சர்வதேச அளவில் பிரபலமான உலக தலைவர்கள் வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடம்..!| நா.சதீஸ்குமார்
சர்வதேச அளவில் பிரபலமாக திகழும் உலகத் தலைவர்கள் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘மார்னிங் கன்சல்ட்’ ஆய்வு நிறுவனத்தின் கணக்கெடுப்பில் இந்த முடிவு கிடைத்துள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 76 சதவீதம் பேர் பிரதமர் மோடி சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாகத் திகழ்வதாகவும் அவரது தலைமைப் பண்பு சிறப்பாக உள்ளதாகவும் கருத்துக் கூறியுள்ளனர்.
மோடிக்கு அடுத்ததாக மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரே மானுவல் லோபஸ் ஓப்ரடார் 66 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஸ்விட்சர்லாந்து அதிபர் அலெய்ன் பெர்செட் (58 சதவீதம்), பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டசில்வா (49 சதவீதம்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இப்பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40 சதவீத ஆதரவுடன் 7-ஆவது இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் உள்ளவர்களில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவின் செயல்பாடுகள் குறித்து அதிகபட்சமாக 58 சதவீதம் பேர் எதிர்மறையாக கருத்துக் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹசாத் பூனாவாலா கூறியதாவது, “இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் உள்நாட்டில் மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதைக் காட்டியது. இப்போதைய ஆய்வு முடிவு சர்வதேச அளவிலும் சிறந்த தலைவராக மோடி தொடர்வதை உறுதி செய்துள்ளது.
பிரதமர் மோடி என்றால் நம்பகத்தன்மை மிக்கவர், உறுதியான தலைமைப் பண்பு மிக்க நபர் என்பதை சர்வதேச அளவில் பல நாடுகளில் உள்ளவர்கள் உணர்ந்துள்ளனர்.
சர்வதேச அளவில் கரோனா போன்ற பிரச்னைகள் ஏற்பட்டபோது பல நாடுகளின் தலைவர்களால் மக்களின் ஆதரவைத் தக்க வைக்க முடியவில்லை.
ஆனால், பிரதமர் மோடி அந்த இக்கட்டான சூழ்நிலையை திறமையாகக் கையாண்டு மக்களின் மனதில் தனக்கான இடத்தை மேலும் உறுதிப்படுத்தினார். நமது பிரதமர் சர்வதேச அளவில் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்”என்றார்.