கரை புரண்டோடுதே கனா – 16 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 16
“எங்கே கிளம்பிக் கொண்டிருக்கிறாய்..?” சந்தேகம் அப்பட்டமாய் தெரிந்தது ஆர்யனிடம்..
“எங்கேயும் போகவில்லையே.. சும்மா அப்படியே தோப்புக்குள்..” அவளது சமாளிப்புகளை அலட்சியம் செய்து அருகே வந்து அவள் பின்னால் மறைத்து வைத்திருந்த கையை பற்றினான்..
“எதை மறைக்கிறாய்..?” வலுக்கட்டாயமாக போனை பிடுங்கி பார்த்தான்..
ஆராத்யா பார்த்து அப்படியே வைத்திருந்த அவளது போட்டோக்கள் கேலரியில் இருந்தன,
“சீ மனுசனா நீ..? இப்படி அநியாயம் செய்கிறாயே..” அவன் போனை பிடுங்கும் போது தன் கையில் கீறிய அவன் நகக்கீறலின் எரிச்சலை தடவியபடி அவனை வெறித்தாள்..
அவளது வெறுப்பை ஆர்யன் அப்போது கவனிக்கவில்லை.. அவன் போனில் போட்டோக்களை மிக சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்..
“நீயா ஆரா இது..? ரொம்ப க்யூட்டாக இருக்கிறாய்டா.. தூக்கி கொஞ்சனும் போல இருக்கு..” கண்களை போனிலிருந்து நகற்றாமல் போட்டோக்களை மீண்டும் மீண்டும் நகர்த்தி பார்த்தபடியிருந்தான்..
முன்பு போட்டோ ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது தாத்தாவின் முகத்தில் இருந்ததே ஒரு பரவச புன்னகை.. அது இப்போது இவன் முகத்தில்.. ஆனால் ஏன்.. எப்படி.. அது எப்படி சரி வரும்..? யோசித்தபடி அவன் முகத்தை பார்த்திருந்த ஆராத்யா, அவனது தூக்கிக் கொஞ்சனுமென்ற பதத்தில் முகம் சிவந்தாள்..
இது ஏன் இப்படி பேசித் தொலைகிறான்..? போடா.. பெரிய உத்தமன் மாதிரித்தான் தலையை சிலுப்பிக் கொண்டாள்..
“இதை என்ன செய்யனும்..?”
வேண்டாம் ஆரா பதில் சொல்லாதே என்ற அவளது மூளையின் எச்சரிக்கைய தாண்டி உதடுகள் அசைந்து விட்டன..
“பிரிண்ட் போடலாம்னு நினைத்தேன்..”
“ஓ.. போடலாமே.. வா ஸ்டுடியோவிற்கு நானே கூட்டிப் போகிறேன்..” அனுசரனையான அவன் கைநீட்டலை மறுக்க மனம் வரவில்லை. ஆனாலும் நீண்ட அவன் கையை பிடித்துக் கொள்ளாமலேயே அவன் பின் நடந்தாள்..
இவனை விட்டால் இந்த ஊரில் ஸ்டுடியோவை எங்கே தேடிக் கண்டுபிடிக்க முடியும்.. என நினைத்துக் கொண்டாள்..
ஸ்டூடியோவில் “பெஸ்ட் போட்டோஸ் மட்டும் பிரிண்ட் போடுங்க..” என்றுவிட்டு அவன் செலக்ட் செய்த பெஸ்ட் போட்டோஸ் போன் கேலரி முழுவதுமாக இருந்தது..
“எதற்கு இத்தனை போட்டோஸ்..?” மறுத்தவளை “இருக்கட்டும் ஆரா.. தனி ஆல்பமாக போட்டுக் கொள்ளலாம்..” என முடித்தான்..
என் போட்டோஸ் ஆல்பம் இவனுக்கு எதற்காம்.. ஒரு போட்டோ கூட இவனுக்குத் தர போவதில்லை முடிவு செய்து கொண்டவள் எந்த போட்டோவை தாத்தாவின் ஆல்பத்தில் சேர்க்கலாமென்ற யோசனையில் இறங்கினாள்..
“ஒரு மணி நேரம் கழித்து வாங்க சார்..” ஸ்டுடியோக்காரர் சொல்ல..
“பக்கத்தில் எங்காவது போய்விட்டு வரலாமா ஆரா..?” ஆர்யனின் கேள்விக்கு மறுப்பாய் பார்த்தாள்.
“தொட்டிப்பாலம் போகலாம் ஆரா.. பார்க்க வேண்டிய இடம்..”
“அதிலெல்லாம் எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை.. வீட்டிற்கே போகலாம்..”
“ம்ஹீம்.. நீ வந்து பார், நிச்சயம் ஆச்சரியப்படுவாய்.. ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு தண்ணீரைக் கொண்டு போயிருக்கிறார்கள்.. நீ கேள்விப்பட்டிருக்கிறாயா..?”
“அது எப்படி..?” ஆராத்யா விழி விரித்தாள்..
