் மேற்கொள்ளலாம்.
கிரகாம் பெல் காலமான தினமின்று! அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஐரோப்பிய நாடான ஸ்காட்லாண்டில், 1847 மார்ச் 3ம் தேதி பிறந்தார். இவர் தந்தை, அலெக்சாண்டர் மெல்வில்லி பெல், கண், உதடு அசைவுகளை வைத்து, மற்றவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ளும் திறன் படைத்தவர். அதே திறனுடன் வளர்ந்த கிரகாம் பெல், 8 வயதிலேயே பியானோ வாசிப்பதில் வல்லவராக திகழ்ந்தார். படிப்பில் ஆர்வம் இன்றி, ஒலி அலைகளை பற்றி ஆராய்ச்சி செய்வதில் நாட்டம் செலுத்தினார். காது கேளாதோருக்கு, கண், கை அசைவு மூலம் வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்தார். அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக் கழகம், பேச்சு அங்கவியல் பேராசிரியராக, இவரை பணியில் அமர்த்தியது. பியானோவில் ஒலி எழுப்பி, அந்த ஓசையை, குறிப்பிட்ட தொலைவுக்கு, மின்சாரம் மூலம் அனுப்பினார் பெல்; 18 வயதில், பேச்சை அனுப்பும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தான் கண்டுபிடித்த தொலைபேசியை, ஒரு கண்காட்சியில் வைத்தார். பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு பார்த்து பயன்படுத்திய பின், அது உலக அளவில் பிரபலம் அடைந்தது. தொலைபேசி, பார்வையற்றோர் படிக்க வசதியாக, ‘பிரெய்லி’ உட்பட பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு அர்ப்பணித்த கிரகாம் பெல் இதே ஆகஸ்ட் 2 (1922 )ல் காலமானார்.
நாஞ்சில் கி. மனோகரன் நினைவு நாள், ஆகஸ்ட் 2, 2000 . இவர் மூன்று முறை தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் , நான்கு முறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், எம்.ஜி.ஆர். (அ.தி.மு.க.) அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும்,மு.கருணாநிதி (தி.மு.க.) அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் துணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். 1972 ஆம் ஆண்டில் எம் ஜி .இராமசந்திரன் (எம்.ஜி.ஆர்.) தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க.வைத் தொடங்கிய பொழுது, அக்கழகத்தின் பொதுச் செயலாளராக நாஞ்சில் மனோகரன் பதவி வகித்தார். 1980 ஆம் ஆண்டில் நாஞ்சில் மனோகரன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, தி.மு.க.வில் மீண்டும் இணைந்தார். பின்னர், அக்கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வகித்தார்.
பிரபல தமிழிசை அறிஞருமான, சித்த மருத்துவ வல்லுவரான ஆபிரகாம் பண்டிதர் அவர்களின் பிறந்த தினம் இன்று இவர் திருநெல்வேலி மாவட்டம், சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில் பிறந்தவர். இளமையில் தமிழாசிரியராகப் பணியாற்றி பின் அவரது பாட்டனார் தமிழ் மருத்துவர் என்பதால் தமிழ் மருத்துவத்தில் தன்னை அர்ப்பணித்தார். சுருளிமலைக்குச் சென்று மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அங்கு கருணானந்த சுவாமிகளைச் சந்தித்துப் பின்னர் முழு நேரமும் சித்த மருத்துவ பணியாற்றினார். இவரது ‘ கோரோசனை மாத்திரை’ மிகப் பிரபலம். தஞ்சையில் “பண்டிதர் தோட்டம்’ என்ற மூலிகை தோட்டத்தை நூறு ஏக்கர் பரப்பளவில் துவங்கி, மருத்துவம் பார்த்தார். அந்நாளைய ஆங்கில கவர்னர் SIR Arthur Lawley இவரது மருத்துவப் பணியை பெரிதும் பாராட்டினார். இசை ஆர்வம், ஆராய்ச்சியின் ஈடுபாட்டினால் ” கருணாம்ப்ரத சாகரம்” என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டார். முதல் உலக இசை மாநாட்டைத் தஞ்சையில் நடத்தியவர்.
தமிழ்ப் பேரறிஞர் தனிநாயகம் அடிகளார் பிறந்த தினம்~! ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். தமிழ், ஆங்கிலம் தவிர எசுப்பானியம், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் கூடியவரும், பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தவர் தனிநாயகம் அடிகளார். தனிநாயகம் அடிகளாரின் பெயரைக் கேட்கின்றபோதெல்லாம் நமக்கு நினைவில் வருவது தமிழ்க்கலாசாரம் என்னும் முத்திங்கள் ஏடும் 1968ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடுமே என்பதில் ஐயமில்லை. தமிழ்க் கலாசாரம் என்னும் தீன் சுவையை அந்நிய மொழியாகிய ஆங்கில மொழிமூலம் தமிழர்களது கலை இலக்கியம் பண்பாடு என்பவற்றை உலகிற்கு பறைசாற்றியவர் பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்து ஒரு பன்மொழிப் புலவராகத் திகழ்ந்து வந்த அறிஞர் தனிநாயகம் அடிகளார் பிறந்த தினமின்று.
