கரை புரண்டோடுதே கனா – 17 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 17
“நானும் உங்களோடு வரவா மாமா..?” பனித்துளிகள் விரவியிருக்கும் செண்பகமலராய் தன் முன் அந்த அதிகாலையில் வந்து நின்ற மருமகளை மறுக்கும் எண்ணம் சிறிதளவும் சதுரகிரிக்கு வரவில்லை..
அவர் பார்வை மருமகளின் பின்னால் பார்க்க, உள்ளறை கதவின் பின் மறைந்திருந்த மனோரமாவின் உருவம் தென்பட்டது.. அவரறியாமல் பெருமூச்சொன்று வெளியேறியது..
“வாம்மா.. போகலாம்..” மருமகளுக்கு தலையசைத்து முன்னால் நடந்தார்.. அம்மாவிற்கு கட்டை விரல் உயர்த்திக் காண்பித்து விட்டு தாய்மாமனுடன் நடந்தாள் ஆராத்யா..
“தினமும் இவ்வளவு காலையிலேயே எழுந்துக்கிறீங்களே மாமா.. அதெப்படி முடியுது உங்களுக்கு..?” பேசியபடியே மாமனும், மருமகளுமாக தோப்பிற்குள் நடந்தனர்..
“அஞ்சு வயசில ஆரம்பிச்ச பழக்கம்.. என் உடம்பு தரையில சாயுற வரைக்கும் மாறாது…
“ப்ச் என்ன மாமா இது சின்ன விபரம் கேட்டதுக்கு இப்படி பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு..” சட்டென தாயாய் மாறி அதட்டிய தங்கையின் மகள் சதுரகிரியினுள் பாச விதைகளை விதைத்தாள்..
“என்ன உங்கம்மா மாமான் கூடப் பேசிப் பழகி அவர் மனசை மாத்துன்னு சொல்லி அனுப்பிச்சாளாக்கும்..” குத்தல் போல் கேட்ட மாமனின் முகத்தை உற்றுப் பார்த்தாள் ஆராத்யா..
“ஏன் மாமா அதில் எதுவும் தப்பு இருக்கிறதா..? சிங்கம் போல் இரண்டு தாய் மாமன்கள் இருந்தும் இதுவரை மாமன்கள் பாசம் தெரியாமல் வளர்ந்த பொண்ணு நான்.. எனக்கு விட்டுப் போன சொந்தங்களின் பிரியங்களெல்லாம் கிடைக்கனுமின்னு அம்மா நினைப்பதில் எதுவும் தப்பு இருக்கிறதா மாமா..?”
ஆராத்யாவின் சொற்கள் குறி தவறாமல் சதுரகிரியின் நடு நெஞ்சை தாக்க, அவர் பதில் சொல்லாமல் தலைகுனிந்தபடி நடந்தார்..
“உன் அம்மாவை எங்கள் கண்ணின் மணிபோல் பொத்தி பொத்தி வளர்த்தோம்.. எவனோ ஒரு பயலுக்காக எங்கள் அத்தனை பேரையும் உதறிவிட்டு போய்விட்டாள்..”
“அதுதான் திரும்ப வந்துவிட்டார்களே மாமா.. போனசாக உங்களுக்கு நான் வேறு.. இது போதாதா..? நீங்கள் சிறுத்தை மாதிரி மாமா.. இப்படி கம்பீரமாக நிமிர்ந்து வராமல் இப்படியா தலை குனிந்து வருவீங்க.. ம்.. கமான் மாமா தலையை நிமிர்ந்து பாருங்கள்..” சொன்னதோடு மாமாவின் நாடி பிடித்து தலையை உயர்த்தினாள்..
“ம்.. இப்படி முகத்தை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி நடந்து வாங்க பார்க்கலாம்.. அந்த அண்ணனைத்தான் என் அம்மாவிற்கு பிடிக்கும்.. அந்த மாமாவைத்தான் எனக்கும் பிடிக்கும்..” உற்சாகமாக பேசியபடி திரும்பிய ஆராத்யா திகைத்தாள்.. அவர்கள் முன் ஆர்யன் நின்றிருந்தான்..
ஆர்யனின் பார்வை ஆராத்யாவை கொத்தி குதறி கூறு போடும் எண்ணத்தில் இருந்தது.. அவன் அப்போதுதான் தூங்கி எழுந்து மடித்துக் கட்டிய கைலி, கையில்லா பனியனுடன் வாயில் டூத் ப்ரஷ்ஷை வைத்து தேய்த்தபடி தோப்பிற்குள் வந்திருந்தான்.. ஆராத்யா எழுந்து குளித்து தனது தலை முடியை காய வைத்து பம்மென விரித்து விட்டிருந்தாள்.. அது அவளது தோளை தொட்டு புரண்டது.. பளீர் மஞ்சளில் பாதம் புரளும் ஒரு பாவாடையும், இலைப்பச்சையில் உடலை மூடிய ஒரு காட்டன் டாப்பும் அணிந்திருந்தாள்.. அதிகாலைப் பனியில் நனைந்த அற்புத பூஞ்செடி போல் தெரிந்தாள்..
