கேரளாவில் மாவோயிஸ்டுகள்- போலீசார் இடையே கடும் துப்பாக்கி சண்டை..!
கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் மாநில போலீசாருக்கும் இடையே நேற்று இரவு கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலின் போது 2 மாவோயிஸ்டுகள் சிக்கினர். தப்பி ஓடிய மேலும் 3 தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மாவோயிஸ்டுகள் செல்வாக்கு உள்ள பகுதிகளில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. மாவோயிஸ்டுகளின் கடும் தாக்குதல்களை மீறி சுமார் 70%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. மேலும் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் துணை ராணுவத்தினர் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் கேரளா மாநில வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் தலப்புழா காவல்நிலை எல்லைகுட்பட்ட வனப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இந்த மோதல் சுமார் 30 நிமிடங்கள் நீடித்தன. வயநாடு வனப்பகுதியில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே 4-வது முறையாக துப்பாக்கி சண்டை நிகழ்ந்துள்ளது.
இந்த மோதலின் போது 2 மாவோயிஸ்டு தீவிரவாதிகள் சிக்கினர். மேலும் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய 3 மாவோயிஸ்டுகளை தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கேரளா போலீசார் தெரிவித்தனர்.
கோழிக்கோட்டில் மாவோயிஸ்டுகளுக்கு உதவிய சிலரை முதலில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்தான் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பது உறுதியானது. இதனையடுத்து கோழிக்கோட்டில் சிக்கிய நபர்களுடன் வயநாடு சென்று போலீசார் மாவோயிஸ்டுகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போதுதான் மாவோயிஸ்டுகளுடன் பயங்கர மோதல் ஏற்பட்டது என விவரிக்கின்றனர் கேரளா போலீசார். தப்பி ஓடிய மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டு வனப்பகுதிக்குள் தப்பி இருக்கக் கூடும் என்பதால் தமிழக போலீசாருக்கும் கேரளா போலீசார் தகவல் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.