“வா காட்டுகிறேன்..” சுவாதீனமாய் அவள் கையோடு கை கோர்த்துப் போய் பைக்கில் ஏற்றினான்..
ஆர்யன் சொன்னது உண்மைதான்.. இது நிச்சயம் பார்க்க வேண்டிய இடம்தான் என்று தோன்றியது ஆராத்யாவிற்கு, அந்த தொட்டிப் பாலத்திற்கு போன பிறகு..
“இந்த மலையிலிருந்து அந்த மலைக்கு தண்ணீர் இதோ இந்த தொட்டி வழியாக கொண்டு போகப்படுகிறது.. இதனால் வறண்டு போய் கிடந்த அந்த மலைப்பகுதி செழித்து வளமாக மாறிவிட்டது.. சிறப்பாக விவசாயம் நடக்கிறது..”
அவர்கள் நடந்து கொண்டிருக்கும் பாலத்திற்கு இணையாக மற்றொரு பாலம் போன்ற அமைப்பு.. அதில் நீர் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது.. அந்தப் பாலமும், தொட்டியும் நூறு அடி உயரத்தில் இருந்தன.. இரு மலைகளுக்கிடையே இணைப்பாக இருந்தன..
“இரு மலைகளையும் இணைக்கும் தொட்டில் போல் இருப்பதால் இதற்கு தொட்டிப் பாலம் என்ற பெயருமுண்டு.. இது ஆசியாவின் அதிசயத்தில் ஒன்று..”
ஆர்யாவின் கூற்றில் தவறேதும் இருப்பது போல் ஆராத்யாவிற்கு தெரியவில்லை.. மனிதர்கள் நடந்து செல்லும் நீள நடைபாதை, அதனருகேயே தொட்டிக்குள் ஓடிக் கொண்டிருக்கும் நீர்.. உண்மையிலேயே இது அற்புதமென்றுதான் அவளுக்கும் தோன்றியது..
“இதை சாப்பிட்டு பார் ஆரா..” ஆர்யன் கொடுத்த பலாப்பழங்கள் வித்தியாச ருசியுடன் அதிக இனிப்பாய் இருந்தன..
“வெரி ஸ்வீட்..” ஆராத்யா நாவை உச்சுக் கொட்டினாள்..
“இது வருக்கை பலாப்பழங்கள்.. இந்த ஏரியாவில் மட்டும் தான் கிடைக்கும்..”
இப்படி ஆர்யனுடன் பேசியபடி காற்று அள்ளிக்கொண்டு போகும் உயரத்தில், அருகில் நீர் வாய்க்கால் சலசலத்து உடன் வர, நா தித்திப்பாய் கரைய ஒரு மலையிருந்து இன்னொரு மலைக்கு போகும் இந்தப் பயணம் ஆராத்யாவின் அடிமனதில் இதயம் தைத்த அம்பாய் தங்கிவிட்டது.. கனியான்பாறை மலைக்கும், கூட்டு வாயுப்பாறை மலைக்குமிடையே உள்ள தூரம் ஆயிரத்தி இருநூறிலிருந்து பல ஆயிரம் அடிகளாக நீண்டுவிட அப்போது ஆராத்யா விரும்பினாள்..
அடுத்த மலையை தொட்டுவிட்டு திரும்ப நடந்து வந்தனர்.. போகும் போது அணையை பற்றிய பேச்சுக்களில் மட்டுமே இருந்த ஆர்யன் வரும் போது அவளைத் திரும்பி திரும்பி பார்த்தபடி வந்தான்.. ஆராத்யாவின் பார்வை அருகே ஓடிக் கொண்டிருந்த தொட்டி நீருக்குள் மட்டுமே இருந்தது..
“உங்களுடைய அந்த ஹெல்மெட் ஐடியா உண்மையாக சொல்வதானால் தி பெஸ்ட் ஆரா..”
பிறகு ஏன் அதை ரிஜக்ட் செய்தானோ.. ஓ இவனது எண்ணம் வேறு அல்லவா.. திடுமென குளிர்ந்து கொண்டிருந்த சுற்றுப்புறம் வெப்பம் கூடியது அவளுக்கு.. தொட்டி நீர் பகுதியிலிருந்து மறு பக்க பால.. பகுதிக்கு மாறிக் கொண்டு மேலிருந்து கீழே பார்க்க ஆரம்பித்தாள்..