இத்தனை புத்துணர்ச்சியுடன், துறுதுறு பேச்சுடன் தன் தாய்மாமாவை புகழ்ந்தபடி வந்தவளின் பேச்சுக்கள் நிச்சயம் அந்த மாமானின் மனதில் பூச்சொறியும் என்பதனை ஆராத்யாவை விட ஆர்யன் நன்கு அறிவான்..
எப்படி..? என தன்னிடம் புருவம் உயர்த்தியவளை நொட் நொட்டென உச்சந்தலையில் கொட்டும் ஆவலை அடக்கியவன்.. “அப்பா கள் இறக்குறவங்க வந்திருக்காங்க.. மரமேறிட்டாங்க.. நீங்க பக்கத்தில் போய் நின்னீங்கன்னா சுத்தமாக இறக்குவாங்க..” என்றான்..
“ம்.. இதோ போறேன்பா.. ஆரா நீ வீட்டுக்கு போடா..” தலை வருடிய தாய்மாமனுக்கு கையசைத்து விடை கொடுத்தாள் ஆராத்யா..
சதுரகிரி மரங்களிடையே மறைந்த மறுநொடி அவள் கை வலிக்கும்படி பற்றப்பட்டு பின்னால் திருப்ப மடக்கப்பட்டது..
“ஏன்டி உன்கிட்ட நான் என்ன சொன்னேன்..? தாத்தா, அப்பாவுக்கெல்லாம் குல்லா போடுற வேலையை விட்டுட்டு சொர்ணாவோட கல்யாணத்தை மட்டும் அட்டெண்ட் பண்ணிட்டு அம்மாவும், மகளும் ஊரை விட்டு ஓடுங்கன்னு சொன்னேன்ல.. நான் சொன்னது ஏதாவது உன் மண்டையில் ஏறுச்சா..? திரும்ப.. திரும்ப தப்பு பண்ணிக்கிட்டே இருக்கிறாயே..”
“ஏய் ரவுடி கையை விடுடா.. ஸ்..ஆ.. வலிக்குது..” கத்தினாள் ஆராத்யா..
“முதல்ல நான் சொல்றதைக் கேட்பேன்னு சொல்லுடி..” கையை மேலும் முறுக்கினான்..
“நான் ஏன்டா ஊரை விட்டு போகனும்.. இது என் தாத்தா ஊரு.. இது என் பாட்டி வீடு.. இங்கே உங்கள் எல்லோருக்கும் என்ன உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை எனக்கும் இருக்கிறது.. நான் போகமாட்டேன்..” ஆராத்யா பேசப் பேச ஆர்யன் அவள் கையை அதிகமாக முறுக்கினான்..
“ஷ்.. ஆ.. விடுடா எதற்கு இந்த வெறி..? காலையிலேயே நல்லா புல்லா தண்ணியடிச்சிட்டியா..?”
ஆர்யன் சட்டென அவள் கையை விட்டான்.. ஒரு சுண்டலில் கையை பற்றி அவளைத் திருப்பினான்..
“என்னடி உளர்ற..?”
“கள் இறக்குறாங்கன்னு சொன்னாயே.. காலங்கார்த்தாலேயே ஆரம்பிச்சிட்டியா..? சென்னைல பியர், இங்கே வேற வழி இல்லையே கள்தானே..”
“அடியே நாக்கை அறுக்கனும்டி உன்னை..” ஆர்யன் அவள் தலைமுடியை பிடித்து உலுக்கினான்.
“உனக்கு எவ்வளவு திமிர்டா..? தப்பெல்லாம் நீ செய்துட்டு என்னை பிடிச்சு உலுக்குகிறாய்..?” பதிலுக்கு பதிலாக ஆர்யனின் தலைமுடியை பிடிக்க எட்டி கையை கொண்டு போனாள்.
