உருவானது மிக்ஜாம் புயல்..! | நா.சதீஸ்குமார்
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைகிறது. மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. சென்னையின் விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டிய பலத்த மழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற உள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கு திசையில் 340 கி.மீ தொலைவில் உள்ளது. மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று பிற்பகல் புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதால் அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலு பெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 4ம் தேதி முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 5ம் தேதி முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் உருவாகியுள்ளதான் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய தினம் வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
5ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளைய தினம் டிசம்பர் 4ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மிக்ஜாம் புயல் உருவாகியுள்ளதன் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடதமிழக கடலோரப்பகுதிகளில் இன்று மாலை முதல் மணிக்கு சூறாவளி காற்று 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், 4ம் தேதி மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று இன்று காலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், இன்று மாலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, நாளை மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும்.
வட ஆந்திர கடலோரப் பகுதிளில் நாளை மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 5ம் தேதி மாலை முதல் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், புயல் கரையை கடந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என சென்னை மாநகர காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.