“ஆனால் அதனை செயலாக்குவதில் பராக்டிகலாக நிறைய சிக்கல்கள் இருக்கின்றன ஆரா.. பயணத்தின் போது ஹெல்மெட் போட்டுக் கொள்வதை அறுபது சதவிகித மக்கள் விரும்புவதில்லை.. தலைக்குள் வியர்க்கும், ஹேர் ஸ்டைல் கலையும், சுமந்து கொண்டு திரிய வேண்டும்.. என்பன போன்ற பல காரணங்கள்.. இப்படி இருக்கும் போது ஹெல்மெட்டை போட்டால்தான் வண்டி ஸ்டார்ட் ஆகும் என்ற கான்செப்ட் எந்த அளவு ரீச் ஆகுமென்று தெரியவில்லை.. இதனால் வண்டிகளின் விற்பனை பாதிக்கப்படுமோ என்ற கவலையும் எனக்கிருக்கிறது.. எனக்கு ஆறு மாதம் டைம் கொடு ஆரா.. நான் இது விசயம் யோசித்து சில ஸ்டெப்ஸ் எடுத்து பிறகு சொல்கிறேன்.. முதலில் நம் கம்பெனியில் ஒரு பைக்கில் மட்டும் இதனை பொருத்திப் பார்க்கலாம்.. அதன் ரிசல்ட்டை பார்த்து விட்டு, பிறகு மற்ற வண்டிகளிலும்..”
பேசிக் கொண்டே போனவனை கையுயர்த்தி நிறுத்தினாள்.. “நாங்க எங்க ஹெல்மெட்டை எப்போது உங்க கம்பெனிக்கு தருவதாக சொன்னோம்..? ஏதாவது நல்ல பெரிய கம்பெனிக்கு எங்க ஹெல்மெட்i தருவதாக முடிவு செய்திருக்கிறோம்.. உங்களைப் போல் சின்ன.. சில்லறை ஆட்களெல்லாம் ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பாருங்கள்..” அமர்த்தலாக இடுப்பில் கை வைத்து பேசினாள்..
“என்ன சொன்னாய்..? சில்லறை ஆட்களா..?” சூடாக வந்து விழுந்தது ஆர்யனின் வார்த்தைகள்..
அப்படித்தான் அவனை சொல்ல நினைத்தாள்… நா நுனி வரை வந்து விட்ட வார்த்தைகளை கஷ்டப்பட்டு விழுங்கியிருந்தாள்..
“அப்படியா சொன்னேன்.. இருக்கலாம்..” அலட்சிய பாவனை காட்டினாள்..
“எந்தப் பெரிய கம்பெனி உன் டப்பா ஹெல்மெட்டை ஒத்துக்கிறான்னு நான் பார்க்கிறேன்டி..”
“பார்க்கலாம்டா..” பதில் சவால் விட்டு விட்டு பாலத்தை விட்டு வெளியேறியவள், ஸ்டுடியோவில் கொடுத்த போட்டோ கவரை அவனுக்கு முன் தான் பறித்துக் கொண்டாள்.. கவர் நுனியை மடித்து ஒரு போட்டோ கூட அவன் கண்ணில் படாமல் பத்திரப்படுத்தி எடுத்துக் கொண்டு வீடு வந்தாள்..
தனது போட்டோக்களை ஆல்பத்தில் சேர்த்து அதனை தாத்தாவின் கையில் சேர்ப்பித்தாள்.. அதனை புரட்டிப் பார்த்த பரமசிவத்தின் கண்கள் கசிந்து பளபளத்தது..
“இங்கே பாருங்கள் தாத்தா.. இதெல்லாம் உங்க பேரப்பிள்ளைகள்.. ஆர்யன், அரவிந்த், தமிழரசன், சொர்ணா, ஸ்ரீமதி, தேன்மொழி அப்புறம் இது நானு ஆராத்யா.. உங்க பேரப் பிள்ளைகளிலேயே ஸ்மார்ட் அன்ட் இன்டெலிஜென்ட் இந்த ஆராத்யாதான் தெரியுமா..?”
பரமசிவத்தின் கைகள் தன் பேரப் பிள்ளைகளின் போட்டோக்களை வருடியது.. “என் செல்லங்களா..” முணுமுணுத்தார்..
“என்ன தாத்தா சொன்னீர்கள்..? செல்லங்களாவா..? செல்வங்களா..? உங்களுக்கு செல்லங்கள் முக்கியமா..? செல்வங்கள் முக்கியமா..?”
பேத்தியை நிமிர்ந்து முறைத்து பார்த்த தாத்தாவின் கண்கள் தளும்பி வழிந்தது.. அதைக் கண்டு கொள்ளாமல் மீண்டும் ஆல்பத்திற்கு பார்வையை திருப்பிய ஆராத்யா அதில் ஒரு போட்டோவை சுட்டிக் காட்டினாள்..
“இந்தக் குட்டிப் பொண்ணு யாரு தாத்தா..?”
அந்த போட்டோவை பார்த்த பரமசிவத்தின் இதழ்கள் மெல்ல புன்னகைத்தன..
“ஏழுருக்கு வாய் பேசுறியே.. நீயே கண்டுபிடி..” தாத்தாவின் பதில் ஆராத்யாவிற்கு உற்சாகமூட்ட.. “நிச்சயம் கண்டுபிடிப்பேன்..” தாத்தா கையிலிருந்த ஆல்பத்தை மீண்டும் பிடுங்கிக் கொண்டு அதனைப் பார்த்தபடி நடந்தாள்..
-(கனா தொடரும்…)
முந்தையபகுதி – 15 | அடுத்தபகுதி – 17