உயரம் பற்றாமல் நுணிக்காலில் நின்று அவன் உச்சந்தலையை பிடிக்க முயல, ஆர்யன் அதற்கு அனுமதிக்காமல் நகர, ஆராத்யா திரும்ப முயற்சிக்க.. ஆர்யனுக்கு இப்போது இது ஒரு விளையாட்டாகிப் போனது.. அவன் ஆராத்யாவின் கையில் சிக்காமல் இன்னமும் தலையை உயர்த்திக் கொண்டே போக, ஆராத்யா ஒட்ட வெட்டப்பட்டிருந்த அவன் தலைமுடியை கொத்தாகப் பிடிக்க முடியாமல் நழுவிய கைகளை, பிடிக்கு கிடைத்த அவன் தோள்களை பொத் பொத்தென மொத்த பயன்படுத்தினாள்.. ஆர்யனும் தன் பங்கிற்கு அவள் தலையை உலுக்க, ஒரு சுவாரஸ்ய மோதல் அங்கே..
“ஆர்யா என்னடா பண்ற..?” கேட்டபடி வந்தவள் மனோரமா.. அவள் குரலில் மெல்லிய அதிர்ச்சி..
மனோரமாவை பார்த்ததும் ஆர்யன் தன் பிடியை விட்டு விட்டான்.. அவன் திமிறல் குறைந்ததும் எட்டி அவன் தலை முடியை பிடிக்க முயற்சித்து முடியாமல் அவன் தலையை பிடித்து ஆராத்யா ஆட்ட, மனோரமா அவள் கைகளில் அடித்தாள்..
“ஆரா என்னடி பண்ற..? விடு அவனை..”
“நான் ஏன் விடனும் மம்மி.. அவன் என் முடியை பிடித்து ஆட்டுகிறான்.. இவனை..” ஆராத்யா பற்களை கடித்தபடி அவன் மேல் பாய தயாராக, ஒரு வேகத்துடன் அவளை பிடித்து தள்ளினான் ஆர்யன்..
“ஆர்யா ஏன்டா அவளை இப்படி தள்ளுகிறாய்..?” மனோரமா அவன் கைகளை பிடிக்க அவளை உதறினான்..
சற்று முன் குறும்பும், பரவசமுமாக இருந்த அவன் முகம் இப்போது இறுக்கமும், முறைப்புமாக இருந்தது..
“ஆர்யா.. உனக்கு அவளைப் பிடிக்கவில்லையா..? இவ்வளவு வெறுப்பா..?” மனோரமாவின் தடுமாற்றக் கேள்விக்கு பதில் சொல்லாது ஆர்யன் திரும்பி நடந்து போய்விட்டான்..
“ஏய் அவனுக்கு கோபமே வராது.. ரொம்ப அமைதியான பையன்.. நீ என்னடி செய்தாய்..?” தாயின் கேள்வி ஆராத்யாவிற்கு கோபமூட்டியது..
“வேண்டாம் ரமா, என் வாயைக் கிளறாதே.. நான் ஏதாவது பேசிடுவேன்.. அவனைப் பற்றி உனக்கு தெரியாது.”
“எனக்கு.. அவனை தெரியாதா..? என்னை விட அவனை தெரிஞ்சவங்க யாரும் கிடையாதுடி..”
“ஐய்யோ ரமா திரும்பவும் சொல்றேன்.. உனக்கு அவனைத் தெரியாது..”
“நீ முதல்ல அவனுக்கு மரியாதை கொடுத்து நடந்துக்கடி..”
அவ்வளவுதான் ஆராத்யாவிற்குள் எரிமலை வெடித்தது..
“நா.. நான் அவனுக்கு மரியாதை கொடுக்கனுமா..? உன் அண்ணன் மகன் உனக்கு உசத்தின்னா, நீ அவனைத் தூக்கி இடுப்பில் வச்சுக்கோ.. என்கிட்ட அவன் புகழ் பாடிக்கிட்டு வந்தாய் நான் மனுசியாகவே இருக்க மாட்டேன்..” விரலாட்டி தாயை எச்சரித்து விட்டு நடந்த ஆராத்யாவின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது..
இவனை.. ஏதாவது செய்தாகனுமே, இவனுக்கு சரியான நோஸ்கட் கொடுக்கனுமே.. என்ன செய்வது..? மிகவும் மூளையை கசக்கி ஒரு வழியை தேர்ந்தெடுத்தாள்..
மறுநாள் குலதெய்வம் கோவிலுக்கு முதல் பத்திரிக்கை வைக்க கிளம்ப, பத்திரிக்கைகளை ஆர்யனின் கையால் எடுத்து பூஜை அறையில் வைக்க சொன்னார் பரமசிவம்.. ஆராத்யா இடையில் வந்து அவன் கையிலிருந்த பத்திரிக்கை பண்டலை பிடுங்கினாள்..
“நான் வைக்கிறேன் தாத்தா..”
“ஏய் கொடு அதை..” ஆர்யன் திரும்ப அவளிடம் பிடுங்க முயல, அவள் தடுக்க.
