ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா..! | நா.சதீஸ்குமார்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
ஆனால் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற 3வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும், தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டி20 ஆட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 36 ரன்கள் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றியுள்ளது.