தமிழ்நாடு அரசின் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்..!

 தமிழ்நாடு அரசின் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்..!

தமிழ்நாடு முழுவதும் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு துவங்கியுள்ளது. இத்திட்டத்தின் சிறப்புகள் என்ன? இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்…

இன்றைய காலக்கட்டத்தில் ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்வதன் காரணமாக பலர் உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். தினசரி 45 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் உடற்பயிற்சி செய்வதற்கென பிரத்யேக இடம் இல்லாததால் பூங்கா, கடற்கரை மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை நடைபயிற்சிக்காக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மக்களைத் தேடி மருத்துவம், சிறுநீரக பாதுகாப்பு திட்டம், கலைஞரின் வரும் முன் காப்போம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தபட்டு வருகிறது. அந்த வகையில், மக்கள் பாதுகாப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள, ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற உடற்பயிற்சி வழித்தலங்களை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. 2023ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் அரசு தெரிவித்தது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் இப்பணிகளுக்கான இடத்தினை தேர்வு செய்து அதனை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற இந்த திட்டத்தை சென்னையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சுமார் 8 கி.மீ தூரம் கொண்ட இந்த நடைபாதை, பெசன்ட்நகர் முத்துலட்சுமி பார்க்கில் தொடங்கி வேளாங்கண்ணி ஆலயம் வழியாக ஆஸ்கார்ட் எதிரில் யூடர்ன் செய்து மீண்டும் அதே இடத்தில் நிறைவு பெறுகிறது.

மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபயிற்சி மேற்கொள்ள வருபவர்களுக்கு, அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த சுகாதார அலுவலர்கள் மூலம், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதனை செய்ய சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.மேலும், குடிநீர் மற்றும் பழச்சாறு (லெமன் ஜூஸ்) வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தலங்களை மாவட்டத்தில் ஏதோ ஒரு பகுதியில் மட்டும் அமைக்காமல், பல்வேறு இடங்களில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...