“இந்த வீட்டில் எந்த நல்ல காரியமென்றாலும் ஆர்யன் கையால்தான் ஆரம்பிப்போம்..” பரமசிவம் குரல் கொடுத்தார்..
“நானும் உங்க பேத்தி தான் தாத்தா.. எனக்கும் அந்த உரிமை உண்டு.. இன்று இந்த நல்ல காரியத்தை நான்தான் தொடங்கி வைக்க போகிறேன்..”
“ஆரா சும்மா இரு பத்திரிக்கையை ஆர்யாகிட்ட கொடு..” மனோரமா அதட்டினாள்..
“முடியாது மம்மி.. இருபது வருடமாக உன்னை இங்கே எல்லோரும் ஒதுக்கி வைத்தார்களே.. அந்த அநியாயத்திற்கு எனக்கு நியாயம் வேண்டும்.. தாத்தா இதுபோல் நல்ல காரியங்களையெல்லாம் முன்பு என் அம்மாவை வைத்துத்தானே செய்து வந்தீர்கள்.. அவர்களுக்கு பிறகு அந்த உரிமை எனக்குத்தான் வேண்டும்.. நான் தான் எல்லாம் செய்வேன்..”
ஆராத்யாவின் பிடிவாதத்தில் சதுரகிரியின் முகத்தில் மெல்லிய புன்னகை கீற்று.. மலையரசன் பற்கள் தெரிய லேசாக சிரிக்கவே தொடங்கினான்..
நான் சீரியசாக பேசிட்டிருக்கும் போது எதற்கு சிரிக்கனும்..? ஆராத்யா முகத்தை முறைப்பாகவே வைத்துக் கொண்டாள்.. ஏனென்றால் ஆர்யனின் முகமும் முறைத்தாற் போல் தானிருந்தது..
சதுரகிரி “அப்பா சின்னப்பிள்ளை போகட்டும்பா.. விட்டுடுடலாம்..” பரமசிவத்திடம் மெலிதாய் முணுமுணுத்தார்..
பரமசிவம் நடக்கட்டும் என்பது போல் கையசைக்க ஆர்யன் இழுத்துக் கொண்டிருந்த தன் பிடியை விட்டான்.. அவனோட பயில்வான் போல் மோதலுடன் பார்சலை இழுத்து பிடித்து நின்றிருந்த ஆராத்யா இந்த திடீர் விடுதலில் தடுமாறி விழப் பார்த்து பாதங்களை ஊன்றி சமாளித்து நின்றாள்.. அவனை முறைத்தாள்..
படபடவென கைதட்டல் சத்தம் கேட்க, ஆர்யன் திகைத்து திரும்பி பார்த்தான்.. அரவிந்த், தமிழரசன், சொர்ணா, ஸ்ரீமதி, தேன்மொழி எல்லோரும் வரிசையாக நின்று கைதட்டிக் கொண்டிருந்தனர்.. ஆர்யன் திரும்பிப் பார்க்கவும் வேகமாக தங்கள் உற்சாகப்படுத்தலை நிறுத்திக் கொண்டனர்..
ஆராத்யா வாகை சூடிய மகாராணி போன்ற பெருமித பார்வையுடன் பூஜையறைக்குள் போய் பத்திரிக்கைகளை சாமி பாதத்தில் வைத்து, விளக்கேற்றி ஆராதனை காட்டினாள்.. லேசாக ஆர்யனை திரும்பிப் பார்த்து புருவம் உயர்த்த அவன் கோப முகத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்..
போயேன், தனக்குள் உதடு சுளித்தாள்.. திரும்ப பார்க்கும் போது மனோரமாவை காணவில்லை.. எல்லோரும் பத்திரிக்கைகளை பார்ப்பதில் ஆர்வமாக இருக்க, ஆராத்யா வீட்டின் பின்புறம் வந்தாள்..
அங்கே மனோரமாவும் ஆர்யனும் பேசிக் கொண்டிருந்தனர்.. இல்லை மனோரமா மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தாள்.. ஆர்யன் முறைப்பாக நின்றிருந்தான்.. தாய் அண்ணன் மகனை சமாதானப்படுத்துவதை ஆராத்யா உணர்ந்தாள்..
கொஞ்சம் கூட இளக்கமின்றி நின்றிருந்தவனின் முகத்தை பார்த்தவளுக்கு கோபம் வந்தது.. இவனுக்கென்ன இவ்வளவு திமிர்..? அடுத்து அவனை எப்படி டீஸ் பண்ணுவது என யோசிக்க ஆரம்பித்தாள்..
-(கனா தொடரும்…)
முந்தையபகுதி – 16 | அடுத்தபகுதி – 18