சென்னை வங்கி உட்பட 3 வங்கிகளுக்கு 10 கோடி அபராதம் விதித்த RBI..! | நா.சதீஸ்குமார்

 சென்னை வங்கி உட்பட 3 வங்கிகளுக்கு 10 கோடி அபராதம் விதித்த RBI..! | நா.சதீஸ்குமார்

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஒழுங்குமுறை விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து வருகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வரும் வேளையில் கடந்த 2 மாதங்களாக தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் என வித்தியாசம் இல்லாமல் விதிமுறைகளை கடைப்பிடிக்காத வங்கிகள் மீது அபராதம் விதித்து வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக கூட்டுறவு வங்கிகளை கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் கண்காணித்து பல வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்து மக்களின் டெபாசிட் பணத்தை காப்பாற்றியது. தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரையில் பல கூட்டுறவு வங்கிகள் மீது ஆர்பிஐ நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் ஆர்பிஐ தற்போது தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளை கண்காணிக்க துவங்கியுள்ளது. இப்படி வெள்ளிக்கிழமை வெளியான ஆர்பிஐ அறிவிப்பில் 3 முன்னணி வங்கிகளுக்கு சுமார் 10.34 கோடி ரூபாய் அபராதம் விதித்து அனைத்து வங்கி நிர்வாகங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வங்கி ஒழுங்குமுறை விதிகளை கடைப்பிடிக்காத காரணத்தால் சிட்டிபேங்க், பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீயஸ் வங்கி ஆகியவற்றின் மீது மொத்தமாக 10.34 கோடி ரூபாய் அபராதம் விதித்தாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமாக சிட்டிபேங்க் மீதி அதிகப்படியாக 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. டெபாசிட் செய்யும் மக்களுக்கு திட்டம் குறித்து போதிய விளக்கம் கொடுக்க தவறியது, நிதியியல் சேவைகளை வெளி நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் செய்யும் போது சரியான நடைமுறையை பின்பற்றாத காரணத்தால் ஆர்பிஐ 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இதை தொடர்ந்து பேங்க் ஆப் பரோடா மீது 4.34 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வங்கி அதிகப்படியான வெளிப்பாடு கொண்ட வர்த்தகத்திற்கு சென்டரல் ரெபாசிட்டரி உருவாக்குவதில் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் 4.34 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கடைசியாக சென்னையை தலைமையிடமாக கொண்டு இந்தியா முழுவதும் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மீது 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வங்கி கடன் மற்றும் அட்வான்ஸ் சேவை அளிப்பதில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத காரணத்தால் இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 3 வங்கிகள் மீதும் ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றாத காரணத்தால் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது, இதனால் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...