7ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள் செஞ்சி தளவானூரில் கண்டுபிடிப்பு..!
செஞ்சி தளவானூரில் 7 ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவ சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் வெடால் விஜயன் இணைந்து செஞ்சி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது , செஞ்சியை அடுத்த தளவானூர் கிராமத்தில் பஞ்சபாண்டவர் மலையின் பின்புறம் உள்ள வயல்வெளியில் சில சிற்பங்கள் இருப்பதாக வந்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர்.
தளவானூர் – திருவம்பட்டு சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி பஞ்ச பாண்டவர் மலையின் பின்புறம் அமைந்துள்ள ஏழூர் அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் வேப்பமரத்தின் அடியில் பலகை கல்லில் புடைப்பாக ஒரு சிற்பம் காணப்பட்டது.
சுமார் 4 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக உள்ள அச்சிற்பம் தவ்வை என்று கண்டறியப்பட்டது. தலையைத் தடித்த ஜடாபாரம் அலங்கரிக்க , வட்டமான முகத்தில் , தடித்த உதடுகளும் இரு செவிகளில் மகர குண்டலமும் அணிந்து இடது மற்றும் வலது கையை தொடையின் அருகே அமர்ந்த பீடத்தின் மீது வைத்தும் கால்களை நன்றாகப் பரப்பி அழகிய தாமரை மலர் மீது பாதங்களை வைத்து நேராக நிமிர்ந்து அமர்ந்துள்ளார்.
கழுத்தில் ஆபரணங்களும் , கைகளில் கைவளை மற்றும் தோள்வளையும் அணிந்து , இடையில் ஆடையும் அழகாக காட்டப்பட்டிருந்தாலும் மார்பு கச்சை அணியாமல் காட்சி தருகிறது. தவ்வை தாயின் வலது புறம் மகன் மாந்தியும் , இடது புறம் மகள் மாந்தியும் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர்.அதே போல் தவ்வையின் ஆயுதமான துடைப்பம் மாந்தன் அருகிலும் , இடது புறம் மாந்தியின் தலைக்கு மேல் உடைந்தும் காணப்படுகிறது. அதே போல் தவ்வையின் தோள் அருகே இருபுறமும் தாமரை மொட்டுக்கள் காட்சி தருகிறது. மேலும் தவ்வையின் வலது பக்கம் தாமரையின் அருகே பணிப்பெண் குழந்தையுடன் காட்சி தருகிறது.
இந்த சிற்ப அமைதியையும் கலைபாணியும் வைத்து இது 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்திய தவ்வை என்று உறுதி செய்யலாம். சிறிது தூரம் தள்ளி வயலின் நடுவே இரு பலகை சிற்பங்களை ஆய்வு செய்தபொழுது . அவை கொற்றவை மற்றும் முருகன் சிற்பம் என்பது கண்டறியப்பட்டது. சுமார் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாகக் கொற்றவை வடிக்கப்பட்டுள்ளது.
தடித்த கரண்ட மகுடம் தலையை அலங்கரிக்க , அதன் உச்சியில் நீள் உருளையான கொண்டையுடன் வட்டமான முகத்தில் தடித்த உதடுகளும் இரு செவிகளில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருகிறார். கழுத்தில் பதக்கத்துடன் கூடிய மாலை அணிந்து, தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான கச்சை அணிந்து காட்சியளிக்கிறார்.
எட்டு கரங்களில் தனது மேல் வலது கரத்தில் பிரயோக சக்கரத்தை ஏந்தி ஏனைய வலது கரங்கள் முறையே வாள் , கபாலம் ஏந்திய நிலையில் கீழ் வலக்கரம் இடை மீது ஊரு முத்திரையிலும் , மேல் இடது கரத்தில் சங்கும் ஏனைய கைகள் முறையே வில் மற்றும் கேடயம் ஏந்திய நிலையில் கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளது..
எருமை தலையின் மீது சமபங்கத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நின்றவாறு காட்சி தரும் இக்கொற்றவையின் ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தும் இதன் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இவ்வூரில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திய குடவரை மற்றும் கல்வெட்டு இருப்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது . அவன் காலத்திய சிற்ப அமைதி மற்றும் அணிகலன்களின் தாக்கம் இக்கொற்றவை சிற்பத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது.
இதே போல் இக்கொற்றவை சிற்பத்தின் அருகிலே அளவில் சிறியதாகத் தாமரை மீது நின்ற கோலத்தில் தனது ஒருகையில் தாமரை மொட்டையும் மற்றொரு கையில் வேலையும் ஏந்திய நிலையில் முருகன் சிற்பம் ஒன்றும் உள்ளது. இம்முருகன் சிற்பமும் அதே கால கட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம்.
சுமார் 1400 வருடம் பழமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்த இச்சிற்பங்கள் இன்றும் வயல்வெளியின் மத்தியில் வெட்ட வெளியில் வளமையைக் காக்கும் தெய்வமாக அருள்பாலித்து வருவது சிறப்பாகும்.